”இன்ஸ்டாகிராமில், ரீல்ஸ்க்கு அரசியல் செய்ய வேண்டிய சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அ.தி.மு.கவை திருட்டுக் கடையாக மாற்றிய பெருமை எடப்பாடி பழனிசாமியையே சாரும். மக்களிடம் சென்று கேளுங்கள் அரசின் நலத்திட்டங்களைப் பற்றி அவர்களே உங்களுக்கு பதில் சொல்வார்கள்” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் சிவசங்கர், ”எதிர்க்கட்சித் தலைவர் அதிமுகவின் பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.
அவருடைய நிலைமை இவ்வளவு மோசமாக போகும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டார். சட்டமன்றத்தில் பேச வேண்டியவர்; மக்கள் மன்றத்தில் பேச வேண்டியவர்; சட்டமன்ற அரசியல் - மக்கள் மன்ற அரசியலைத் தாண்டி தற்போது கடைசியாக இன்ஸ்டாகிராம் - ரீல்ஸ்க்கும் அரசியல் செய்ய வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுவிட்டார் என்பதுதான் பாவமாக இருக்கிறது. ஒரு அல்வா பாக்கெட்டை வைத்துக்கொண்டு உருட்டுக்கடை அல்வா என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார். அவர்தான் இன்று திருட்டுக்கடை பழனிசாமியாக இருக்கிறார்.
அதிமுக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு எப்படி இவர் கைக்கு வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த அதிமுக என்ற கம்பெனியை சசிகலாவிடமிருந்து லீசுக்கு எடுத்து நடத்த ஆரம்பித்தவர் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு திருட்டு கடை தனக்கு கைப்பற்றினார். அதற்குப் பிறகு டிடிவி தினகரனை ஏமாற்றினார். அவரிடம் இருந்து கைப்பற்றினார். அதற்கு பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் ஒரு கூட்டணி வைத்துக்கொண்டு நீ பாதி நான் பாதி கண்ணே... என்று ஒரு பார்ட்னர்ஷிப் ஆரம்பித்து ஐந்து வருடம் கழித்தார். அதற்கு பிறகு அவரையும் ஏமாற்றினார். அவரிடம் இருந்தும் தட்டி தூக்கினார். திருட்டு கடை…
இதெல்லாம் முடிந்தது. எதிர்க்கட்சியானார். ஒரு ஐவர் அணியை உடன் வைத்துக்கொண்டு சுற்றினார். அதற்கு பிறகு இருவரணி ஆகிவிட்டது. அந்த ஐவரணியையும் ஏமாற்றி திருட்டு கடையை வேலுமணி, தங்கமணி என்ற இருவரை மட்டுமே தன் உடன் வைத்துக்கொண்டு இருவர் அணியாக வைத்துக் கொண்டிருந்தார்.
தற்போது கடைசியாக டெல்லிக்கு சென்ற பிறகு என்ன ஆனார்? அந்த இருவர் அணியையும் கழற்றிவிட்டு தன்னுடைய திருமகன் மிதுன் பழனிசாமியை மட்டும் வைத்துக்கொண்டு இன்றைக்கு அவர் செல்கிறார். இப்படி அதிமுகவை ஒரு திருட்டுக்கடை போல எல்லோரிடமும் கைப்பற்றி இருக்கின்றவர் - திமுகவை பார்த்து உருட்டுக்கடை என்று சொல்வது எவ்வளவு வேதனையாக இருக்கிறது.
திமுக என்ன செய்திருக்கிறது? என்று - மகளிர் உரிமைத் தொகை பெறும் ஒரு கோடியே 15 இலட்சம் பேரிடம் சென்று கேட்டுப்பார்க்கட்டும். உண்மையாக அந்த திட்டம் நடைபெறுகிறதா? உருட்டா? என்று…
புதுமைப் பெண் திட்டத்தில் கல்லூரியில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களிடம் சென்று கேட்கட்டும் இது உருட்டா? உண்மையா? என்று...
தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்கள் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களைச் சென்று கேட்கட்டும் உருட்டா? உண்மையா? என்று...
காலை உணவு திட்டம் - பயிலும் பிள்ளைகளிடம் சென்று கேட்கட்டும். இப்படி நடக்கின்ற திட்டங்களை எல்லாம் மறைத்துவிட்டு நீட் ஏன் இரத்தாகவில்லை? கல்வி கடன் ஏன் இரத்தாகவில்லை? என்று கேட்கிறார். இதெல்லாம் ஒன்றிய அரசின் அதிகாரத்தில் வருவது என்பது அவருக்கு தெரியும்.
தெரியவில்லை என்றால், அவர் ஏன் முதலமைச்சராக இருக்கிறார் என்ற கேள்வியே வரும். எதையெல்லாம் உண்மையோ அதையெல்லாம் மறைத்துவிட்டு எதையெல்லாம் கதை கட்டலாமோ அதையெல்லாம் வைத்துக் கொண்டு கதை விடுகிறார்.
