இன்றைய சட்டப்பேரவையில், தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்தம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு அமைச்சர் கோவி.செழியன் பேசியது வருமாறு:-
புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்றால், ஒட்டுமொத்தமாக இதுவரை ஊராட்சிப் பகுதி, நகராட்சிப் பகுதி, மாநகராட்சிப் பகுதி என்று வேறுபாடு இல்லாமல் 100 ஏக்கர் பரப்பளவு ஒரே இடத்தில் இருக்க வேண்டுமென்று வரையறை இருந்தது. அதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்று வகை காணப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் உயர்கல்வித் துறையை நாம் உயர்ந்த இடத்தில் எடுத்துச் செல்வதற்கான அடையாளங்கள்.
அதோடு, அண்டை மாநிலங்களில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க பல்வேறு நிலைப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அது கல்வியாளர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, அசாம் மாநிலத்தில் நகராட்சிப் பகுதியில் 20 ஏக்கர், மற்ற பகுதியில் 10 ஏக்கர் என்றும், கர்நாடக பகுதியில் மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கர், உத்தரப்பிரதேசத்தில் நகராட்சிப் பகுதியில் 25 ஏக்கர், கிராமப்புற பகுதியில் 50 ஏக்கர் என்று அண்டை மாநிலத்தில் உயர்கல்வியினுடைய வளர்ச்சிக்கு தனியார் பல்கலைக்கழங்கள் துவங்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் எடுத்துச்சொன்னதைப்போல, அண்டை மாநிலத்தினுடைய உயர்கல்வியின் வளர்ச்சியில் நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கெடுக்காமல் தாய் மண்ணிலேயே உயர்கல்வி காண வேண்டுமென்று விரும்புகிற முதலமைச்சர் நம்முடைய தன்னிகரில்லாத முதலமைச்சர் அவர்கள்; அதனால்தான் மாணவர் நலன் காக்க பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து செய்த வண்ணம் இருக்கிறார்கள். அதோடு தனியாரை ஊக்கப்படுத்துவதற்கா என்ற எண்ணத்தை இங்கு உருவாக்கினார்கள்.
மாநில நலன் காத்திடவும், நமது மாணவர்களுடைய உயர்கல்வியில் பாதிக்கப்படாமல், அதிலும் ஆராய்ச்சிக் கல்வியாக உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற திருத்தங்களை நாம் மேற்கொண்டு வருகிறோம். அதோடு இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து என்ற நிலையை, அன்பழகன் அவர்கள் இங்கே கருத்து தெரிவித்தார்கள்.
இடஒதுக்கீடு கொள்கையில் பிதாமகன் ஆளுகிற மாநிலம், இந்தியாவில் உண்டு என்றால் அது முதலிடம் நம்முடைய தமிழ்நாடுதான். எனவே, தனியார் பல்கலைக்கழகங்களில் 35 சதவிகித இடங்களை, தமிழ்நாடு மாணவர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்ற வார்த்தைகள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சிறுபான்மையினர் அல்லாத நிறுவனங்கள் 65 சதவிகிதம் உள்ளது. தற்போது சிறுபான்மையினர் கல்லூரிகள் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒப்படைக்கவேண்டுமென்று சட்டத்திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவைகளெல்லாம் உயர்கல்வியில் உயர்ந்த நிலைக்கு நாம் எடுத்துசெல்வதற்கான சாத்தியக்கூறுகள்தான். அரசு உதவிபெறும் கல்லூரிகள் பாதிக்கப்படுமா? மாணவர்கள் நலன் பாதிக்கப்படாத என்ற நிலையில் மாண்புமிகு உறுப்பினர் இங்கே எடுத்துச்சொன்னார். எந்த நிலையிலும் தனியாருக்கு தாரைவார்க்க வேண்டுமென்ற எண்ணம் உயர் கல்வியில் இல்லாத நிலையில் அனைத்து நிலையில் இருக்கிற ஏழையெளிய மக்கள் உயர்ந்த நிலைக்கு செல்லவேண்டுமென்பதற்கு, அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும், பல்கலைக்கழகங்களாக மாறும்போது அரசு உதவிபெறும் என்ற நிலை மாற்றப்படும்.
எனவே, இந்த வரையறையெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள மசோதா மாண்புமிகு உறுப்பினர் இங்கே இடத்தினுடைய விலையை சொல்லி, 100 ஏக்கர் நிலம் கிடைக்காது, எனவே, அந்த நிலப்பரப்பின் அளவை குறைத்திடவேண்டும் என்ற கருத்தை ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்களும், கு. செல்வபெருந்தகை அவர்களும்,முனைவர் த. இனிகோ இருதயராஜ் அவர்களும், திரு. இராஜேந்திரன் அவர்களும் குறிப்பிட்டு சொன்னார்கள். அந்தவகையில் ஊரகப் பகுதியில் இருக்கவேண்டிய 50 ஏக்கர் நிலப்பரப்பை 45 ஏக்கர் நிலமாக, அந்த நிலப்பரப்பையும் குறைத்து, உயர்கல்விக்கு உயர்ந்து செல்வதற்கான, வழிவகைகளுக்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினர்கள் அனைவருக்கும், இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்து, உறுப்பினர் இறுதியாக சொன்னதைபோல் தந்தை வழியை பின்பற்றி, நீங்கள் இந்த மசோதாவில் கவனம் காட்டுகிறீர்கள் என்று சொன்னார்.
இந்த அவைக்கு சொல்கிறேன், தந்தை வழியை பின்பற்றி, தமிழ்நாட்டில் மாநில சுயாட்சியை கட்டி காக்கின்ற தீர்மானத்தை இன்றைக்கும் கொண்டு வந்த, ஒரு வீர திருமகன், மாண்புமிகு முதலமைச்சர், முதலமைச்சராக இருக்கும் வரை உயர்கல்வி உயர்ந்த நிலையில் இருக்கும் என்பதை எடுத்துச்சொல்லி, மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றி தருமாறு பணிந்து கேட்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.