தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.
விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
இவ்வரசு பொறுபேற்றது முதல், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் விளையாட்டு துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் மேம்படுத்தி, செஸ் ஒலிம்பியாட், ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டிகள், ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் ட்ரோபி ஹாக்கி போட்டிகள், சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி என பல்வேறு போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி
அந்த வகையில், தற்பொழுது 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி, தமிழ்நாட்டில், சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கம் ஆகிய இரு இடங்களிலும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி, தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் போட்டியாகும். இப்போட்டியில் 24 நாடுகளை சேர்ந்த இளம் ஹாக்கி அணிகள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் இப்போட்டிக்கென தமிழ்நாடு அரசு 44.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போட்டிகள் நடத்தப்படுவதால், நம் இளைஞர்களிடையே ஹாக்கி விளையாட்டின் மீதான ஆர்வத்தை பலமடங்கு அதிகரித்திட வாய்ப்பாக அமையும். மேலும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஹாக்கி அணிகள் மற்றும் பார்வையாளர்கள், தமிழ்நாட்டின் குறிப்பாக போட்டிகள் நடைபெறும் சென்னை மற்றும் மதுரை நகரங்களின் கலாச்சாரச் செழுமை, விருந்தோம்பல் மற்றும் விளையாட்டின் மீதான நமது ஈடுபாட்டை நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். வெற்றிகரமாக நடத்தப்படும் இப்போட்டிகளின் வாயிலாக தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தும் நமது திறனையும் உலகிற்கு வெளிப்படுத்த வாய்ப்பாக அமையவுள்ளது.








