
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை,
இன்றைக்கு நம் அமைச்சர் சேகர்பாபு அவர்களின் ஏற்பாட்டில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக, துறைமுகம் தொகுதியில் இவ்வளவு சிறப்பான கிறித்துமஸ் பெருவிழாவில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய கிறித்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். மெர்ரி கிறிஸ்மஸ் டு ஆல் (Merry Christmas to all).
சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு எப்பொழுது வந்தாலும் ஒரு தனி உற்சாகமும், தனி எழுச்சியும் நிச்சயமாக ஏற்படும். அதுவும் இந்தத் துறைமுகம் பகுதிக்கு வரும் பொழுது அது சற்று கூடுதலாகவும் இருக்கும். அதே உற்சாகத்தோடும் எழுச்சியோடும்தான் இங்கே வந்திருக்கிறேன். முதலில் இங்கே வருகை தந்துள்ள உங்கள் அனைவரின் அன்புக்கும் பாசத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கம் போல, அண்ணன் சேகர்பாபு அவர்கள் இந்த நிகழ்ச்சியையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்.
அண்ணன் சேகர்பாபு அவர்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, அமைச்சர். அவர் இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சர். ஆனால் அவர் கிறித்துமஸ் விழாவையும், ரம்ஜான் விழாவையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார். அவர் என்னை கிறித்துமஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் அழைப்பது கிடையாது, ரம்ஜானுக்கும் அழைப்பார், பொங்கலுக்கும் அழைப்பார்.
இந்தச் சென்னை கிழக்கு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் தனி கவனம் செலுத்தித் தனியாகச் சிறப்பாக நடத்தக்கூடியவர் அண்ணன் சேகர்பாபு அவர்கள். அதனால்தான் இன்றைக்கு இந்த கிறித்துமஸ் விழாவைக் கூட வெறும் ஒரு கொண்டாட்டமாக இல்லாமல், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகின்ற நிகழ்ச்சியை சேர்த்து இந்த நிகழ்ச்சியை அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கும்படி சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்.
நம் முதலமைச்சர் அவர்கள் எப்படி ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்கின்ற ஒரு திராவிட மாடல் அரசைச் சிறப்பாக நடத்தி வருகிறாரோ, அதேபோல இன்றைக்குத் துறைமுகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்லக்கூடிய இந்தச் கிறித்துமஸ் நிகழ்ச்சியை அண்ணன் சேகர்பாபு அவர்கள் நடத்தியிருக்கிறார்.
நம் முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று, கடந்த நான்கரை ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை நம் மக்களுக்காக அவர் கொடுத்திருக்கிறார் என்பதைச் சில உதாரணங்கள் மூலம் இங்கே உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாள் அவர் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு விடியல் பயணத் திட்டம் எனும் கட்டணமில்லாப் பேருந்து திட்டம். இன்றைக்குப் பார்த்தீர்கள் என்றால் கிட்டத்தட்ட 850 கோடி பயணங்களை மகளிர் இந்தத் திட்டத்தின் மூலமாக மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மகளிரும் கிட்டத்தட்ட மாதம் 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை இந்தத் திட்டத்தின் மூலம் சேமிக்கிறார்கள்.

குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும், படிக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் காலை உணவுத் திட்டம். ஒவ்வொரு நாளும் இன்றைக்கு 23 லட்சம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். பள்ளிக்கூடத்திற்கு வந்தால் மட்டும் போதாது, உயர்கல்வி கற்க வேண்டும், பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, அரசுப் பள்ளியில் பயின்று எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்குக் கல்வி உதவித்தொகையாக தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களின் கீழ் மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் நாம் மட்டும் பெருமையாகச் சொல்லவில்லை, மற்ற மாநில முதலமைச்சர்களும் வந்து பாராட்டி அவர்களுடைய மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய தமிழ்நாடு இன்றைக்குத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்ற தேர்தல் அறிக்கையில் சொன்ன ஒரு திட்டம், அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்.
இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம் முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, நம்மைக் காக்கும் 48 எனப் பல்வேறு திட்டங்கள் உள்ளன.
