
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக,நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு:-
சமீபகாலமாக, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல்வேறு நோக்கங்கள்/பயன்பாடுகளுக்காகவும் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதற்காகவும் விவசாய நிலங்கள் கண்மூடித்தனமாக கையகப்படுத்தப்படுவதால், வளமான விவசாய நிலப்பரப்பு குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்து அதற்கான காரணங்களையும் ஒன்றிய அரசிடம் கோவை திமுக உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்கவும் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை/பஞ்சத்தைத் தடுக்கவும் எதிர்காலத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக வளமான நிலம் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாகத் தேவையான நடவடிக்கை எடுக்குமா? என்றும் கேட்டுள்ளார்.
ரேபிஸை ஒழிக்க தீவிரமாக செயல்படுமா ஒன்றிய அரசு?
சமீபத்திய சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளுக்கு இணங்க, கருத்தடை, தடுப்பூசி மற்றும் சிகிச்சை மூலம் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ரேபிஸை ஒழிப்பதற்காக ஒன்றிய அரசு செயல் திட்டம் வகுத்துள்ளதா என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் செயலாக்க நிலை மற்றும் அடையப்பட்ட முன்னேற்றம் குறித்த விவரங்கள், அதிக அளவில் நாய் கடி மற்றும் வெறிநோய் பாதிப்புகள் பதிவாகும் பகுதிகளுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதுகாப்பான நாய் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்தும், ரேபிஸ்சை கட்டுப்படுத்துவதில் வீடு மற்றும் தெருநாய்களுக்குத் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும் குடிமக்களுக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவை? என அவர் கேட்டுள்ளார்.






