
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நேற்று (13.11.2025) சென்னை, தலைமைச் செயலகத்தில், புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின்கீழ் மகளிர் நல்வாழ்விற்காக ரூ.40 கோடி செலவில் நடமாடும் மருத்துவ ஊர்திகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 196 உதவியாளர், 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 19 திறன்மிகு உதவியாளர்-II பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
பின்னர், அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறையில் ஒரு புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
மருத்துவத்துறையில் ஏற்கெனவே மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, இதயம் காப்போம், பாதம் பாதுகாப்போம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவ ஆய்வக திட்டம், செயற்கை கருத்தரித்தல் மையம் என்று ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஒரு புதிய திட்டமாக இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் “Women wellness on wheels” எனும் நடமாடும் மகளிர் நல்வாழ்வுக்கான மருத்துவ ஊர்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தைப் பொறுத்தவரை புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதிலும் கிராமங்கள், குக்கிராமங்கள், மலைக்கிராமங்கள் என்று அனைத்து பகுதிகளிலும் இந்த வாகனங்கள் முறையாகச் சென்று பெண்களுக்கு ஏற்படுகின்ற 7 நோய் பாதிப்புகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சேவைகள் வழங்கப்படவிருக்கிறது.
அந்தவகையில் புற்றுநோய் பாதிப்புகள் என்பது உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்ற நிலையில் மூன்று மிக முக்கியமான புற்றுநோய் பாதிப்புகள் 1. வாய்ப்புற்றுநோய் 2. கருப்பைவாய் புற்றுநோய் 3. மார்பக புற்றுநோய் அதேபோல் நீரிழிவு நோய்க்கான உயர் இரத்த அழுத்தம் கண்டறிதல், இரத்த சோகை கண்டறிதல், இருதய நோய்களுக்கான பரிசோதனைகள் என்று பல்வேறு பரிசோதனைகளும் இந்த மூன்று வகை புற்றுநோய்கள் மட்டுமல்லாது வேறு வகையான புற்றுநோய் பாதிப்புகள் இருக்கிறதா என்று கண்டறியும் வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வாகனத்தில் டிஜிட்டல் மேம்மோகிராபி, ECG கருவி, செமி - ஆட்டோ அனலைசேர் (Semi – autoanalyser) உட்பட பல வசதிகள் இந்த வாகனத்தில் இருக்கின்றது. ஒரு வாகனம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த வாகனத்தில் தமிழ்நாடு முழுவதும் 38 வருவாய் மாவட்டங்களுக்கும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு வாகனம் என்று தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.40 கோடி மதிப்பீட்டிலான இந்த வாகனங்களின் முதல் வாகனத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள். முதல் வாகனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தன்னுடைய சேவையினை தொடங்க இருக்கிறது. இந்த வாகனத்தை தொடர்ந்து மீதமிருக்கும் 37 வாகனங்களும் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
பணிநியமன ஆணை – பணியிடமாறுதல் கலந்தாய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் 233 பேருக்கு பணி ஆணைகளை வழங்கி இருக்கிறார்கள். பொதுவாக இந்த துறை பொறுப்பேற்றநாள்முதல் புதிய பணிநியமனங்கள் நேர்மையான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) சார்பில் 19 திறன்மிகு உதவியாளர், பொறுத்துநர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் 196 நேரடி உதவியாளர் பணி ஆணைகளும், 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடங்கள் என ஆக மொத்தம் 233 பணியிடங்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் புதிய பணி ஆணைகள் வழங்கப்படும் நிலையில் அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி அவரவர் விரும்பும் இடங்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 233 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு புதிய பணி நியமனங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம், புதிய பணி நியமனங்கள் மட்டுமல்லாது புதிய பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் உருவாக்கப்பட்டு பணிநியமனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்துறையில் 4,337 மருத்துவர் பணியிடங்களும், 1,091 மருந்தாளுநர்கள், 131 உணவு பாதுகாப்பு அலுவலர்கள், 40 இளநிலை பகுப்பாய்வாளர்கள், 48 இயன்முறை சிகிச்சையாளர்கள், 344 ஆய்வக நுட்புநர்கள், 1,145 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், 115 சித்த மருத்துவர்கள், பல் மருத்துவர் மற்றும் உளவியல் பேராசிரியர்கள் என்று 572 பேர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் முதுநிலை பகுப்பாய்வாளர்கள் 15 பேர் என்று தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள் 1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் என்று இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலமாக 9,072 பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறை வரலாற்றில் இவ்வளவு புதிய பணியிடங்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. மேலும் 281 கருணை நியமன பணியிடங்களும், 3,009 ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள், 3253 தற்காலிக செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளும் இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2,011 புதிய பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள், சுகாதார அலுவலர்கள், புள்ளி விவர அலுவலர்கள் என்று பல்வேறு வகையிலான பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய பணியிடங்கள் என்கின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக தொடங்கப்பட்டது.
