தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் பல்வேறு சிறு துறைமுகங்கள் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆய்வு!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 97ஆவது வாரியக் கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார்.

“தமிழ்நாட்டில் பல்வேறு சிறு துறைமுகங்கள் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆய்வு!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 97ஆவது வாரியக் கூட்டம் இன்று (29.9.2025) தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை 5வது தளத்திலுள்ள கூட்டரங்கில், அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

97ஆவது கடல்சார் வாரியக் கூட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து, உரையாற்றுகையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைதூரப் பார்வைக்கேற்ப, 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி அடைய கடல்சார் வாரியத்தின் பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் மாநிலத்திற்கு மிகப்பெரும் வருவாய் கிடைக்க வேண்டும்.

மேலும், இதன் மூலம் தமிழ்நாட்டின் GDP உயர்வதுடன் கூடுதலாக வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். சிறு துறைமுகங்கள் மூலம் வணிகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிப்பெற வழிவகை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

“தமிழ்நாட்டில் பல்வேறு சிறு துறைமுகங்கள் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆய்வு!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

முதலமைச்சரின் சீரிய முயற்சியால், தமிழ்நாடு தொழில் முனைவோருக்கான முன்னோடி மாநிலமாக உள்ளது என்றும், இதன் அடிப்படையில் தனியார் முதலீட்டு துறைமுகங்கள் அமைப்பதற்கு மிகவும் சாத்தியமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று தெரிவித்தார்கள்.

தமிழ்நாடு கடல்சார் வாரியம் 1,069 கிலோ மீட்டர் நீளக்கடற்கரை பகுதியில் சாத்தியமான இடங்களில் சுற்றுப்புறச்சூழல் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் பல்வேறு சிறு துறைமுகங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ், கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தி 37 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் அதை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறை மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம், பொது மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. இதுவரை பல இலட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க கருத்துருக்கள், ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு, நிதியுதவி கோரப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூறினார்கள்.

2024-2025 ஆம் ஆண்டில், தமிழ்நாடு கடல்சார் வாரியக் கட்டுப்பாட்டிலுள்ள சிறுதுறைமுகங்களில், 12 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு கடல்சார் வாரியம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு, அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக் கொண்டார்.

banner

Related Stories

Related Stories