தமிழ்நாடு

“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மலரினை வெளியிட்டார்.

“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (10.10.2025) சென்னை இராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை டி.என்.இராசரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மலரினை வெளியிட வே.ஆனைமுத்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெற்றுக் கொண்டனர். 

இந்த விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை :-

இன்றைக்கு அறிஞர் அய்யா ஆனைமுத்து அவர்களுடைய நூற்றாண்டு விழா மற்றும் மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன், பெருமையடைகின்றேன்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்ற வாய்ப்பை எனக்கு அளித்த அண்ணன் ஆ. இராசா அவர்களுக்கும், அமைச்சர் அண்ணன் சிவசங்கள் அவர்களுக்கும், அண்ணன் வாலாசா வல்லவன் அவர்களுக்கும் முதலில் என்னுடைய நன்றியை அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு பெரியாருடைய தொண்டன், பெரியாருடைய மாணவனாக நான் கலந்து கொள்ளவதில் பெருமைப் படுகின்றேன். 

அண்ணன் வாலாசா வல்லவன் அவர்கள் பேசும்போது, குறிப்பிட்டு பேசினார்.  துணை முதலமைச்சர் அவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கிறது. பல கூட்டங்களில் பங்கேற்று பேசிக்கொண்டிருக்கிறார்.  இருந்தாலும் எங்களுக்கு நேரம் ஒதுக்கி இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு  நன்றி என்று குறிப்பிட்டு,  என்னை அந்நியப்படுத்தி பேசிவிட்டார்.

எத்தனையோ அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் இருந்தாலும்,  அது எல்லாத்தையும் விட மிக, மிக முக்கியமான நிகழ்ச்சியாக நான் கருதுவது இன்றைக்கு இந்த அரங்கத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடிய அறிஞர் ஆனைமுத்து அவர்களுடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சி. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய தாய் வீட்டிற்கு நான் வருகை தந்திருக்கின்றேன். அந்த வாய்ப்பை அளித்த உங்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கே மேடையில் இருக்கக்கூடிய பலபேர் கவிஞர்கள், பேச்சாளர்கள் பலபேருடைய உரையை நான் பலமுறை கேட்டு ரசித்து இருக்கின்றேன். வியந்திருக்கின்றேன். இந்த நிகழ்ச்சியிலும் கடைசிவரை இருந்து உங்கள் அத்தனைபேருடைய பேச்சுக்கள், கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு இருந்து கொண்டிருக்கின்றேன்.

இருந்தாலும், அடுத்தடுத்த பணிகள், கூட்டங்கள் இருப்பதால் உங்களுடன் இருக்கமுடியாத ஒரு சூழ்நிலை, எனினும், இன்று இரவுக்குள் நிச்சயமாக நீங்கள் பேசுவதை எல்லாம் சமூக வலைதளங்கயில் Youtube-இல் கேட்டு அதை உள்வாங்கி கொள்வேன் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அண்ணன் வாலாசா வல்லவன் உள்ளிட்ட அத்தனைபேருக்கும் முதலில் என்னுடைய பாராட்டுக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!

சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் 1925 ஆம் ஆண்டில் தொடங்கினார். அதே 1925 ஆம் ஆண்டில் தான் அய்யா ஆனைமுத்து அவர்களும் பிறந்தார். இப்போது 2025 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். அய்யா ஆனைமுத்து அவர்களுடைய நூற்றாண்டு விழாவையும், சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழாவோடு சேர்த்து நாம் கொண்டாடி கொண்டிருக்கின்றோம்.

அய்யா ஆனைமுத்து அவர்களுக்கு நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்தின்  மீதும் டாக்டர் கலைஞர் மீதும் எப்போதுமே ஒரு தனிபிரியம், தனிப்பாசம், தனி அன்பு உண்டு. தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துக்களை ஒவ்வொரு தலைப்பாக தொகுத்து பெரியார் ஈவெரா சிந்தனைகள்  என்கின்ற நூலாக அய்யா ஆணை முத்து அவர்கள் கொடுத்திருக்கிறார்.

1974-ல் அன்றைய முதலமைச்சராக இருந்த
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அய்யா ஆனைமுத்து தொகுத்த, ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ முதல் பதிப்பை வெளியிட்டு சிறப்பித்தார். 