50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டது. 19 இடங்களில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளது. 6 இடங்களில் புதிதாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு இணையாக புதிய மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டது.
இப்படி பல்வேறு வகைகளில் புதிய மருத்துவக் கட்டமைப்புகள் கொண்டு வரப்படும் காரணத்தினால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தேசிய நலவாழ்வு குழுமம் (NHM) அமைப்பின் சார்பில் புதிய பணியிடங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு அந்தவகையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் 2,832 பணியிடங்களும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 506 பேரும், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 196 பேர் என புதிய பணியிடங்கள் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 35,469 பணியிடங்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெளிப்படைத்தன்மையுடன் பணியிடமாறுதல் கலந்தாய்வு கடந்த 4.5 ஆண்டுகளில் நடத்தப்பட்டு இதுவரை 44,535 பேர் பணியிடமாறுதல் ஆணை பெற்றிருக்கிறார்கள். ஆக இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 80,000 பணியாளர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த துறையில் 0% காலிப்பணியிடம் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கிராம சுகாதார செவிலியர் 2,147 பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளுக்கு பிறகு புதிதாக நியமிப்பதற்குரிய அறிவிப்பாணை (Notification) மிக விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. அதேபோல் 1,030 செவிலிய உதவியாளர்கள் பணியிடங்களும் விரைவில் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களும் மிக விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதன்மூலம் இத்துறையில் காலிப்பணியிடமே இல்லாத நிலை கொண்டு வரப்படும். மருத்துவர்கள் நியமனங்கள் என்பது 4337 என்பது நான் ஏற்கெனவே சொன்னதுபோல நடத்தி முடிக்கப்பட்டு அவரவர் விரும்பும் இடங்களுக்கே சென்று மகிழ்ச்சியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்புமணி அறிக்கை - தொடர்பான பதில்
அந்த அறிக்கையை பார்த்தேன், அவர் ஒரு மருத்துவர், ஏற்கெனவே ஒன்றிய அரசின் மருத்துவத்துறை அமைச்சராக இருந்தவர். தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவர் பணியிடங்கள் இருக்கிறது என்பதை அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த அரசு மருத்துவர் பணியிடங்கள் எண்ணிக்கை 20,000 தான்.
இதில் 12,000 இடங்கள் காலி என்று சொல்கிறார். நான் ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மருத்துவமனைகளுக்கு வருகின்ற மக்களின் பயன்பாடு என்பது மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. நான் மருத்துவர் அண்புமனி அவர்களை கேட்டுக் கொள்வது ஒரு 4.5 வருடம் இந்த ஆட்சியில் 35,000 புதிய பணியிடங்களுக்கான பணி ஆணைகள் தரப்பட்டிருக்கிறது.
44,000 மேற்பட்டவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் விரைவில் அங்கம் பெற இருக்கின்ற அதிமுக கூட்டணியில் இடம் பெற இருக்கிறீர்கள். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது 50% அளவிற்கு கூட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா என்பதை கேட்டுத் தெரிந்து சொல்வது நல்லது. இன்னமும் கூட நீங்கள் அங்கம் பெற இருக்கின்ற பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் இந்தியாவில் உள்ளது.
