
Devil in the details எனும் தலைப்பில் தி இந்து ஆங்கில நாளிதழ் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிக்கடி இடம்பெயர்வு, உயிரிழந்த வாக்காளர்கள் போன்ற விவரங்களை சரிபார்த்து திருத்தம் செய்வதே இதன் நோக்கம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தெளிவற்றதாக உள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இத்தலையங்கம், பீகாரில் ஏற்பட்ட அனுபவம், இந்த நடவடிக்கையால் கணிசமான மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வாக்காளர்களின் உரிமை மற்றும் ஆட்சேபனைகளுக்கு விடை காண போதிய அவகாசத்தை தரவில்லை என்றும் இத்தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீகாரில் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டதால் இறுதி வாக்காளர் பட்டியலில் வெளிப்படையான பல முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், ஆண்களே அதிக அளவில் இடம்பெயரும் நிலையில், அதிக அளவில் பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதையும் தி இந்து சுட்டிக்காட்டி உள்ளது.
தேர்தல் நேரத்தில், பிரச்சாரப் பணிகளில் அரசியல் கட்சிகளிள் உள்ளூர் நிர்வாகிகள் கூடுத்ல் கவனம் செலுத்தும் கட்டாயம் உள்ளதால், தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இருப்பதை சரிபார்த்து உறுதி செய்வது சிரமமான பணி என்றும் இத்தலையங்கம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பின், நீக்கப்பட்ட பலர் வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டதாகவும் தி இந்து குறிப்பிட்டுள்ளது.
வட்டார தேர்தல் அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் போது, வேலை காரணமாக வெளியூர் சென்றவர்கள் வீடுகளில் இல்லை என்றால், அவர்கள் வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும்,விடுபட்டவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் குறிப்பிடத்தக்க பயன்ககள் ஏற்படாது என்றும் டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துவதில் மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை தேர்தல் ஆணையம் கணகிக்கில் கொள்ளாதது சாதாரண வாக்காளர்கள் மீது கூடுதல் சுமைகளை ஏற்றுவதாக உள்ளது என்றும் இத்தலையங்கம் விமர்சித்துள்ளது.
சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, நாட்டின் ஜனநாயகம் பாதிக்கப்படாமல் இருப்பதை சிவில் சமூகமும், ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் விழிப்புடன் இருந்து உறுதி செய்ய வேண்டும் என்றும் தி இந்து தலையங்கம் வலியுறுத்தி உள்ளது.






