
ஒரு வருடத்தில் நூறு கோடிக்கு மேற்பட்ட பயணிகள் ரயில் பயணத்தை தவிர்த்துள்ளனர். மீண்டும் கட்டண உயர்வு என்பது எவ்வகையிலும் நியாயமில்லை என ஒன்றிய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மோடி அரசு ரயில் கட்டணங்களை உயர்த்தி உள்ளது. 2014 க்கு பிறகு இப்போது தான் கட்டணத்தை உயர்த்துவதாகவும் ஆகவே இது ஒன்றும் தவறில்லை என்றும் கூறப்படுகிறது. சிலர் படிப்படியாக கட்டணங்களை உயர்த்தினால் பிரச்சனை இல்லை என்று கருதுகிறார்கள். உண்மையில் ரயில்வேயில் கட்டண உயர்வே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நடப்பது என்ன? கட்டண உயர்வு பல மறைமுக நடவடிக்கைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக சிறப்பு ரயில் சிறப்பு கட்டணம், தகட்கல், தட்கல் பிரிமியம் பயண ரத்து கட்டணம் போன்ற வகைகளில் கட்டணங்களை விமான கட்டண அளவுக்கு உயர்த்தி உள்ளார்கள். வந்தே பாரத் போன்ற வண்டிகளில் கட்டணம் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளது. அப்படி இருக்க கட்டண உயர்வே இல்லை என்பது உண்மைக்கு புறம்பானது. இவற்றின் காரணமாக 2014- 15 க்கு பிறகு 2023-24 காலகட்டத்தில் 132 கோடி பயணிகள் ஓர் ஆண்டு பயணத்தை தவிர்த்து உள்ளார்கள். அவர்களை மோடி அரசு சாலைக்கு துரத்தியுள்ளது. 2014 -15 இல் 822 கோடி பயணிகள் பயணம் செய்தார்கள். 2023-24ல் 690 கோடியாக அது குறைந்துவிட்டது. இது கட்டண உயர்வின் மூலமாகத்தான். மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை ரத்து செய்ததன் மூலமாக 6 கோடி மூத்த குடிமக்கள் பயணத்தை தவிர்த்து உள்ளனர்.
இப்படி எல்லோரையும் மோடி அரசு தேச நலனுக்கு விரோதமாக விபத்துக்கள் நிறைந்த மாசு நிறைந்த சாலைக்கு துரத்தி உள்ளது. சாதாரண இரண்டாம் வகுப்பு ரயில்கள் 4702 வண்டிகள்2014 -15ல் இயக்கப்பட்டன. அதுவே 2023-24ல் 3313 ஆக குறைந்துவிட்டது. அதாவது 1389 சாதாரண வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் சாதாரண மக்கள் சாலைக்கு துரத்தப்பட்டுள்ளனர். இப்படி மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பயணிகளை ரயிலில் இருந்து சாலைக்கு துரத்திவிட்டு மீண்டும் கட்டணத்தை உயர்த்துவது என்பது நியாயம் இல்லை. அது மட்டுமல்ல பயணிகள் குறைந்தாலும் வருமானம் அதிகரித்து உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். வருமானம் 2014 -15 இல் 42189 கோடியாக இருந்தது 2023-24ல் 70693 கோடியாக உயர்ந்துளது.
இதன் அர்த்தம் குறைந்த பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதுதான். எனவே இந்த கட்டண உயர்வு நியாயமற்றது. இது கைவிடப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.








