தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் இன்று 09.10.2025 சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக இயக்கப்படும் தொகுப்பு சுற்றுலாக்களான எட்டு நாட்கள் கோவா மந்திராலயம் சுற்றுலா, நான்கு நாட்கள் ஆறுபடை வீடு சுற்றுலா, ஒரு நாள் திருவண்ணாமலை சுற்றுலா , மூன்று நாட்கள் ஊட்டி, கொடைக்கானல், மூனார் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சுற்றுலாக்களால் ரூபாய்.2.37 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், படகு குழாம்கள், தொலைநோக்கு இல்லங்கள் மற்றும் தொகுப்பு சுற்றுலாக்கள் போன்றவற்றால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிதுள்ளதின் காரணமாக அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது.
மேலும், அனைத்து ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி, ஓட்டல் மற்றும் படகு குழாம்களில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பலதரப்பட்ட அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றார்போல் உணவு வழங்கி விருந்தோம்பலில் சிறப்புடன் திகழவேண்டுமெனவும் அடிப்படை வசதிகளில் குறைகள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்து விருந்தினர்களை நல்லமுறையில் நடத்த வேண்டுமென்றும், அனைத்து மண்டல அலகுகளிலும் வரவுசெலவு மற்றும் விருந்தினர்களிடம் விருந்தோம்பல் குறித்த தகவல்களை மண்டல மேலாளர் மற்றும் மேலாளர்களுடன் உரையாற்றி மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, விருந்தோம்பல் சேவையை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சுற்றுலா தொகுப்பு செயல்திறன்பற்றியும் தீவுத்திடல் வரவு செலவு மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முந்தைய ஆய்வுகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் மீதான நடவடிக்கை குறித்தும் ஆலோசணை மேற்க்கொண்டார்.
முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிலையான இயக்க நடைமுறை குறித்த கையேட்டினை வெளியிட்டார்கள்.