தமிழ்நாடு

சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !

சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீபகாலமாக தெருநாய்கள் தொல்லைகள் அதிகரித்துள்ள நிலையில், அதனை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னையில் மாநகராட்சி சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 1,00,347 தெரு நாய்களுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம் :

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை, அறிவிப்பு எண்:20ன் படி வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொது மக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் திட்டம் 09.08.2025 அன்று மேயர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கென 1,80,000 வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திடமிருந்து கொள்முதல்செய்யப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக, கோட்டம் வாரியாக தெரு நாய்களை அவை வசிக்கும் தெருக்களுக்கே சென்று தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் சுமார் 150 பயிற்சி பெற்ற நாய் பிடிக்கும் பணியாளர்கள் மூலம் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !

இதன்படி நாய் பிடிக்கும் பணியாளர்கள் வலைகளை கொண்டு நாய்களை பிடித்த பின்னர் கால்நடை மருத்துவரால் அவற்றிற்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்படும். பின்னர் அந்த நாய்களுக்கு வண்ண சாயம் (Vegetable dye) தெளித்து அடையாளப்படுத்தி அவை மீண்டும் அதே இடத்திலேயே விடுவிக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு முகாம்களின் வாயிலாக இதுவரை திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு. வி.க நகர், தேனாம்பேட்டை, ஆலந்தூர், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய 10 மண்டலங்களில் இப்பணி நிறைவு பெற்றுள்ளது.

அவ்வாறாக, 31.10.2025 அன்று வரை திருவொற்றியூர் மண்டலத்தில் 9,496, மணலி மண்டலத்தில் 5,174, மாதவரம் மண்டலத்தில் 11,671, இராயபுரம் மண்டலத்தில் 8,211, திரு. வி.க நகர் மண்டலத்தில் 10,576, அண்ணா நகர் மண்டலத்தில் 2,942, தேனாம்பேட்டை மண்டலத்தில் 7,088, கோடம்பாக்கம் மண்டலத்தில் 5,534, ஆலந்தூர் மண்டலத்தில் 3,726, அடையாறு மண்டலத்தில் 7,937, பெருங்குடி மண்டலத்தில் 8,997, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 8,492 என 10 மண்டலங்களில் மொத்தம் 1,00,347 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது, அண்ணா நகர், கோடம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அம்பத்தூர் மற்றும் வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து விரைவில் அளிக்கப்படவுள்ளது.

வெறிநாய்க்கடிநோய் இல்லாத சென்னை என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

banner

Related Stories

Related Stories