
பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 92,000 சதுர அடி பரப்பளவில், 74 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாநகரத்தின் 125 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாகப் பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் ரிப்பன் கட்டட வளாகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம், 74.70 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மக்கள் பிரதிநிதிகளின் ஜனநாயக உரையாடலுக்காக, நவீன வசதிகளுடன், பாரம்பரிய கட்டடமாக தமிழ் சூழலோடு இணைந்த நவீன கட்டடமாக கட்டப்படவுள்ளது. இந்த கட்டடத்தில், 300 உறுப்பினர்கள் அமரக்கூடிய விசாலமான மாமன்ற அரங்கம், பொதுமக்கள் பார்வையிட அமைக்கப்பட்டிருக்கும் பார்வையாளர் மாடம், ஊடகங்களுக்கு தனியான மீடியா கேலரி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அலுவலகங்கள், மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோருக்கான அலுவலகங்கள், நிலைக்குழுகளுக்கான அலுவலகங்கள் மற்றும் மன்றத் துறை அலுவலகம், கூட்ட அரங்கங்கள், காத்திருப்பு அறைகள், உணவருந்தும் அறை, நிர்வாகச் சேவைக்கான அனைத்து வசதிகளும் இந்த கட்டடத்தில் இடம் பெறவுள்ளன.
இந்த மன்றக்கூடம், பாரம்பரியத்தை பாதுகாத்து, நவீன நிர்வாகத்தை வலுப்படுத்தும் விதமாகவும், சென்னை மாநகரின் எதிர்கால மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையிலும் அமைக்கப்படவுள்ளது.