இப்படிப் பல்வேறு முன்னெடுப்புகளால்தான் இன்றைக்குத் தமிழ்நாடு 11.19 சதவிகித வளர்ச்சியோடு வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவிலேயே வளர்கின்ற மாநிலங்களில் முதலிடத்திற்கு வந்திருக்கிறது. இந்த வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளைப் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் இன்றைக்கு ஒன்றிய பாசிச அரசு நம்முடைய அரசுக்குப் பல்வேறு தொல்லைகளையும், இடையூறுகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் இந்தியைத் திணிப்பதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை என்று ஒன்றைக் கொண்டு வந்து மீண்டும் இந்தித் திணிப்பு, சமஸ்கிருதம், குலக் கல்வித் திட்டம் ஆகியவற்றைப் தமிழ்நாடு மீது திணிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் இந்தப் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டன. ஆனால் நம்முடைய முதலமைச்சர் இதனை ஏற்க முடியாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். இன்னும் சொல்லப்போனால், மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன, தமிழ்நாடு மட்டும் ஏற்கவில்லை என்பதால் தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்து அளிக்க வேண்டிய 2,000 கோடி ரூபாய் நிதியை வழங்க முடியாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் கூறினார்.

ஆனால் நம்முடைய முதலமைச்சர், "நீ மீண்டும் புதிய கல்விக் கொள்கை மூலமாகக் குலக் கல்வித் திட்டத்தைத் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கிறாய். இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைக் குறுக்கு வழியில் திணிக்கப் பார்க்கிறாய். 2,000 கோடி அல்ல, நீ 10,000 கோடி கொடுத்தாலும் எக்காலத்திலும் புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்காது, தமிழ்நாட்டு மக்கள் மேல் நான் திணிக்க மாட்டேன்" என்று கூறினார்.
இன்றைக்கு மற்ற மாநில முதலமைச்சர்களும் அதைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் கொண்டு வந்தால் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை நோக்கித்தான் பார்க்கின்றனர். தமிழ்நாடு என்ன முடிவெடுக்கிறது, தமிழ்நாடு முதலமைச்சர் என்ன முடிவெடுக்கிறார் என்று எதிர்பார்க்கின்றன. இப்படி மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நம்முடைய மாநிலம் திகழ்கிறது என்றால், அந்த முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்த பெருமை தமிழ்நாட்டு மக்களாகிய உங்களையே சாரும்.
சமீபத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலமாகச் குறுக்கு வழியில் எஸ்.ஐ.ஆர் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பாதிப்புகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள்தான் முதன்முதலில் எடுத்துக்கூறினார். குறிப்பாகச் சிறுபான்மையினருடைய வாக்குகள், பெண்களுடைய வாக்குகள், ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாக்குகள் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் செல்கின்றன. என்ன முயற்சி செய்தாலும் அவை ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கிடைக்கவில்லை என்பதால், அவர்களின் வாக்குகளைத் தேடித்தேடி நீக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இந்த எஸ்.ஐ.ஆர். கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்குகளைத் தமிழ்நாட்டிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
இங்கே வந்துள்ள கிறித்தவப் பெருமக்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒரு முக்கியமான வேண்டுகோள். வாக்குரிமை என்பது நம்முடைய கடமை மட்டுமல்ல, நம்முடைய உரிமை. இங்கே வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாக்குகள் பட்டியலில் உள்ளனவா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் நம் கழகத்தின் பி.எல்.ஓ-க்களைச் சந்தித்துப் படிவம் 6-ஐ வழங்கி மீண்டும் விண்ணப்பியுங்கள். வருகின்ற ஜனவரி 18-ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசம் உள்ளது. இதனை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வளவு சூழ்ச்சிகளைச் செய்துவிட்டு, டெல்லியில் இருந்துகொண்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், "பீகார் தேர்தலில் வென்றுவிட்டோம், எங்களது அடுத்த இலக்கு தமிழ்நாடு" என்று கூறுகிறார். "தயாராக இருங்கள்" என்று நம் முதலமைச்சரைப் பார்த்துச் சொல்கிறார். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அடிமைக் கூட்டம் பயப்படலாம், ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். வடமாநிலங்களில் நீங்கள் வெற்றிப்பெறலாம், ஆனால் உங்கள் பருப்பு தமிழ்நாட்டில் என்றுமே வேகப்போவதில்லை. ஏனெனில் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித்துவமும் குணாதிசயமும் உள்ளது.
