
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.12.2025) கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை.
உங்களால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகியிருக்கக்கூடிய நான் உங்கள் ஸ்டாலினாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
கல்வராயன் மலையின் கம்பீரமும், கோமுகி அணை, மணிமுக்தா அணைகளின் எழிலும், பெரியார், சிறுக்கலூர், மேகம் அருவிகளின் குளிர்ச்சியும், திருநறுங்கொண்டை போன்ற தலங்களின் ஆன்மீகமும் நிறைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.
உங்கள் மாவட்டத்திற்கான புதிய ஆட்சியர் கட்டட திறப்பு விழா; உள்ளிட்ட 341 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2 ஆயிரத்து 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 386 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 2 இலட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு ஆயிரத்து 45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என்று இந்த விழா ஒரு முப்பெரும் விழாவாக, மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செயல்வீரர் எ.வ.வேலு அவர்களை பாராட்டுகிறேன்;
வாழ்த்துகிறேன். எந்த வேலையை வழங்கினாலும், அதை 100 சதவிகிதமல்ல, அதை 200 சதவிகிதம் சிறப்பாக செய்யக்கூடியவர். அவரைப் பொறுத்தவரைக்கும், ஒரு கண்ணில் வெண்ணெய் – மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்று வேறுபாடு காட்டாமல், அவருடைய திருவண்ணாமலை மாவட்டத்தைப் போலவே, இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சியிலும் அக்கறை காட்டக் கூடியவர்.
அவருக்கு துணையாக இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் – அதேபோல, சிறப்பாக செயல்படக்கூடிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இ.ஆ.ப., அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு அதிகாரிகள் ஆகிய அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
திராவிட மாடல் அரசு என்பது சாதனைத் திட்டங்களின் அரசு. சிலர் வாயிலேயே வடை சுடுகிறார்களே, அவர்களைப் போல இந்த அரசு அல்ல. மக்களுக்கு நேரடியாக பயன் தரக்கூடிய திட்டங்களை நிறைவேற்றி, மக்களை நேரடியாக சந்திக்கின்ற திறன்கொண்ட அரசு, இந்த அரசு.
நம்முடைய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் நிறைய இருக்கின்றது. சில முக்கியமான திட்டங்களை மட்டும் தொகுதிவாரியாக தலைப்புச் செய்தியாக சொல்ல விரும்புகிறேன்.
கள்ளக்குறிச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - நாகலூரில், அங்கன்வாடி கட்டடம் - பிரிதிவி-மங்கலத்தில், சுற்றுலா மாளிகை - சித்தலூர் கிராமத்தில், மணிமுக்தாறு குறுக்கே உயர்மட்ட பாலம், ரிஷிவந்தியம் தொகுதியில், ரிஷிவந்தியம் கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் - புதிதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் - பிள்ளையார் குப்பம் - பரமநத்தம் வரை குடிநீர் இணைப்பு வசதி – கள்ளிப்பாடியில், அங்கன்வாடி மையக் கட்டடம் - மணலூர்பேட்டை பேரூராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டடம் – மூங்கில்துறைப்பட்டு – வாளவச்சனூர் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்.

அடுத்து, சங்கராபுரம் தொகுதியில், சங்கராபுரம், சின்னசேலம் அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டிடங்கள் - மணியார் பாளையம், பொய்க்குணம் ஆகிய ஊர்களில் அங்கன்வாடி மையம், வெள்ளிமலை - கொட்டப்புத்தூர் இடையே சாலைப்பணிகள் - சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் - ரங்கநாதபுரம் கிராமத்தில்;
கிராம அறிவு மையம் - கச்சிராயபாளையம் மற்றும் கீழ்நிலவூரில், பொது சுகாதார வளாகம் - சின்னசேலம், மூக்கனூர், வெள்ளிமலை, காட்டவனஞ்சூர், மூயம்பாடி, பரங்கிநத்தம், வாரம், மதூர் ஆகிய கிராமங்களில், துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் மற்றும் கல்படை - பரங்கிநத்தம் இடையே கல்படை ஆற்றின் குறுக்கே, பொய்க்குணம் ஜவுளிக்குப்பம் சாலையில், உயர்மட்ட பாலம்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில், உளுந்தூர்பேட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆலங்குப்பம், கொத்தனூர் ஊராட்சியில், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. களமருதூரில், துணை மின் நிலையம் - அரசூர், செங்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு – திருப்பெயர் தக்கா, நத்தாமூர், திருநாவலூர், சிக்காடு கிராமங்களில், கால்நடை மருந்தகம் - இவ்வளவும் செய்து முடித்த பணிகள். மக்களுடைய பயன்பாட்டிற்கு சென்றிருக்கக்கூடிய பணிகள்.
