
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று (3.11.2025) வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம்;
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 66,106 மாணவ, மாணவிகள் பயன்பெற்று உள்ளனர். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இதுவரை மொத்தம் 4,95,325 நபர்களுக்கு தொடர் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டத்தின்கீழ் 14,167 நபர்களுக்கு 14.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்காக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 7.5.2021 முதல் இன்று வரை 85,439 நபர்களுக்கு 158.05 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பில் 6,211 பயனாளிகளுக்கு 217.39 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்ட பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 2,954 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,
நம்முடைய அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் பல முற்போக்கான திட்டங்களின் மூலமாக இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய பெருவாரியான மக்களிடையே நம்பிக்கையை பெற்றிருக்கிறது. மக்களுடைய பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கு தொடர்ந்து அது வழிவகுத்து வருகின்றது.

மக்களுடைய அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அவர்களுடைய கோரிக்கைகளும் விடுபடலின்றி நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம்களை நடத்தி மக்களிடமிருந்து மனுக்களையெல்லாம் பெற்று, அவற்றையெல்லாம் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகள் வழங்கும்போது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளுடைய பிரதிநிதிகள் மூலம் அதையெல்லாம் மக்களுக்கு வழங்குமாறு உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.
அதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது தான் முதலமைச்சர் அவர்களுடைய நோக்கம். தகுதியானவர்கள் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்ற எண்ணத்துடன் மனுக்களை நீங்கள் அணுகுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.
சென்னை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கெல்லாம் இப்போது தீர்வு காணப்பட்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டு, சென்னை, திருள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாக்களை நானே சென்று வழங்கி இருக்கின்றேன்.
அந்த முறையில், அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்பகுதிகளில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள பட்டா தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணுகின்ற வகையில் சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் CLAக்கு அனுப்பப்படும் முன்மொழிவுகள் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் அந்த குழு கூடி பட்டா வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் CLA அலுவலகத்தை தொடர்பு கொண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட முன்மொழிவுகள் குறித்த விவரங்களை கேட்டு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதன் மீதான அறிக்கையை உடனடியாக சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த ஆய்வில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மீதும், எடுக்கப்படுகின்ற நடவடிக்கை குறித்தும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்.
நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற இலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தேதிக்குள் இந்த பணிகளையெல்லாம் முடிப்போம் என்று கூறி இருக்கின்றீர்கள். அதை மனதில் வைத்து உங்களுடைய பணிகளையெல்லாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, முதலமைச்சர் அவர்களுக்கும் இந்த அரசுக்கும் ஒரு நற்பெயரை மக்களிடத்தில் ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு, நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.