நாங்கள் கிறித்துமஸ் அன்று கேக்கை இசுலாமியர்களுக்கும் சேர்த்து அனுப்புவோம். ரம்ஜான் அன்று எங்களுக்குப் பிரியாணி வந்துவிட்டதா என்று முதலில் பார்ப்போம். பொங்கல் அன்று அனைவரும் இணைந்து கொண்டாடுவோம். இதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம். நீங்கள் என்னதான் மதக்கலவரத்தைத் தூண்டினாலும் உங்கள் முகத்தில் தமிழ்நாட்டு மக்கள் கரியைத்தான் பூசுவார்கள். நம் முதலமைச்சர் சொல்வதுபோலு தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.

இங்கே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமித்ஷாவிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்று அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சிறுபான்மையினரைப் பாதுகாப்பேன் என்று அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. முதலில் உங்கள் கட்சியை பா.ஜ.க-விடமிருந்து காப்பாற்றுங்கள்.
இன்றைக்குப் பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக நம் முதலமைச்சர் சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்குப் பல்வேறு நலத்திட்டங்களைச் நம் அரசு செய்துள்ளது. கிறித்தவ மாணவர்களுக்கு மட்டும் 7 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கிறித்தவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு 13 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்குத் தலா 37,000 ரூபாய் மானியத்தை நம் திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளது.
தேவாலயங்களைப் புனரமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் எனப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று திருநெல்வேலியில் நடந்த கிறித்துமஸ் விழாவில் முதலமைச்சர் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் தேர்வுக் குழுவில் அந்தந்த நிறுவனப் பிரதிநிதிகளே ஆசிரியர்களைத் தேர்வு செய்யலாம் என்பது அந்த உத்தரவு. இது பல ஆண்டுகாலக் கோரிக்கையாகும். அதேபோல் ‘டெட்’ (TET) தேர்வு தொடர்பான பாதிப்புகளை உணர்ந்து, மாநில அரசின் வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறப்படுகின்றன என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 1,500 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படிச் சிறுபான்மை மக்களுக்காகவும் உங்கள் பாதுகாப்பிற்காகவும் அரணாக இருக்க நம்முடைய திராவிட மாடல் அரசும் முதலமைச்சரும் தயாராக இருக்கின்றனர். நீங்கள் இந்த அரசிற்கு அரணாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சங்கிகளின் முயற்சி என்றைக்கு தமிழ்நாட்டில் எடுபடாது. அதற்கு காரணம் நம் முதலமைச்சர் உருவாக்கியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான். தமிழ்நாட்டு மக்கள் நம் கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இது தேர்தலுக்காக உருவான கூட்டணி மட்டுமல்ல, மக்களுடனானத் தொடர்பு கொண்ட இயக்கம் நம் இயக்கம்.
மத நல்லிணக்கத்திற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் எதிரான பாசிஸ்ட்டுகளின் அடிமை கூட்டத்தை நாம் விரட்டியாக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்றைக்கும் சிறுபான்மையினர் மக்களின் அரணாக இருக்கும் என்பதை நீங்கள் நம்புவீர்கள்.
அ.தி.மு.க, பா.ஜ.க மீண்டும் தமிழ்நாட்டிற்குள் வந்தால் தொகுதி மறுவரையறை வரும், புதிய கல்விக் கொள்கை, இந்தித் திணிப்பு என மாநில உரிமைகள் அனைத்தும் பறிபோகும். எனவே நீங்கள் விழிப்போடு இருந்து, வரும் தேர்தல்களில் நம் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும். 200 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைப்போம் என முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
அதன் தொடக்கமாகச் சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருக்கின்ற கொளத்தூர், திரு.வி.க நகர், எழும்பூர், அம்பத்தூர், வில்லிவாக்கம், துறைமுகம் என அனைத்துத் தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியைத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கு வந்து அளைத்து கிருஸ்த்துவ மக்களுக்கும் மீண்டும் எனது இனிய கிறித்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த சேகர்பாபு அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.