இவை தவிர, தற்போது பணிகள் நடைபெற்று விரைவில் தொடங்கப்படவுள்ள திட்டங்களை நான் சொல்ல வேண்டும். அதையும் சுருக்கமாக சொல்கிறேன்.
கள்ளக்குறிச்சியில், புதிய புறநகர் பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை சாலை நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிறைவடைகின்ற நிலையில் இருக்கக்கூடிய, சாங்கியம் - கூவனூர் இடையே உயர்மட்ட பாலம்!
திருக்கோவிலூர் – ஆசனூர் நான்கு வழிச்சாலை – திருக்கோவிலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தக்கூடிய பணி – சின்னசேலம் பேரூராட்சியில், புதிய பேருந்து நிலையம் – உளுந்தூர்பேட்டையில், புதிய பேருந்து நிலையம் – புதிய சிப்காட் வளாகம் – மீன் மார்க்கெட் – பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கருங்கல் மண்டபம் – இத்தனை பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் நாம் நிறைவேற்றிக் கொண்டு வருகின்ற முத்தான முத்திரைத் திட்டங்களில் நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும், எத்தனை நபர்கள் இந்தத் திட்டங்களின் மூலமாக பயனடைந்து கொண்டு வருகிறார்கள் என்று சொல்ல வேண்டுமா? நீங்கள் ரெடியா? நானும் ரெடி. ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் நம்மைப் பார்த்து, பின்பற்றி வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - அந்தத் திட்டத்தின்கீழ், இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், 3 இலட்சத்து 18 ஆயிரத்து 376 சகோதரிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு வருகிறோம்.
அதேபோல, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற 741 பள்ளிகளைச் சேர்ந்த 45 ஆயிரத்து 973 மாணவ கண்மணிகள் ஊட்டச்சத்து மிக்க காலை உணவை உண்டு, பசியின் மயக்கமே தெரியாமல் தெம்பாக படிக்கிறார்கள்.
புதிய திட்டமாக அறிமுகப்படுத்தி பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்ற நம்முடைய தாயுமானவர் திட்டம் – அந்தத் திட்டத்தில், 28 ஆயிரத்து 133 முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறது. அதுமட்டுமா, பெற்றோரை இழந்த 143 குழந்தைகளின் எதிர்காலம் நல்லபடியாக அமைவதை அன்புக்கரங்கள் திட்டத்தில் உறுதி செய்திருக்கிறோம்.
இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்தில், வேலை கிடைக்க வேண்டும் என்று நான் தொடங்கிய திட்டம் தான் நான் முதல்வன் திட்டம் – அந்தத் திட்டத்தில், நேற்று முன்தினம் கூட நாமக்கல்லை சேர்ந்த கமலி என்பவர் S.B.I. வங்கிப் பணியாளராக தேர்வு பெற்றிருக்கிறார். அவர்கள் தந்தை நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். நான் முதல்வன் திட்டத்தால், தங்கள் வாழ்க்கையே மாற்றம் பெறுவதை நினைத்து, அவர்கள் மகிழ்ந்ததை தொலைக்காட்சிகளில் நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
அந்த நான் முதல்வன் திட்டத்தில், திறன்பயிற்சி பெற்று, இந்தக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், 3 ஆயிரத்து 834 நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கிறது.

பெண்கள் உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்கின்ற புதுமைப்பெண் திட்டத்தில், 16 ஆயிரத்து 94 மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல, 10 ஆயிரத்து 656 மாணவர்களுக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை வழங்குகிறோம்.
