
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.12.2025) சென்னை, பெரம்பூர், தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் கழக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற, “கிறிஸ்துமஸ் பெருவிழா 2025”-இல் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஆற்றிய உரை:-
எங்கும் அன்பு நிறைந்திடவும் - சகோதரத்துவம் தழைத்திடவும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிக்கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்!
இரண்டு நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நெல்லையில் நம்முடைய அருமை சகோதரர் இனிகோ அவர்கள் நடத்திய மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற மகிழ்ச்சியை இரண்டு மடங்காக ஆக்கும் வகையில் கழக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மூலமாக தம்பி சுபேர்கான் அவர்கள் நடத்தபடக்கூடிய இந்த அன்பின் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொளத்தூர் தொகுதியில், மன்னிக்க வேண்டும், என்னுடைய கொளத்தூர் தொகுதியில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்!
கிறிஸ்துமஸ் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய நாள்! அன்பை பரிமாறிக்கொள்ளும் நாள்! அப்படிப்பட்ட இந்த திருநாள் கொண்டாட்டத்தில் 3250 குடும்பங்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது! இந்த நான்கரை ஆண்டுகளில் 3 ஆயிரத்து 927 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து, நம்முடைய திராவிட மாடலின் ஆட்சிக்கு பெருமை சேர்த்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தமிழ்நாட்டின் சமத்துவத்தின் அடையாளமாக, சகோதரத்துவத்தின் அடையாளமாக இந்த நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்திகொண்டு இருக்கிறார்! இந்த உணர்வு, அனைத்து மக்களின் உள்ளங்களிலும் பரவ வேண்டும்!
நெல்லையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பேசியபோது, நம்முடைய திராவிட மாடல் அரசு, சிறுபான்மையினருக்கு செய்துகொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து, எடுத்துச் சொல்லி, அதற்கு பின்பு முக்கியமான நான்கு அறிவிப்புகளை வெளியிட்டேன். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசிய நிறைய பேர் எங்களின் தேவைகளையெல்லாம், கோரிக்கைகளாக வைப்பதற்கு முன்பே, அதை உணர்ந்து செய்து தருகிறீர்கள் என்று பாராட்டி பேசினார்கள். உங்களுக்காக நமது அரசின் மூலமாக நாம் உருவாக்கியிருக்கும் திட்டங்களை நான் பல்வேறு மேடைகளில் பட்டியலிட்டு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். உங்களின் வாழ்க்கையில் ஒளி நிலைபெற வேண்டும் என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை செய்துகொண்டு இருக்கிறோம்! அதில் சிலவற்றை மட்டும் இங்கு Highlight-ஆக சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.
கல்வி எனும் பேராயுதத்தை அனைவரிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். எல்லோரையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று கல்விக்காக நாம் எவ்வளவு திட்டங்களை, முன்னெடுப்புகளை செய்துகொண்டு இருக்கிறோம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அதன் தொடர்ச்சியாக, சிறுபான்மையின கல்லூரி மாணவர் நலன் கருதி சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் 130 மாணவர்கள் பயனடையும் அளவிற்கு, புதிய விடுதிகளை தொடங்கியிருக்கிறோம்!
சிறுபான்மையின மாணவ - மாணவிகளுக்காக 14 கல்லூரி விடுதிகளில், நூலகம், உடற்பயிற்சி கருவிகள், விளையாட்டு கருவிகள் இப்படி பலவற்றை ஏற்படுத்தியிருப்பதோடு, அந்த மாணவர்களின் தனித்திறன் மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றலை உயர்த்த வேண்டும் என்கின்ற அந்த பயிற்சியை நிறைய செய்துகொண்டு இருக்கிறோம்!
மாணவ - மாணவியர் விடுதிகளில் தங்கிப் படிக்க, அவர்களின் பெற்றோருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பையும் - பல்வகை செலவினத் தொகையையும் உயர்த்தியிருக்கிறோம்! இதனால், இதுவரைக்கும் 884 பள்ளி மாணவ, மாணவியர்களும் 3 ஆயிரத்து 824 கல்லூரி மாணவ, மாணவியர்களும் பயனடைந்திருக்கிறார்கள்.
கிராமப்புற மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்று இதுவரைக்கும் ஒரு இலட்சத்து 3 ஆயிரம் மாணவிகளுக்கு 6 கோடியே 57 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை.
வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சிறப்பான திட்டம்
1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும், 90 ஆயிரத்து 723 மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை.
சிறுபான்மையினரால் நடத்தப்படும் 456 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கியிருக்கிறோம்!
பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின பெண்கள் முன்னேற்றம் அடைவதற்காக ஆறாயிரம் பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கியிருக்கிறோம்!
தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்துவ மக்கள், ஜெருசலேமிற்கு புனித பயணம் செய்வதற்கான மானியத்தை, 37 ஆயிரம் ரூபாயாகவும் - கன்னியாஸ்த்ரிகளுக்கு, 60 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியிருக்கிறோம்!
2 கோடியே 87 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 44 தேவாலயங்களை புனரமைத்திருக்கிறோம்!
சென்னை மாவட்டத்தில் வெஸ்லி தேவாலயத்தை ஒரு கோடியே 19 இலட்சம் ரூபாயில் புனரமைத்திருக்கிறோம்!
புனித தோமையர் மலை தேவாலயத்தை, ஒரு கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைத்துகொண்டு இருக்கிறோம்!
சென்னையில் இருக்கும் உங்களுக்கு, கல்லறைத் தோட்டங்களில் நிலவிய பிரச்சினைகள் பற்றி நன்றாக தெரியும். அதனால்தான், நம்முடைய அரசில், கிறித்துவர்களுக்கான அடக்கஸ்தலங்கள் அமைக்க புதிய நிலம் கையகப்படுத்தவும் – சென்னையில் ஏற்கனவே இருக்கும் அடக்கஸ்தலங்களில் மீண்டும் அடக்கம் செய்வதற்கு இருந்த நிபந்தனைகளையும் தளர்த்தியிருக்கிறோம்!
அதுமட்டுமல்ல, 19 கல்லறைத் தோட்டங்களை புனரமைத்திருக்கிறோம்!
திருநெல்வேலி – தேனி – இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கல்லறை தோட்டங்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்க 5 கோடி ரூபாய் நிதியை விடுவித்திருக்கிறோம்!
இப்படி, என்னால் பல மணிநேரத்திற்கு List போட்டு சொல்லிகொண்டே போக முடியும்! அந்தளவிற்கு செய்திருக்கிறோம்! இன்னுமும் செய்வோம்! செய்வோம்! செய்வோம்!
திருநெல்வேலியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நான்கு அறிவிப்புகளை வெளியிட்டேன். அப்போது சொன்னேன். இனிகோ கேட்டால் இல்லை என்று சொல்ல முடியுமா என்று! அதனால் இந்த விழா மேடையிலும் சிரித்துக்கொண்டே ஒரு கோரிக்கையை கொடுத்திருக்கிறார். எங்கு சென்றாலும் கோரிக்கை வைப்பது தான் அவரது வேலை. அதற்கான அறிவிப்பை இப்போதே வெளியிட நான் விரும்புகிறேன்.
அதாவது, 2019 முதல் 2024 வரை செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள்
2019-இன் படி உள்ள மதச்சார்பான கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் NOC-யை வலியுறுத்தாமல் திட்ட அனுமதி வழங்கப்படும். இந்த காலத்தில் திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பித்திருக்கும் மதச்சார்பான கட்டிடங்களுக்கும் இது பொருந்தும்.
இனிகோவின் கோரிக்கைகள் இனி இல்லை என சொல்லக்கூடிய அளவிற்கு அறிவிப்புகள் செய்துவிட்டேன். அதனால், நீங்கள் எப்போதும்போல், நம்முடைய அரசின் சாதனை திட்டங்களை, நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று, நமக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று அன்போடு நான் உங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் அனைவரும், இன்றைக்கு என்ன மாதிரியான அச்ச உணர்வோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை! இந்த நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் எதேச்சாதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும் - கொள்கையும் - உணர்வும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குதான் இருக்கிறது!
அதனால்தான், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் போதும் சரி - இப்போதும் சரி, உங்கள் எல்லோரின் வாக்குரிமையையும் உறுதிசெய்ய உறுதியுடன் களப்பணி ஆற்றிகொண்டு இருக்கிறோம்! நாட்டில், அன்புவழி நடக்கும் சமத்துவத்தை விரும்பும் சக மனிதர்களை சகோதர - சகோதரிகளாக நினைக்கும் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம்! ஜனநாயகத்தில் இந்த வலிமைமிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து, மக்களும் ஆதரவாக இருக்கும்போது, எந்த பாசிச சக்திகளாலும், ஒன்றும் செய்ய முடியாது! உங்களுக்குத் துணையாக திராவிட முன்னேற்றக் கழகமும் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் உறுதியாக இருக்கும்!
அதேபோல், என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு, மீண்டும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து, உங்கள் வீட்டுப் பிள்ளை ஸ்டாலின் விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!






