கரூரில் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அறிந்த அடுத்த நொடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்களை மேற்கொண்டு, படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அன்றைய இரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு சென்று, பணிகளை துரிதப்படுத்தினார். அதோடு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதனிடையே அரசு மீது வேண்டும் என்றே குறை சொல்ல வேண்டும் என சிலர், விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், இரவில் உடற்கூராய்வுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் 2021 ஆம் ஆண்டு அனுமதி அளித்துள்ள ஆணையை வெளியிட்டு, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்புக்குழு (TN Fact Check) விளக்கியுள்ளது.
அதில், 'கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது' என்று விதிமுறைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
2021 நவம்பர் 15ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது என்று இக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது.” தெரிவிக்கப்பட்டுள்ளது.