விடியல் பயணம் திட்டத்தில், இந்தக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்
11 கோடியே 49 இலட்சம் முறை கட்டணமில்லாமல், பேருந்தில் சுகமாக, சுதந்திரமாக பெண்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். இதைப் பயன்படுத்திட்டு வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், 4 இலட்சத்து 12 ஆயிரத்து 830 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டால் சிகிச்சை செலவை அரசே ஏற்றுக்கொண்டு உயிரை காப்பாற்றுகின்ற இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், 10 ஆயிரத்து 336 பேருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக, 13 ஆயிரத்து 409 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழக்கூடிய மாவட்டம் தான் கள்ளக்குறிச்சி. குறிப்பாக, கல்வராயன்மலை பழங்குடியின மக்களுக்கு 3 ஆயிரத்து 871 வன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
அனைவருக்கும் பாதுகாப்பான சொந்த வீடுகளை கட்டி தருகின்ற கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 7 ஆயிரத்து 965 வீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவில், 34 ஆயிரத்து 518 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கியிருக்கிறோம். இங்கே இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழ்பவர்களின் முன்னேற்றத்திலும் நாம் பலவற்றையும் நிறைவேற்றித் தந்திருக்கிறோம்.
திராவிட மாடல் அரசு செயல்படுத்தி இருக்கின்ற அத்தனை திட்டங்களிலும் இந்தக் கள்ளக்குறிச்சிக்கு ஸ்பெஷல் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. என்னதான் இவ்வளவு சொன்னாலும், புதிய அறிவிப்புகள் இல்லாமல், இந்தக் கள்ளக்குறிச்சிக்கு நான் வருவேனா? உங்கள் மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடுகிறேன்.
முதல் அறிவிப்பு –
ரிஷிவந்தியம் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைப்படி, வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும். மேலும், ரிஷிவந்தியத்தில், 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஊராட்சி ஒன்றியக் கட்டடம் கட்டப்படும்.

இரண்டாவது அறிவிப்பு -
புதிதாக அமைக்கப்பட்டுள்ள உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கல்லூரி கட்டடம் கட்டப்படும்.
மூன்றாவது அறிவிப்பு –
உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள சேந்தநாடு கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவில், புதிய சிட்கோ தொழிற்பேட்டை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு -
சங்கராபுரம் பகுதி பொதுமக்களுக்குப் பயனளிக்கின்ற வகையில், புதுப்பாலப்பட்டு கிராமத்தில், 18 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு –
சின்னசேலம் வட்டத்தில், 3 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம் கட்டப்படும்.
ஆறாவது அறிவிப்பு -
திருக்கோயிலூர் பகுதி விவசாயிகளின் நலனுக்காக, அரியூர் கிராமத்தில், 5 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
ஏழாவது அறிவிப்பு -
கல்வராயன் மலைப் பகுதி பழங்குடியின மகளிர் பயன்பெறும் வகையில், “மகளிர் விடியல் பயணம்” திட்டம் விரிவுபடுத்தப்படும்.
எட்டாவது அறிவிப்பு –
புதிதாக அமைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்புகள் அமைக்கப்படும்.
இப்படி, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்று எந்த பாகுபாடும் பார்க்காமல், அனைத்து மாவட்டங்களுக்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற ஆட்சியாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!
அதற்கு சாட்சிதான், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா என்பதுபோல, நாம் பெற்றுள்ள 11.19 விழுக்காடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி! GSDP-லேயும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்! மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியா! ஆட்டோமொபைல் உற்பத்தியா! தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியா! ஸ்டார்ட்-அப் தரவரிசையா! எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் லீடர்!

இங்கே அதிகமான பெண்கள் வந்திருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும், நாளைக்கு நீங்கள் அவரவர்கள் வேலைக்கு சென்று விடுவீர்கள். இப்படி, இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரிவது நம்முடைய தமிழ்நாட்டில்தான். ‘எல்லார்க்கும் எல்லாம்’, ‘அனைத்து மாவட்ட வளர்ச்சி’ என்று சொல்வது சும்மா இல்லை.