அங்கேயெல்லாம் தொடர்பு கொண்டு மருத்துவத்துறையில் காலிப்பணியிடங்கள் எத்தனை இருக்கிறது என்று கேட்டுக் கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவத்துறையின் காலிப்பணியிடங்கள் விவரங்களை தெரிந்து கொண்டு அறிக்கை விடுவது நல்லது. மேலும் இந்த நிர்வாகம் நடத்துவதற்கு ஒரு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உதாரணமாக புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. புற்றுநோய் மருத்துவர்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய மருத்துவமனைகளில் இருப்பார்கள். ஒரே இடத்தில் உபரியாக இருக்கின்ற மருத்துவர்கள் 10 பேர் இருக்கிறார்கள் என்றால் 8 பேர் தேவையான மருத்துவமனைகளுக்கு அனுப்புவது நிர்வாக சீர்திருத்தம்.
இந்த நடவடிக்கை தான் Redeployment, இந்த நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு சில மருத்துவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் மருத்துவ சேவை செய்வதற்கு தான் இந்த துறை.
ஒரு மருத்துவமனையில் 2 பேர் பணிசெய்யக்கூடிய இடத்தில் 8 பேர் இருக்கிறார்கள் என்றால் மீதி 6 பேர் தேவையான இடங்களுக்கு மாற்றுவது நிர்வாக சீர்திருத்தம். இது ஒரு பெரிய அறிக்கையாக ஒரு மருத்துவத்துறை அமைச்சராக இருந்தவர் வெளியிடுகிறார் என்பது அந்த நிர்வாகத்தை எப்படி கவனித்திருப்பார் என்று எனக்கு தெரியவில்லை.
பருவமழை - மருத்துவ முகாம்கள் தொடர்பான கேள்விக்கு
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மழைக்கால நோய் பாதிப்புகளுக்கான மருந்துகள் அதற்கான மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மலேரியா, சிக்கன்குனியா போன்ற மழைநோய் பாதிப்புகளுக்கு ஏற்ற வார்டுகள் பணிகள் முடிவடைந்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழையொட்டி நடைபெறுகின்ற மருத்துவ முகாம்களும் அனைத்து இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் அதிகபட்ச மழை என்பது அக்டோபர் இறுதி வாரத்தில் தான் இருந்தது. 30 செமீ அளவிற்கு தான் மழை பெய்திருக்கிறது. மழை வர வேண்டியது 87 செ.மீ. இன்னமும் டிசம்பர் மாதம் 15 தேதி வரை மழை வர வாய்ப்பிருக்கிறது.
இதுவரை சென்னையில் மட்டும் 2,100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தெருவில் அல்லது ஒரு கிராமத்தில் 2 பேருக்கு காய்ச்சல் இருந்தால் கூட மருத்துவ முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பதட்டமான சூழல் என்பது இல்லை. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 25,460 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது.
6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைப்பது தொடர்பான கேள்விக்கு
மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டம் என்பது 6, மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டம் இருக்க கூடாது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்பது முத்தமிழஞர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்திலேயே அறிவித்தார்கள். அந்தவகையில் அன்று கேட்டு பெற்ற பல மருத்துவக்கல்லூரிகள் தான் தற்போது 36 என்கின்ற எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் இருக்கிறது.
புதிய மாவட்டங்கள் என்கின்ற வகையில் 6 மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி தேவை. தென்காசி, பெரம்பலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு மருத்துவக்கல்லூரி தேவை என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
கடைசியாக கடந்த ஜனவரி 02 ஆம் தேதி நானும், இத்துறையின் செயலாளரும் ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.ஜெ.பி.நட்டாஅவர்களை சந்தித்தும் கூட கோரிக்கை வைத்திருக்கிறோம். பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.








