தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.10.2025) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 126.12 கோடி ரூபாய் மொத்த திட்ட மதிப்பீட்டில், முதற்கட்டமாக 81.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்கநகை பூங்கா திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கடந்த 5.11.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோயம்புத்தூரில் பொற்கொல்லர்களின் பட்டறையினை நேரடியாக ஆய்வு செய்த போது, தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் நல சங்கம்.
கோயம்புத்தூர் பொற்கொல்லர் சங்கம், கோவை மாவட்ட தங்கநகை கூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, அனைத்து வசதிகளுடன் கூடிய தங்க நகை பூங்கா அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது கோரிக்கையை நிறைவேற்றிடும் பொருட்டு, மாநிலத்திலேயே தங்க நகைத் தொழிலில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்ட தங்க நகைத் தயாரிப்பு தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் அவர்கள் 6.11.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழாவில், உலக அளவில் தங்க நகைகள் தயாரிப்பில் முக்கிய மையமாக விளங்கும் கோவைக்கு, குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில், 126 கோடி ரூபாய் செலவில், தொழில் வளாகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக ரூ.81.40 கோடி மதிப்பீட்டில் ஐந்து தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்க நகை பூங்கா திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.
இந்த தங்க நகை பூங்கா திட்டத்தில், பொற்கொல்லர்களுக்கு பணியிட வசதி வழங்கும் நோக்கில் 100 சதுர அடி முதல் 300 சதுர அடி வரையிலான பரப்பளவு கொண்ட பட்டறைகள் மற்றும் தங்க நகை உற்பத்தி சார்ந்த நவீன இயந்திரங்களை உள்ளடக்கிய பொது வசதி மையம், தங்க பாதுகாப்பு பெட்டகம்;
ஹால்மார்க் தர பரிசோதனைக் கூடம், தங்க நகை கண்காட்சி கூடம், கூட்டரங்கம், 3D பிரிண்டிங் மற்றும் லேசர் கட்டிங் & CAD / CAM வசதிகள், பயிற்சி மையம், குழந்தைகள் காப்பகம், கண்காணிப்பு கேமரா வசதிகள் (CCTV), தீயணைப்பு வசதிகள் போன்றவை அமைக்கப்படவுள்ளது.
கோயம்புத்தூரில் தங்கநகை பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொற்கொல்லர் சங்கங்களின் நிர்வாகிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.