
திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்து அறிவுச்செயல்பாடுகளை முன்னெடுக்கும் இயக்கம் என்பது அனைவராலும் அறியப்பட்டதே.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்ட கழகத்தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில் கழகம் இளைஞர் அணிச்செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்கள், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், `முரசொலி’ பாசறைப் பக்கம், `முத்தமிழறிஞர் பதிப்பகம்’, இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து கருத்தியல் பயிற்சி அளிப்பது, கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம், கலைஞர் நிதிநல்கை திட்டம் ஆகிய கருத்தியல் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75– ஆண்டு நிறைவை முன்னிட்டு, கழக இளைஞர் அணி `தி.மு.க 75 அறிவுத்திருவிழா’ என்னும் மாபெரும் நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தி.மு.க இளைஞர் அணி செயல்படுத்தும் `தி.மு.க 75 – அறிவுத்திருவிழா’ என்னும் மகாத்தான நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலின் முதல் பிரதியை கழகப் பொதுச்செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்த `இருவண்ணக்கொடிக்கு வயது 75’ என்னும் கருத்தரங்கம் பத்து அமர்வுகளுடன் 08.11.25 மற்றும் 09.11.25 ஆகிய இருநாடுகள் நடைபெறுகின்றன.
அதோடு, தமிழ்நாட்டிலேயே முதல் முயற்சியாக மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழ்த்தேசியம், பெண்ணியம் போன்ற முற்போக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் `முற்போக்கு புத்தகக்காட்சி’யைக் கழக இளைஞர் அணி நடைபெறுகிறது. குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் 46 பதிப்பகங்களின் 58 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன இந்த முற்போக்கு புத்தகக்காட்சியில் அனுமதி இலவசம்.






