
தமிழ்நாட்டில் உழவர்களின் நலனை முன்னிறுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2021-22 ஆம் ஆண்டில், வேளாண்மைத்துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையும் அறிமுகப் படுத்தப்பட்டது.
வேளாண்மை, சார்புத் துறைகளுக்கென கடந்த ஐந்து வேளாண்மை நிதி நிலை அறிக்கைகளில் ரூ.1,94,076 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் ஒரு பகுதியாக, உழவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், இந்த ஆண்டின் முதல் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 11.06.2025 அன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் விஜயமங்கலத்திலும், இரண்டாவதாக ”வேளாண் வணிகத் திருவிழா” நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் 27.09.2025 அன்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றன. உழவர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் திரளாகப் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் மூன்றாவது நிகழ்வாக வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், உயர்விளைச்சல் தரவல்ல புதிய பயிர் இரகங்கள், பாரம்பரிய இரகங்கள், அறுவடை பின்சார் மேலாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டும் நுட்பங்கள், வேளாண்மையில் மின்னணு தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, உணவு பதப்படுத்துதல்;
கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு நுட்பங்கள், பயிர்க்கடன், பயிர்க்காப்பீடு உள்ளிட்ட சேவைகள், ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வு போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து விவரங்களையும் உழவர்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள் இயற்கை நல ஆர்வலர்களிடையே கொண்டுசேர்த்திடும் வகையில் வரும் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய இரு தினங்களில் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு – 2025” விழாவினை மிகச்சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகிறது.
இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 27.12.2025 அன்று தொடங்கி வைத்து, 80,571 உழவர்களுக்கு ரூ.669 கோடி மதிப்பிலான திட்டப்பலன்களை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்கள்.

வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பபிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் போன்ற அரசுத் துறைகள் தங்கள் செயல்பாடுகள்;
திட்டங்களைக் காட்சிப்படுத்த உள்ளார்கள், நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், விதை ஆகியவற்றின் உற்பத்தியாளர்கள், வங்கிகள், பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு வேளாண் உற்பத்திக்குத் தேவையான புதிய இரகங்களின் விதைகள், காய்கறி விதைகள், பழ வகைகளில் ஒட்டு இரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்ட உரக்கலவை, உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் போன்ற இடுபொருட்கள் மற்றும் நவீன உபகரணங்களைக் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் உள்ளார்கள்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவங்கள், பாரம்பரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் அமைப்புகளும் பங்கேற்கின்றன. இதற்கென 250க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளிப்புறக் காட்சி அரங்குகள் அமைக்கப்படுள்ளன.
நெல் சாகுபடித் தொழில்நுட்பங்கள், கரும்பில் பூச்சி, நோய் மேலாண்மைக்கான நவீன தொழில்நுட்பங்கள், இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மை தொழில்நுட்பங்கள், வேளாண்மைப் பொறியியல் துறை திட்டங்களின் இன்றைய நிலையும் எதிர்காலத் தேவைகளும், பயறு வகைப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை உத்திகள், காய்கறி உற்பத்திக்கான உயர் தொழில்நுட்பங்கள், மலர்கள் சாகுபடிக்கான உத்திகள்;
எண்ணெய்வித்துப் பயிர்களுக்கான உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள், பண்ணை வருமானத்தை உயர்த்துவதற்கு ஏற்ற உப தொழில்கள், உயர் வருமானம் பெற மண்டலத்திற்கேற்ற வேளாண் காடுகள், சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய இரகங்களின் மருத்துவ குணங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களின் விநியோகத் தொடர் மேலாண்மை;
வேளாண்மையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் அனுபவத்தின் மூலம் வகுத்துள்ள தீர்வுகள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்படும். இக்கருத்தரங்குகளில் தொழில்நுட்ப வல்லுநர்களும், அனுபவமிக்க வேளாண் பெருமக்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் உழவர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு முதலமைச்சர் அவர்களால் 27.12.2025 அன்று தொடங்கி வைக்கப்பட உள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் உழவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு பயன்பெறக் கேட்டுக்கொள்கிறேன் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.