அதுமட்டுமல்ல, அண்ணன் வாலாசா வல்லவன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டு சொன்னார். அந்த தொகுப்புகளுடைய மறுபதிப்பையும், 2010-ஆம் ஆண்டு, அண்ணா அறிவாலயத்தில்
நம்முடைய கலைஞர் அவர்கள் தான் வெளியிட்டார்கள். அந்த விழாவில் நம்முடைய முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

எனவே கலைஞர் அவர்களுடைய பேரனாக மட்டுமல்ல, இன்றைக்கு நான் பெரியாருடைய பேரனாக, பேரறிஞர் அண்ணா அவர்களின் பேரனாக,  பெரியவர் ஆனைமுத்து அவர்களின் கொள்கை பேரனாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு நான் மிகுந்த பெருமை அடைகின்றேன். 

பெரியாருடைய தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. பெரியாரின் தொண்டர்கள் எல்லாரும் சொல்வார்கள், துறவிகளைவிட தூய்மையானவர்கள், துறவிகளைவிட என்று சொல்வார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் அய்யா ஆனைமுத்து அவர்கள்.

1956-இல் தான் செய்து வந்த பணியை விட்டுவிட்டு,
பெரியாருடைய கொள்கைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்தான் அய்யா ஆனைமுத்து அவர்கள்.

‘சிந்தனையாளன்’ இதழை தொடங்கி தனது இறுதி காலம் வரை அந்த இதழை நடத்தி வந்தார். இப்போது, அந்த இதழை, ‘புதிய சிந்தனையாளன்’ என்ற பெயரில் நம்முடைய அண்ணன் வாலாசா வல்லவன் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்.

கலைஞர் அவர்கள் ஆனைமுத்து அய்யா அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார். தந்தை பெரியாருடைய சிந்தனைகளைப் போல, பேரறிஞர் அண்ணா அவர்களுடைய சிந்தனைகளையும் நீங்கள் தொகுத்து புத்தகமாக வழங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

அய்யா ஆனைமுத்து காலத்தில் அது நடக்கவில்லை என்றாலும், புலவர் செந்தலை கவுதமன் அவர்கள், ‘அண்ணா அறிவுக்கொடை’ என்று அண்ணாவின் எழுத்துக்கள், பேச்சுக்கள் அனைத்தையும் தொகுப்பாக கொண்டு வந்திருக்கின்றார்.

அய்யா ஆனைமுத்து அவர்கள், எழுத்துப் பணியோடு மட்டும் நிற்கவில்லை. களப்பணியிலும் ஈடுபட்டவர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பீகார், டெல்லி போன்ற வட மாநிலங்களுக்குச் சென்று சமூகநீதிக்காக குரல் கொடுத்திருந்தார். 

“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!

வடமாநிலங்களில் பல தலைவர்களை சந்தித்து மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்தார் அய்யா ஆனைமுத்து அவர்கள். இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு அய்யா ஆனைமுத்து அவர்களுடைய உழைப்பை யாராலும் மறுக்கமுடியாத, மறக்க முடியாதது. மிக, மிக முக்கியமானது.

அய்யா ஆனைமுத்து போன்ற பெரியாருடைய தொண்டர்கள் இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க நிரம்பி இருக்கின்றார்கள். எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் சமூகத்திற்காக, மக்களுக்காக தங்களை அர்பணித்து உழைத்து கொண்டிருக்கிறார்கள்.  அதற்கு இந்த மேடையே மிகச் சிறந்த உதாரணம். 

அண்ணன் சு.ப.வீ அவர்கள், அக்கா அருள்மொழி அவர்கள்,
அண்ணன் கோவை இராமகிருஷ்னன், அண்ணன் கொளத்தூர் மணி  என அத்தனைப் பேரும், இன்றைக்கு தங்களுடைய வாழ்க்கையையே பெரியாருடைய கொள்கைக்காக அர்ப்பணித்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெரியார் தொண்டர்களுடைய அந்த தன்னலமில்லாத உழைப்புதான் இன்றைக்கு தமிழ்நாட்டை சுயமரியாதையுள்ள மண்ணாக வைத்து இருக்கின்றது. பக்கத்தில் இருக்கக்கூடிய உங்களுக்குத் தெரியும். கிண்டியில் இருக்கக்கூடியவர் தமிழ்நாட்டினுடைய ஆளுநர் ரவி என்று ஒருத்தர் இருக்கின்றார். நம்முடைய நண்பர்தான் அவர். அவர் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். அவர் பாசிச பாஜகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு, நமக்கும் செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு மூன்று நாட்களுக்கு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று எங்கு பார்த்தாலும் இருக்கிறது. யாரை எதிர்த்து போராட போகிறீர்கள் என்று கேள்வி கேட்டிருக்கிறார். நான் ஏற்கனவே அவருக்கு ஒரு பதிலை சொல்லியிருக்கின்றேன். ஆளுநர் ரவி அவர்களே உங்களோடு தான் தமிழ்நாடு போராடும். உங்களை வென்று காட்டுவோம்.

