
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவரைப்பேட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தன்னுடைய பரப்புரை வாகனத்தில் நின்று எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பழனிசாமியின் வலப்புறத்தில் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமனும், இடப்புறத்தில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரும் அருகருகே நின்றிருந்தனர்.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை வாகனத்தில் உரையாற்றி கொண்டிருந்த போது, அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் உடல்நல குறைவு காரணமாக மயங்கினார். ஆனால் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் மனிதாபிமானமின்றி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசி கொண்டிருந்தார்.
தனது அருகில் நின்று கொண்டிருந்த மாவட்ட செயலாளர் மயங்கியதையே கண்டுகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில், மயங்கி கீழே அமர்ந்த மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமனை அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா கைத்தாங்கலாக எழுப்பி பேருந்திற்குள் அனுப்பி வைத்தார்.
சிறிது நேரம் பேருந்தில் ஓய்வெடுத்த மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், உரையை முடித்து புறப்படும் போது எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வீர வாள் பரிசளித்தார். தமக்கு அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர் மயங்கியதையே கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமியின் செயல் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.