இவருக்கு என்ன உருட்டுகடை என்றால், இவர்கள் கொடுத்த வாக்குறுதி பெண்களுக்கு செல்போன் கொடுப்போம் என்று கூறியது - இரு சக்கர வாகனம் கொடுப்போம் என்று கூறியது - இதுபோன்று பெரிய பட்டியல் இருக்கிறது. இவர்கள் உருட்டிய உருட்டு.
எனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிக் காட்டிய அரசு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு. இன்றைக்கு இவரை பார்த்து விடியல் பயணம் திட்டத்தை வழங்கி இருப்பதை பார்த்து அருகில் உள்ள மாநிலங்களில் எல்லாம் ஒவ்வொரு மாநிலமாக அமல்படுத்தி வருவதை நாம் பார்த்தோம்.
காலை உணவு திட்டத்தை இங்கு வந்த பஞ்சாப் மாநில முதல்வர் பகவத்ந் மான்சிங் அவர்கள் பாராட்டினார். நான் எங்கள் மாநிலத்திலும் அமல்படுத்த போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். தெலுங்கானா மாநில முதல்வர் மாண்புமிகு ரேவந்த் ரெட்டி அவர்கள் எங்கள் மாநிலத்திலும் நாங்கள் அமல்படுத்த போகிறோம் என்று அவர் கூறினார். இப்படி வெளிப்படையாக இங்கு வருகின்ற முதலமைச்சர்கள் பொதுவெளியில் மக்கள் முன்பே சொல்கிறார்கள்.
நம்முடைய மாநிலத்தின் முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் மிகச் சிறப்பான திட்டங்கள் என்று சொல்கிறார்கள். நாங்களும் அந்த வழியை பின்பற்றப் போகிறோம் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு முதலமைச்சராக இருக்கும் முதலமைச்சரை கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டு கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு இவர் இன்றைக்கு இந்த அரசியலை செய்கிறார். அதுவும் உண்மையான அல்வா அல்ல. அதில் பஞ்சு இருக்கிறது என்று வீடியோ பார்த்து பிறகுதான் தெரிந்தது. கடைசியில் அதுவும் திருட்டு அல்வாவாக தான் இருக்கிறது.
இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அரசியல் அவருக்கு ஏன் வந்தது என்றால் சேர்வார் தோஷம். தற்போது அவர் யாரிடம் சேர்ந்து இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். அங்கு இருக்கின்ற சிறு பிள்ளைகள் பள்ளி பிள்ளைகள் இன்ஸ்டாகிராமில் போடுவதை பார்த்துவிட்டு அதில் ஒருவர் கேட்டார். அந்த நீதிபதிக்கு கூட பின்பற்றுபவர்கள் இல்லை. எங்களுக்கு தான் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்று... அதுபோன்று அந்த பின்பற்றுபவர்களுக்கு போட்டியாக பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராமிலும், ரீல்ஸிலும் அதிகப்படுத்துவதற்கு ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார்.
எனவே, நான் எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லிக் கொள்கிறேன். திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டு கால வரலாறு உள்ள கழகம். ஒரு மகத்தான இயக்கம். நவீன தமிழகத்தை உருவாக்கிய தலைவர் கலைஞர் தலைமையில் இயங்கிய இயக்கம். இந்தியாவிலேயே ஒரு பெரிய சமூக கட்டமைப்புடன் அடிப்படை கட்டமைப்புடன் இருக்கிறது என்றால் அது தமிழ்நாடு தான் என்பதை மற்ற மாநிலத்தவர் பாராட்டுகிறார்கள் என்றால் அத்தனைக்கும் காரணம் இந்த திராவிட முன்னேற்ற கழகம்.
இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் எள்ளி நகையாடுவதால் நீங்கள் பெரியளாக ஆகிவிட முடியாது. இது உங்கள் கட்சியை நிறுவிய மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆரை பார்த்த கட்சி. உங்கள் கட்சியின் முன்னாள் முதல்வராக இருந்த மறைந்த அம்மையாரின் பார்த்த கட்சி. நீங்கள் எல்லாம் பழனிசாமி எல்லாம் எம்மாத்திரம். ஏதோ காலக்கோளாறு கம்பெனியை தங்களிடம் லீசுக்கு கொடுத்துவிட்டு சிறைக்குச் சென்ற காரணத்தினால் இன்றைக்கு அதிமுக என்ற திருட்டு கடையை திருட்டுத்தனமாக கைப்பற்றி கையில் வைத்துக் கொண்டு திமுகவை எள்ளி நகையாடுகிற இந்த பணியை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு மேல் இந்த வேலையில் இறங்க கூடாது" என தெரிவித்துள்ளார்.