இங்கே தம்பி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வந்திருக்கிறார். அவருடைய துறையில் எனக்கு மிக நெருக்கமான திட்டமான அரசு மாதிரி பள்ளிக் கட்டடத்தையும், விடுதி கட்டடத்தையும் திறந்து வைத்திருக்கிறேன். அந்தப் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் ஆயிரக்கணக்கான நபர்கள் ஐ.ஐ.டி. என்.ஐ.டி. உள்ளிட்ட நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க தேர்வாகி இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, 15 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு 104 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கல்விக்கான உட்கட்டமைப்புக்களை திறந்து வைத்திருக்கிறேன்.
ஒரு மாவட்டத்தில், கல்வி வளர்ச்சி என்று சேர்ந்தால், அந்த மாவட்டமும், மக்களும் அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைவார்கள் என்று கல்விக்கு அதிக அளவு முக்கியத்துவம் வழங்கி இந்தப் பணிகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, உளுந்தூர்பேட்டை சிப்காடில், 2 ஆயிரத்து 302 கோடி ரூபாயில் உருவாகிக் கொண்டு வருகின்ற ‘பௌ-சென்’ காலணி உற்பத்தி ஆலையின் கட்டுமானப் பணிகளை பார்த்து கொண்டு தான் இங்கு வந்திருக்கிறேன்.
20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கின்ற இந்த நிறுவனம். தங்களின் அடுத்தடுத்த விரிவாக்கங்களையும் தமிழ்நாட்டிலேயேதான் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டு வந்திருக்கிறேன்.
வறுமை இல்லாத பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் என்று தமிழ்நாடு இன்றைக்கு பெயர் வாங்கியிருக்கிறது! ஒன்றிய அரசின் தரவுகளின்படி, இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமும் தமிழ்நாடுதான்!
அதுமட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஈசியாக ஏறுவதற்கு தாழ்தள பேருந்துகள், மின் பேருந்துகள், ஏசி பேருந்துகள், அண்மையில், நான் துவக்கி வைத்த ‘வோல்வோ’ பேருந்துகள் என்று இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்தைக் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடுதான் இருக்கிறது.
உலகத் தரத்தில் பல பெரிய நூலகங்களை அமைத்திருக்கிறோம். நம்முடைய கள்ளக்குறிச்சி உட்பட பல மாவட்டங்களிலும் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போட்டிகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவிலேயே விளையாட்டு மேம்பாட்டில் சிறந்த மாநிலம் என்று ஸ்போர்ட் ஸ்டார் விருதையும் தமிழ்நாடு தான் பெற்றிருக்கிறது! தென்கோடி மாநிலங்களிலும், பெரு நிறுவனங்களின் முதலீடுகள் வந்து கொண்டிருக்கிறது! இரண்டாம் நிலை நகரங்களிலும், நியோ டைடல் பூங்காக்கள் அமைத்துக் கொண்டிருக்கிறோம்!

தமிழ்நாடு முழுவதும் புதிய மருத்துவமனைகள், பூங்காக்கள் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சித் திட்டங்களோடு, நம்முடைய வரலாற்றுப் பெருமையை உலகத்திற்கு எடுத்துச் சொல்கின்ற வகையில், இரும்பின் தொன்மை பற்றிய ஆய்வு, கீழடி அருங்காட்சியக திறப்பு, பொருநை அருங்காட்சியகம் திறப்பு, வள்ளுவர் கோட்டம் மற்றும் விக்டோரியா ஹால் சிறப்பான முறையில் புதுப்பிப்பு போன்றவற்றையும் செய்திருக்கிறோம். கங்கை கொண்ட சோழபுரத்திலும், தஞ்சாவூரிலும் புதிய அருங்காட்சியகங்கள் உருவாகி கொண்டிருக்கிறது.
முதல்வர் படைப்பகங்கள் கட்டப்பட்டு, குறைந்த விலையில் ஆபீஸ் ஸ்பேஸ் அமைத்து வழங்கியிருக்கிறோம்! வேலைக்குச் சென்று கொண்டிருக்கக்கூடிய பெண்களுக்காக தோழி விடுதிகள்! வீட்டில் தனியாக இருக்கின்ற முதியோர்களை பார்த்துக் கொள்வதற்கு அன்புச்சோலை இல்லங்கள்!
