
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (1.11.2025) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தாட்கோ திட்டத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலாவதாக காரப்பாக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியில், ஒக்கியம் மடுவு கால்வாயில் நீர்வளத்துறையின் சார்பில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஒரு பகுதியாக மடுவின் கரைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளதையும், நீர் தடை இன்றி செல்வதையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ராஜீவ் காந்தி நெடுஞ்சாலை அருகே ஒக்கியம் மடுவின் கீழ் பகுதியில், மடுவில் மேற்கொண்ட தூர்வாரும் பணிகள் மற்றும் வலது கரை சீரமைப்பு பணிகளால் நீர் தடையின்றி செல்வதையும், ஒக்கியம் மடுவின் மேல்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி பகுதியில் பணிகள் நடைபெற்று வருவதையும், நீர் தடையின்றி செல்வதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கண்ணகி நகர் பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஒரு பகுதியாக ஒக்கியம் மடுவின் இடது புறத்தில் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் இயந்திரங்களின் உதவியுடன் விரைவாக நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் கண்ணகி நகரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், கண்ணகி நகர் பகுதியில் கபடி விளையாட்டு போட்டியில் ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் 75.00 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பார்வையாளர் மாடம், உடற்பயிற்சி கூடம், பயிற்சியாளர் அறை, ஓப்பனை அறை மற்றும் செயற்கை தளத்துடன் கூடிய இரண்டு ஆடுகளங்கள் உள்ளடக்கிய கபடி உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கப்பதக்கம் வென்ற கபடி வீராங்கனை செல்வி கார்த்திகா ரமேஷ் மற்றும் பயிற்சியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் இருந்து வெள்ளநீரை பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், செம்மொழி சாலை எல்காட் பகுதியில் இருந்து 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் இரண்டு கண்கள் கொண்ட பெரிய அளவிலான வெள்ள நீர் கடத்தி மூடு கால்வாய் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சோழிங்கநல்லூர் பகுதியில் சதுப்பு நிலத்தில் நீர் எளிதாக செல்லவதற்காக, மேடவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரை இணைக்கின்ற வகையில் எல்காட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை பார்வையிட்டதுடன், மழைக்காலத்தில் வெள்ள நீர் தடையின்றி எளிதில் செல்லும் வகையில் பழைய பாலத்தை இடிக்கும் பணிகளை பார்வையிட்டு, விரைவாக இடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும், சீரமைக்கவும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அறிவுறுத்தினார்.