பெரியாரின் தொண்டர்கள் நிறைந்திருக்கிற இந்த அரங்கத்தில் நான் இன்னும் அழுத்தம் திருத்தமாக சொல்ல விரும்புகின்றேன். மாநில உரிமைக்காக தமிழ்நாடு போராடும், சமூகநீதியை காக்க தமிழ்நாடு என்றும் போராடும், மதவெறியை, சாதிவெறியை எதிர்த்து தமிழ்நாடு நிச்சயம் போராடும், இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு தொடர்ந்து போராடும், ஒரே வரியில் சொன்னால் ஒன்றிய பாசிச பாஜகாவை எதிர்த்து தமிழ்நாடு என்றைக்கும் போராடும்.

இன்றைக்கு ஆளுநர் ரவி அவர்கள் பேசும்போது குறிப்பிட்டு பேசினார். அவர் தமிழ் கத்துக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாராம். தமிழ்நாடு போராடாமல் இருந்திருந்தால், ஆளுநர் ரவி அவர்கள் இன்றைக்கு தமிழில் பேசியிருக்க மாட்டார். நாம் தான் இந்தியில் பேசியிருப்போம்.

இன்றைக்கு இந்தி திணிப்புக்கு எதிரான உணர்ச்சியை, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கியவர் தான் தந்தை பெரியார் அவர்கள். 1937 இல் தந்தை பெரியார் தான் இந்தி திணிப்புக்கு எதிரான முதல் போராட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். அப்போது தொடங்கி இப்போது வரைக்கும் எப்படியாவது தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சி செய்கின்றது ஒரு கும்பல்.

சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டில் திணிக்க பார்த்தது. மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏற்றுக்கொண்டது. ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் மட்டும் அதற்கு குறுக்கே நின்றார். ஏன் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால், தமிழ்நாட்டிற்குள் குறுக்கு வழியில் இந்தியை திணிப்பை மீண்டும் கொண்டு வருவீர்கள். இந்தியை மட்டுமல்ல சமஸ்கிருத்தையும் கொண்டு வந்து விடுவீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தார். 

ஒன்றிய பள்ளிக் கல்வித்துறையினுடைய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதி 2,500 கோடியை தமிழ்நாட்டிற்கு கொடுக்க மாட்டோம் என்று சொன்னார் .

ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மிகுந்த தெளிவோடு நீங்கள் புதிய கல்வி கொள்கை மூலமாக இந்தியை திணிக்க முயற்சிக்கின்றீர்கள், சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கின்றீர்கள், 2,500 கோடி கிடையாது, நீங்கள் 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் எந்நாளும் உங்களுடைய புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடமாட்டேன் என்று சொல்லி சட்டப்போராட்டம் நடத்தி அதையும் வென்று காட்டியவர் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய தலைவர் அவர்கள்.

“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!

பாசிஸ்ட்டுகளால் வெற்றிபெற முடியவில்லை. நம்முடைய முதலமைச்சர், நம்முடைய தலைவர் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால்,  அது தலைவருடைய வெற்றி கிடையாது. அது தந்தை பெரியார் அவர்களுடைய வெற்றி. இன்னும் தந்தை பெரியார் அவர்கள் தான் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். அதனால்தான் இது தமிழ்நாடு, தமிழ்நாட்டினுடைய அரசியல்.

தந்தை பெரியாருடைய கருத்துகளில் உண்மையும், நியாமும் முழுக்க, முழுக்க இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கும்  பெரியரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். வயதானவர்கள் மட்டுமல்ல இன்றைக்கு இளைஞர்கள் கூட பெரியாருடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்கின்ற நிலைமை வந்திருக்கின்றது.

நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞரணி சார்பாக, திராவிட இயக்கக் கருத்துக்களை, தந்தை பெரியாருடைய கொள்கைகளை பயிற்சி பாசறை வகுப்புகள் மூலமாக, எங்களுடைய இளைஞரணி தம்பிகளிடம் தொடர்ந்து எடுத்துக் கொண்டு தலைவர் அவர்களுடைய கட்டளையை ஏற்று செய்து கொண்டிருக்கின்றோம்.

முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் மூலம், திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், பெரியாரியம் சார்ந்த கருத்துக்களை, வரலாற்றை, எடுத்துச் இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

Universal Applicability என்று சொல்வார்கள், எல்லாருக்கும் பொருத்தமாக இருப்பதால் தான், தந்தை பெரியாருடைய கருத்துக்கள் இன்றைக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரை சென்று சேருகிறது.

நம்முடைய தலைவர், முதலமைச்சர் அவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய படத்தை திறந்து வைத்திருக்கிறார். ஏனென்றால், தந்தை பெரியாருடைய சிந்தனைகள் எல்லாம் மனிதநேய சிந்தனைகள்மனித உரிமைக்கான சிந்தனைகள்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராடக்கூடிய மக்கள் அனைவரும் இன்றைக்கு தந்தை பெரியார் படத்தை பேரறிஞர் அண்ணா, கலைஞர் படங்களை கையில் ஏந்தி முழக்கம் இடுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தந்தை பெரியார் அவர்கள், அரசியல் ரீதியாக தமிழ்நாட்டைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார்.

அதனால் தான், பாஜகவோட  எந்த தில்லுமுல்லு வேலையும் தமிழ்நாட்டில்  மக்களிடம் எடுபட மாட்டேங்குது. பாஜகவால நேரடியாக மக்கள் ஆதரவை பெற முடியாது. அதனால தான்அதிமுகவை மிரட்டிஅவர்களின் தோள் மேல ஏறிக்கிட்டு இன்றைக்கு சவாரி செய்து தமிழ்நாட்டில் நுழைய பார்க்கிறார்கள். பாஜகவுக்கு பழைய அடிமைகள் பத்தாமல்இன்றைக்கு புது, புது அடிமைகளையும் வலைவீசி தேடிக்கிட்டு கொண்டிருக்கிறது பாஜக. 

எத்தனை அடிமைகளின் துணையோடு பாஜக வந்தாலும், தமிழ்நாடு சுயமரியாதை மண் என்பதை 2026 சட்டமன்ற தேர்தல் மீண்டும் அவர்களுக்கு நிரூபித்து காட்டும்.

இன்றைக்கு அதிமுகவோட நிலைமை என்ன. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்றைக்கு அதிமுகவை வாடகைக்கு எடுத்து, அந்த கட்சியை உள் வாடகைக்கு பாஜகக்கிட்ட கொடுத்து இருக்கிறார்.

நாம் சுயமரியாதை இயக்கத்தோட நூற்றாண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கு சுயமரியாதை என்றால் என்ன என்று கூட தெரியாது. கார் மாறி போனால் கூட பரவாயில்லை. விழுகின்ற கால்களையும் மாற்றி, மாற்றி விழுந்துக்கிட்டு இருக்கார் எடப்பாடி பழனிசாமி அவர்கள். 

தந்தை பெரியார் அவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்ச்சி நம்முடைய மக்களுக்கு இருக்கின்ற வரை, தமிழ்நாட்டை என்றைக்கும் அவர்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்கின்றேன். இளைஞரணியினரை சந்திக்கின்றேன். கழகத்தினரை சந்திக்கின்றேன். அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்கின்றேன். ஆர்வமிகுதியால் அத்தனைபேரும் என்னோடு புகைப்படம் எடுக்கும்போது, செல்பி ஏடுத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள், தம்பிகளா, நமக்கு செல்பி முக்கியம் கிடையாது. செல்பியைவிட செல்ப் ரெஸ்பெக்ட் தான் முக்கியம் என்று சொல்வேன். அதுதான் பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா, கலைஞர் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம்.

அய்யா ஆனைமுத்து அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில், எழுதியிருக்கின்றார் பெரியார் வென்றாரா? என்று கேட்டுவிட்டு, அதற்கு அவரே பதில் சொல்கின்றார், 'பெரியார் தோற்றார்' என்று சொன்னால்,, அது ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வி என்று தான் அர்த்தம். என்று ஆனைமுத்து அவர்கள் ஒரு கட்டுரையிலே எழுதியிருக்கின்றார். 

