கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த அன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கியது. அதோடு இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த கூட்ட நெரிசலுக்கு விஜய் கட்சியினர் பலரும் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய நிலையில், அதற்கும் வீடியோ ஆதாரத்துடன் இதற்கு காரணம் விஜய் ரசிகர்கள் என்று அரசு அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் விஜய் வராமல், நேரத்தை இழுத்தடித்ததும், அவரது முகத்தை காட்டாமல் ரோட் ஷோ மேற்கொண்டதும் இந்த கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள், அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக இணை செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.
அதோடு இந்த விவகாரத்தில் அவதூறு பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பாஜக, தவெக நிர்வாகிகள் 3 பேரையும், Youtuber ஃபெலிக்ஸையும் கைது செய்தனர். தொடர்ந்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இந்த சூழலில் போலீசாரும், முதலமைச்சர் அமைத்த தனி நபர் ஆணையமும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதனை அரசியலாக்கும் நோக்கத்தில் பாஜக தலைமையில் டெல்லியில் இருந்து உண்மை கண்டறியும் குழு கரூரில் உலா வருகிறது.
இந்த குழு அங்குள்ள மக்களிடம் விசாரித்து வரும் நிலையில், கரூர் வாசி ஒருவர் "தவெக மாவட்ட நிர்வாகம் சரியில்லை" என்று கூறுவதை, மாவட்ட நிர்வாகம் சரியில்லை என்று கூறுவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை திரித்து கூறும் வீடியோ இணையத்தில் வெளியாகி கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், “கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கியவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்காதது ஏன்?” என்று தேசிய ஜனநாயக கூட்டணி உண்மைக் கண்டறியும் குழு உறுப்பினரும், பா.ஜ.க எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா அவதூறு பரப்பும் விதமாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள அக்ஷயா என்கிற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றனர். அதோடு அவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியும், காசோலை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு சரிப்பார்ப்பகம் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கையில், எதையும் சரிவர விசாரிக்காமல், தொடர்ந்து அவதூறு பரப்புவதை மட்டுமே பாஜக வாடிக்கையாக கொண்டுள்ளதற்கு கண்டனம் குவிந்து வருகிறது. பாஜக விசாரனைக்கு குழுவில் இருக்கும் ஹேமமாலினி, கும்பமேளா விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு "இதெல்லாம் ஒரு விஷயமா?" என்று நக்கலாக பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.