
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் S.I.R பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை கேள்விக்குறியான நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் இறுதிகட்டப் பணி வருகிற ஜனவரி 18 அன்று நிறைவடைய இருக்கிறது.
இதற்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், அலட்சியமாக செயல்படும் அவலமும் தொடர்ந்து வருகிறது. இதனால், ஆளுநருக்கு எதிரான கண்டனங்கள் தமிழ்நாட்டிலும், நீதிமன்றங்களிலும் மேலோங்கி வருகின்றனர்.

அப்படியான நிலையில், இன்று (டிச.26) செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, 2026ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்த தகவலை வெளியிட்டார்.
அவர் தெரிவித்ததாவது, “2026ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமும் அலுவல் கூட்டம் நடைபெறும்.
ஜன.20 அன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தயாரித்து வழங்கும் ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிப்பார்.
தமிழ்நாட்டில் மரபுகள் மாற்றப்படாது. ஆளுநரும் சட்டப்பேரவை மாண்பை காப்பாற்றுவார் என நம்புகிறேன்.”






