ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் உரிமைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழக மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு அவசர கடிதம் பெறப்பட்டது (01-10-2025 மற்றும் 02-10-2025 ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறை). அக்கடிதத்தில், மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து, கோல்ட்ரிஃப் சிரப் (பாராசிட்டமால், ஃபீனைல்ஃப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குளோரிபெனிரமைன் மெலேட் சிரப்), Coldrif Syrup (Paracetamol, Phenylephrine Hydrochloride, Chlorpheniramine Maleate Syrup) தொகுதி எண் (Batch No.): SR-13; தயாரிப்பு தேதி (Mfg Date): மே 2025; காலாவதி தேதி(Exp Date): ஏப்ரல் 2027; உற்பத்தியாளர் (Manufactured By): ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் (Sresan Pharmaceutical Manufacturer), எண். 787, பெங்களூரு நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம் (மதுரா), காஞ்சிபுரம் மாவட்டம் – 602 106, மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக, அன்றைய தினமே (01-10-2025) சுமார் 4.00 மணியளவில், எஸ். குருபாரதி, துணை மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் உத்தரவின் பேரில், முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் (Senior Drugs Inspector) தலைமையிலான குழு, M/s. ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ள விரைந்தனர். அக்குழு (01-10-2025 to 02-10-2025) மேற்கொண்ட தொடர் ஆய்வில் மருந்துகள் விதிகள், 1945-இன் கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, சர்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) Batch No: SR-13 உள்ளிட்ட 5 மருந்துகள் அவசர பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டு அரசு மருந்துகள் பகுப்பாய்வு கூடம், சென்னைக்கு அனுப்பப்பட்டது.
பகுப்பாய்வின் முடிவின் டைதிலீன் கிளைகால் (Diethylene Glycol, DEG) என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள், கோல்ட்ரிஃப் சிரப்பில் (Coldrif Syrup) 48.6 சதவீதம் (48.6% w/v) இருப்பதாக 02-10-2025 அன்று கண்டறியப்பட்டது. மேலும் 01-10-2025 அன்றே, துணை மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) விற்பனை தடை செய்யப்பட்டது (Sales Banned). இந்த சந்தேகத்திற்குரிய மருந்து பொது மக்களை சென்றடைய கூடாது, எந்த உயிரிழப்பும் ஏற்பட கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு இந்த அதிரடி உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது.
தமிழ் நாட்டிலிருந்து ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள், 01-10-2025 அன்றே மின்னஞ்சல் மூலமாக மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.
இதையடுத்து, 03-10-2025 அன்று, ஸ்ரீசன் பார்மசியூட்டிகள், நிறுவனத்திற்கு பொது நலம் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு (Stop Production Order) பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் அதிகாரிகளால் உடனடியாக மூடப்பட்டது. மேலும் தொடர் நடவடிக்கையாக ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து உரிமங்கள் முழுவதுமாக ஏன் ரத்து செய்யப்படக்கூடாது (Cancellation) என விளக்கம் கேட்டு குறிப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, தகவல் பெறப்பட்ட 48 மணிநேரத்தில் தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையால் மிக துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அம்மருந்து நிறுவனத்தில் புலனாய்வு மேற்கொண்டு, சர்ச்சைக்குரிய மருந்தை ஆய்வுக்குட்படுத்தி, தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள மருந்துகளையும், தமிழகத்தில் விற்பனையில் உள்ள மருந்துகளையும் தடைச்செய்து, அம்மருந்தில் விஷத்தன்மையுள்ள வேதிப்பொருள் டைதிலீன் கிளைகால் (DEG) இருப்பதை கண்டறிந்து, அந்நிறுவனத்தின் மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்தி மூடப்பட்டு, மேல்நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் உரிமங்களை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் உடனடியாக, 03-10-2025 அன்று மின்னஞ்சல் மூலமாக மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும், தகவல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் கீழ் செயல்படும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் தமிழக அரசால் துரிதமாக மக்கள் நலம் கருதி செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.