எனவே, தந்தை பெரியார் எப்போதும் வெல்வார், பெரியாருக்கு தோல்வியே கிடையாது. தமிழ்நாடு அதே போல் எப்போதும் வெல்லும், தமிழர்கள் எப்போதும் வெல்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது.

அப்படிப்பட்ட  தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை பாதையில்,  பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய  வழியில் தான் நம் திராவிட மாடல் அரசு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நம்மையெல்லாம் வழிநடத்தி கொண்டிருக்கின்றார்.

ஈரோட்டுப் பாதையில் நடைபோடுவதால் தான், இன்றைக்கு திட்டங்களிலும் சரி, கொள்கைகளிலும் சரி, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டியாக இருந்து கொண்டிருக்கின்றார்.

“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!

தனித்தனியாக செயல்பட்டாலும், பெரியாரிய இயக்கத்தோழர்கள் பல நாள் கழித்து இந்த மேடையில் ஒற்றுமையாக ஒன்றாக இருக்கின்றீர்கள். அதை பார்க்கும்போதே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இதே ஒற்றுமையோடு, ஆனைமுத்து அய்யாவின் வழியில் தந்தை பெரியாருடைய கருத்துக்களை நாம் இன்னும் அதிகம் பரப்ப வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்த வேண்டும். தினமும் நடத்த வேண்டும். 

அப்படி நிகழ்ச்சிகள் நடத்தினீர்கள் என்றால் நிச்சயம் எப்போதெல்லாம் கலந்து கொள்ள முடியுமா, இங்கு இருக்கக் கூடிய அண்ணன் சு.ப.வீயாக இருக்கட்டும், அண்ணன் இராமகிருட்ணனாக இருக்கட்டும், எப்போதெல்லாம் என்னிடம் தேதி கேட்டுள்ளார்களோ, அப்போதெல்லாம் நான் எந்த தயக்கமும் இல்லாமல் கலந்து கொள்கின்றேன். அதே உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருக்கின்றேன். 

ஏன் என்றால், முன் எப்போதும் இல்லாத இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது. கொள்கையற்ற இளைஞர் கூட்டம்
இப்போது உருவாகி இருக்கின்றார்கள். அவங்களை கொள்கை மயப்படுத்த வேண்டிய பொறுப்பு, எல்லோரையும் விட நமக்கு அதிகமாக இருக்கின்றது.

ஆகவே, நாம் எல்லோரும் சேர்ந்து, அய்யா ஆனைமுத்து காட்டிய வழியில் பெரியாரியத்தை இன்னும் அதிகமாக பரப்புவோம்.  அதற்கு நானும், இளைஞரணியும் நிச்சயம் நம்முடைய தலைவர் அவர்களும் உங்களோடு துணை நிற்போம் அந்த உறுதியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தோழர் ஆனைமுத்து அவர்களுடைய பெரியாரியல் தொகுதி 1 மற்றும் 2 ஆகிய நூல்களை கல்லூரி பாடத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும், ஆனைமுத்து பிறந்த பெரம்பலூர் அல்லது திருச்சி மாவட்டத்தில் அவர் பெயரில் அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை அண்ணன் வாலாசா வல்லவன் அவர்கள் கொடுத்திருக்கின்றார். நிச்சயம் இதை முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு எடுத்து சென்று அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற துணை நிற்பேன் என்று கூறிக் கொண்டு, தமிழ் மண்ணில், எந்த காலத்திலும், பாசிஸ்ட்டுகளை அனுமதிக்காமல் இருப்பது தான், அய்யா ஆனைமுத்துவுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

ஆகவே, 2026 சட்டமன்றத் தேர்தலில், சங்கிகளையும் அவர்களின் அடிமைகளையும் மீண்டும் விரட்டியடிக்க இந்த மேடையில் நாம் அத்தனைபேரும் உறுதியேற்றுக் கொள்வோம்.

அய்யா ஆனைமுத்து அவர்கள், உடலால் மறைந்தாலும்
உணர்வாகவும், எழுத்தாகவும், கொள்கையாகவும் என்றும் நம்மிடையே வாழ்வார். அவர் புகழ் ஓங்கட்டும்.

இந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய
அண்ணன் வாலாசா வல்லவன் உட்பட அனைவருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், கலந்து கொள்ள வாய்ப்பளித்த உங்கள் அத்தனைபேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து  விடைபெறுகின்றேன்.  நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார். 

banner

Related Stories

Related Stories