
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (03.01.2026) நடைபெற்ற 9வது சித்த தின விழா நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆற்றிய உரை பின்வருமாறு.-
சித்த மருத்துவத்தின் முதல் சித்தரான அகத்திய முனிவரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 9வது சித்தா தினத்தின் கருப்பொருள் - ‘உலக ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம்' சித்த மருத்துவமானது, நோய்த்தடுப்பு, வாழ்க்கை ஒழுங்குமுறை, உணவு ஒழுக்கம், நச்சு நீக்கம், புத்துணர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு
சித்த மருத்துவத்தின் மகிமையை கோவிட்-19 நோய்த்தொற்று காலங்களில் நாம் மட்டுமல்லாது இந்த உலகமே அறிந்து கொண்டது. கோவிட் பெருந்தொற்று தீவிரமாக பரவிய போது தமிழ்நாட்டில் கபசுர குடிநீரின் பங்கு மகத்தானது.
இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நாடுகளிலும் கபசுர குடிநீர் சூரணம் நம்மால் அனுப்பப்பட்டு அரும்பணியை ஆற்றியது. இந்த அடிப்படையிலேதான், தற்போது நம் எல்லோரையும் கவலை கொள்ள வைக்கும் தொற்றா நோய்க்கூட்டங்களை எளிதாக சித்த மருத்துவத்தின் மூலம் எதிர்கொள்ள முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டி பல முன்னெடுப்புகளை செய்துள்ளார்கள். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா 17.10.2025 அன்று சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தவிரவும், பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், அரசு தலைமை மருத்துவமனைகள் ஆகியவற்றில் சித்த மருத்துவப் பிரிவுகளை ஏற்படுத்தி, பொது மக்கள் அனைவரும் சித்த மருத்துவப் பயன்களை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் மக்களின் இல்லங்களுக்கே சென்று சித்த மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் சித்தா மற்றும் இந்தியமுறை மருத்துவம் என்ற சிறப்பு மருத்துவ சேவையும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக அச்சுருத்திவரும் புற்றுநோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சை பிரிவு சென்னை அறிஞர் அண்ணா இந்திய மருத்துவ மனையிலும், பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவமனையிலும் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த சித்தா தினத்தில், அறிவியல் ஆராய்ச்சி, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் கல்விச் சிறப்பு மூலம் சித்த மருத்துவத்தை வலுப்படுத்துவது நமது கூட்டுப் பொறுப்பை நினைவூட்டுகிறது. சித்த மருத்துவப் பயன்பாட்டினை, உலக அளவில் கொண்டு செல்வதில் தேசிய சித்த நிறுவனம் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து முன்னோடிகளாக உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 55 ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் 7 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 48 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் 2025-2026 கல்வியாண்டில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பில் 638 மாணவர்கள் அரசு கல்லூரிகளிலும், 3,853 மாணவர்கள் தனியார் கல்லூரிகளிலும் பயின்று வருகின்றனர்.
திராவிட மாடல் ஆட்சி
ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஐந்து மருத்துவப் பிரிவுகளில் திட்டம் மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சித்த மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்தவமனை;

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை ஆகிய இடங்களில் அலோபதி மருத்துவத்துடன் இணைந்த 1,653 ஆயுஷ் மருத்துவ சிகிச்சை பிரிவுகள் உள்ளன. இதில், சித்த மருத்துவத்திற்கென 770 நிரந்தரப் பிரிவுகள், 275 தேசிய ஊரக நலவாழ்வு திட்ட பிரிவுகள், 32 ஆயுஷ் நலமையங்கள், 12 பழங்குடியினர் நடமாடும் மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
மேலும், 105 ஆயுர்வேதா, 67 யுனானி, 110 ஓமியோபதி, 279 யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மற்றும் 3 ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ் உள்மருத்துவப் பயனாளர் சிகிச்சைக்காக 1,760 படுக்கை வசதிகள் உள்ளன. 2024-25ம் ஆண்டில் மொத்தமாக வெளிமருத்துவப் பயனாளர்கள் 3.65 கோடி மற்றும் தினசரி பயனாளிகள் 1 இலட்சம்.
கடந்த 4 ஆண்டுகளில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் MRB மூலம் உதவி மருத்துவ அலுவலர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட நிரந்தர பணியிடங்களுக்கு 439 நபர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 565 நபர்கள் என மொத்தம் 1,004 நபர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து ஆயுஷ் மருத்துவமனைகளுக்கும் தேவையான தரமான மருந்துகளை தடையின்றி வழங்கிட டாம்கால் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படுகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.








