
ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ச்சியாக விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது. தற்போது 20 ஆண்டுகளுக்கு மேலாக கிராம பொருளாதாரத்தை உயர்த்தி வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதில் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, மகாத்மாக காந்தியின் பெயரையும் ஒன்றிய அரசு நீக்கி இந்த திட்டத்திற்கு VBGRAMG என பெயர் மாற்றம் செய்துள்ளது. அதோடு 100% நிதியை ஒன்றிய அரசு வழங்கி வந்த நிலையில் தற்போது மாநில அரசு 40%-ம் என்றும் ஒன்றிய அரசு 60% என்று நிதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்த ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்தும், இதற்கு ஒத்து ஊதும் அ.தி.மு.கவை கண்டித்தும் இன்று தமிழ்நாடு முழுவதும் ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு ”ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களிலும் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. மக்களுக்கு விரோதமான சட்டங்களையும், திட்டங்களையும் செயல்படுத்தும் பா.ஜ.க அரசையும், அவர்களுக்கு துணை போகும் அ.தி.மு.க.வையும் வீழ்த்த வேண்டும்” என கூறினார்.
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி “உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கு முன்னுதாரணமான திட்டம், 100 நாள் வேலைத் திட்டம் என சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட திட்டத்தையே கொச்சைப்படுத்தி, ரத்து செய்கிறார்கள் என்றால் அதுதான் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ். அதை எதிர்ப்பவர்கள்தான் திராவிட சிந்தனையாளர்கள். காரணம், இது சமதர்ம மண்” என கண்டன உரையாற்றினார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ “நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு காந்தியின் பெயரை எந்த அடிப்படையில் நீக்கினார்கள்? அன்று காந்தியை கோட்சே கொன்றது போல, தற்போது மோடி கொன்றுள்ளார்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் “இந்தியாவில் நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கு சாவு மணி அடித்து, ஒட்டு மொத்த நாட்டையே பெரிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்க முயற்சிக்கிறது மோடி அரசு. இதற்கு விரைவில் சரியான பதிலடியை மக்கள் கொடுக்க இருக்கிறார்கள்” என கண்டன உரையாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்,“நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றத்தையும், மாநில அரசுகள் மீது திணிக்கப்பட்டுள்ள நிதிச்சுமையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவை அனைத்திற்கும், சரியான பதிலடியை 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு புகட்டுவோம். தமிழ் மண் சரியான பாடம் புகட்டும்” என தெரிவித்தார்.
வி .சி.க தலைவர் தொல் திருமாவளவன்,“நூறு நாள் வேலைத்திட்டத்தின் பெயரை மாற்றி, மாநில அரசுகளுக்கான நிதிச்சுமையை உயர்த்தியிருக்கிறார்கள். இதன்வழி, தமிழ்நாடு போல நிதி வலிமை இல்லாத மாநில அரசுகளே, இத்திட்டத்தை கைவிடும் நிலை உருவாகும். இவ்வாறு, நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் உள்நோக்கம்” என தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன், “இந்திய அளவில் மதத்தின் பெயரால் மக்களை கூறுபோட்டு, தினந்தோறும் மக்கள் விரோத சட்டங்களை இயற்றும் அரசாக, ஒன்றிய பா.ஜ.க அரசு விளங்குகிறது. நிச்சயம் பா.ஜ.க.வின் கனவுகள் தமிழ்நாட்டில் பொய்யாகும்” என பேசினார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், “மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிவிட்டு, 125 நாட்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், இதுவரை 100 நாட்களே வேலை தராத ஒன்றிய பா.ஜ.க அரசு, இப்போது திசை திருப்பலுக்காக 125 நாட்கள் என்கிறார்கள். ஒன்றிய பா.ஜ.க அரசின் ஒரே நோக்கம் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிப்பதுதான்.” என கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், “ஆர்.எஸ்.எஸ் முதலில் மகாத்மா காந்தியின் உடலை அழித்தார்கள். தற்போது பா.ஜ.க.வினர் அவரின் பெயரையும் அழிக்கிறார்கள். இதற்கு ஆதரவாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடியவர்கள், எதிரிக்கட்சி போல செயல்படுகிறார்கள். இந்த நிலை வெகுவிரைவில் மாறும்” என கண்டன உரையாற்றினார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்துள்ளது பாசிச பா.ஜ.க அரசு. இதனை திசைத்திருப்பும் வகையில், இவர்கள் கூறும் 125 நாட்கள் என்பது வெறும் பித்தலாட்டம் மட்டுமே. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இவ்வேளையில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் வேரடி மண்ணோடு சாய்ந்தது என்ற வரலாற்றை படைப்போம் என உறுதியேற்போம்” என பேசினார்.