குழந்தைகள் தெம்பாக வளர ஊட்டச்சத்தை உறுதி செய்! மாற்றுத் திறனாளிகளுக்கு – இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது – மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், இட ஒதுக்கீடு என்ற சாதனைத் திட்டத்தை நிறைவேற்றி இந்தியாவுக்கே முன்மாதிரியாக நம்முடைய திராவிட மாடல் அரசு திகழ்கிறது.
ஆதிதிராவிட மக்கள் தொழில்முனைவோராக உயர, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்! எந்த அரசும் செய்யாத சாதனையாக நான்கு ஆண்டுகளில், சுமார் 4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு!
சிறுபான்மை மக்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். மதவெறி கும்பலுக்கு பயப்படாமல் வாழுகின்ற அமைதியான, நிம்மதியான சூழலை, இங்கே ஏற்படுத்தி இருக்கிறோம்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும், வாழ்நாள் கனவு என்பது சொந்தமாக ஒரு நிலம். கள்ளக்குறிச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும், அதிக எண்ணிக்கையிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி, நிலம் எனும் அதிகாரத்தை எளிய மனிதர்களுக்கு வழங்கியிருக்கிறோம்!
அடுத்து, 20 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க இருக்கிறோம். அதுவும், A.I. என்கின்ற செயற்கை நுண்ணறிவு சந்தாவுடன் வழங்க இருக்கிறோம்! சொல்லச் சொல்ல மூச்சு வாங்குகின்ற அளவுக்கு மேஜர் சாதனைகளை இவ்வளவும் செய்து கொண்டிருக்கிறோம்! இதில், எதையுமே திராவிட மாடலுக்கு எதிரானவர்கள் கூட மறுத்துப் பேச முடியாது!
அனைத்துமே ப்ரூவன் ட்ராக் ரெக்கார்டு! எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், சாதனைகள் - ஒன்றிய அரசு வெளியிடும் தரவரிசைகள் எல்லாவற்றிலும், நம்பர் ஒன் ரேங்க் நாம் தான் - உலக அளவிலான விருதுகள் என்று நெஞ்சை நிமிர்த்தி, காலரை தூக்கி நடப்பது போல, தமிழ்நாடு இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது! நான் கேட்கிறேன் இதில் 5 சதவிகிதமாவது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா!
இது என்னுடைய ஓப்பன் சேலஞ்ச்! தைரியம் இருந்தால் சொல்லுங்கள்! 5 சதவிகிதம் கூறுங்கள்! பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில், பாழாய் போன தமிழ்நாடு, திராவிட மாடலின் நான்காண்டு காலங்களில், துள்ளிக் குதித்து இன்றைக்கு எழுந்திருக்கிறது! இனி நமக்கு எப்போதும் ஏறுமுகம்தான்!

ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் மீறி அவர்களின் உதவி இல்லாமல், இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு வளரவே கூடாது என்று அவர்கள் அமைக்கின்ற ஸ்பீட்-பிரேக்கரை எல்லாம் தாண்டிதான், இந்த இடத்தில் நாம் நிற்கிறோம்! ஆனால், “இது எதையுமே பார்க்க மாட்டோம்; செய்திகளை படிக்க மாட்டோம்; உண்மையை பேச மாட்டோம்; தமிழ்நாட்டின் சாதனைகளைப் பற்றி வாயே திறக்க மாட்டோம்” என்று சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது, நீங்கள் இப்படியே கண்ணை மூடிக் கொண்டிருங்கள்! நாங்கள் அடித்து தூள் கிளப்பி சென்று கொண்டே இருப்போம்!
திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு மகுடமாக, 2026 தேர்தலில், மக்கள் அளிக்கும் தீர்ப்புதான், உங்களுக்கான ரியாலிட்டி ‘செக்’-ஆக இருக்கும்! இப்போது நான் சொன்ன தமிழ்நாட்டின் சாதனைகள் வளர்ச்சி நிறைந்த ஒரு இந்தியா என்றால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறு ஒரு இந்தியா இருக்கிறது! வறுமை, மத வன்முறை, கும்பல் படுகொலைகள், கல்வியைக் கெடுக்கும் முயற்சிகள், வேலைவாய்ப்பின்மை… இதுதான் பா.ஜ.க.-வின் இந்தியா!
கிறிஸ்துமஸ் அன்றைக்குக் கூட மாற்றுத் திறனாளிகளையும், குழந்தைகளையும் தாக்குகின்ற மோசமான சூழலை பா.ஜ.க. அரசு உருவாக்கி இருக்கிறது! இந்த மாடலைத்தான் தமிழ்நாட்டிலும் கொண்டு வரவேண்டும் என்று பார்க்கிறார்கள்! ஆனால், நம்முடைய மக்கள் மிகவும் உஷார்! திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள்!
மதுரை சித்திரை திருவிழாவிற்கு வரும் இந்து பக்தர்களுக்கு பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய சகோதரர்கள் ரோஸ்மில்க் வழங்குகிறார்கள். தை முதல் நாள் அன்றைக்கு தேவாலயத்தில், பொங்கல் வைத்து படைக்கிறார்கள்! கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்துவிட்டால், இந்து நண்பர்கள் எல்லாம் “கேக், பிரியாணி எங்கே?” என்று உரிமையாக கேட்கிறார்கள்.

எம்மதமும் சம்மதம் என்கின்ற தமிழ்நாட்டு மக்களின் இந்த ஒற்றுமை, நல்லிணக்கம்தான் மதவாத அரசியல் செய்து மக்களைப் பிளவுபடுத்த நினைக்கின்ற, பா.ஜ.க.வின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது! அவர்கள் எத்தனை அடிமைகளை சேர்த்துக் கொண்டு அந்தர் பல்டி அடித்தாலும் சரி, ஒற்றுமையாக வாழுகின்ற தமிழ்நாட்டு மக்களிடம் மதவெறியை தூண்ட முடியாது. இந்த ஸ்டாலின் இருக்கின்ற வரைக்கும், எங்கள் திராவிட மாடல் அரசு இருக்கின்ற வரைக்கும், உங்களுடைய மதவெறி ஆட்டத்திற்கு இங்கே இடம் கிடையாது.
தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஓட்டுகளால் விரட்டி அடிப்பார்கள். நீங்கள் என்ன செய்தாலும் சரி, என்ன நாடகம் நடத்தினாலும் சரி, தமிழ்நாட்டில் உங்கள் வித்தை, வேலைக்கே ஆகாது! உங்கள் பாட்சா பலிக்காது. திராவிட மாடல் 2.0 உறுதியாகிவிட்ட ஒன்று! நம்முடைய கடமை எல்லாம், வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயரை உறுதி செய்வதுதான்!
நீங்கள் அனைவரும் உறுதி செய்துவிட்டீர்களா? நியூஸில் பாத்திருப்பீர்கள். இறந்த பல பேர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்கள்! 50 ஆண்டுகளாக ஒரே அட்ரஸில் இருப்பவர்கள், பிரபல பத்திரிகையாளர்கள் என்று பலருடைய பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்டிருக்கிறது! இதனால்தான், “அவசர கோலத்தில், இந்த எஸ்.ஐ.ஆர். பணிகளை செய்யக் கூடாது! போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று சொன்னோம்! லிஸ்டில் பெயர் இல்லாதவர்கள் உடனே உங்கள் பெயரை இணைத்துக் கொள்ள அப்ளை செய்யுங்கள்!
ஒவ்வொருவரின் வாக்குரிமையையும், இந்தியாவின் ஜனநாயகத்தையும் பாதுகாக்க, திராவிட மாடல் அரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் உங்களுக்கு நிச்சயமாக, துணையாக இருப்போம்!
2026-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் துவங்கப் போகிறது! அதற்கு, நீங்கள் அனைவரும் துணையாக எப்போதும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, உங்கள் முதலமைச்சராக, உங்களில் ஒருவனாக, கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறி, விடைபெறுகிறேன்!






