
ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான இறுதிப்போட்டி இன்று (பிப்ரவரி 06) நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் தொடக்க வீரராக களமிறங்கிய ஆரோன் ஜார்ஜ் அரையிறுதி ஆட்டத்தில் சதம் அடித்திருந்ததால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அவருடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்ய வன்ஷி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டு வெறும் 55 பந்துகளில் சதம் அடித்து அதிரடி காட்டினார். மொத்தமாக 80 பந்துகளில் 15 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 175 ரன்கள் ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இது இரண்டாவது அதிவேக சதம்.
மேலும், U19 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இந்தியரின் அதிவேக சதமாக வைபவ் சூர்யவன்ஷியின் சதம் இடம் பிடித்தது. இதற்கு முன்னதாக 2022ம் ஆண்டு உகாண்டாவிற்கு எதிராக இந்திய வீரர் ராஜ் அங்கத் பாவா 69 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை இன்று முறையடித்து மிரட்டியுள்ளார் சூர்ய வன்ஷி. இதனை தொடர்ந்து U19 உலகக் கோப்பை தொடரில் 15 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 14 சிக்சர்கள் அடித்த தனது சாதனையை தானே முறியடித்துள்ளார் சூர்ய வன்ஷி.

அதேபோல், U19 உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும், U19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 150 ரன்கள் முதல் வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளார் சூர்ய வன்ஷி.
இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள், வேதாந்த் திரிவேதி 32 ரன்கள், விஹான் மல்கோத்ரா 30 ரன்கள், அபிக்யான் 40 ரன்கள் என எடுத்தனர். மொத்தமாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இந்த இலக்கை எட்டி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா அல்லது இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.






