தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரசு சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களின் ஓவியம் மற்றும் சிற்பக்கலை படைப்புகளையும், பாரம்பரியமிக்க இசைகருவிகளையும் பார்வையிட்டார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (22.9.2025) சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் அரசு சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களின் ஓவியம் மற்றும் சிற்ப கலை படைப்புகளையும், பழங்கால பாரம்பரிமிக்க இசைக்கருவிகளையும் பார்வையிட்டு, இசைக்கலைஞர்கள் அந்த இசைக்கருவிகளைக் கொண்டு பல்வேறு விதங்களில் இசைப்பதையும் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.
இவ்விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை :-
உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த துறையின் சார்பாக இந்த சிறப்புக்குரிய ஆதிக்கலைக்கோல் விழாவை உங்கள் முன்னிலையில் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன்.
இங்கு இந்த இசைக் இசைக்கலைஞர்கள் பழம்பெரும் இசைக்கருவிகளை இசைத்ததையும், நாடகக்கலைஞர்கள் பொம்மலாட்டம் உள்ளிட்ட மரபு சார்ந்த கலைகளை நடத்தியதையும் பார்க்கும்போது அவர்களோடு இன்னும் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும் என்ற ஈடுபாட்டோடு கேட்டு ரசித்ததால் மேடைக்கு வருவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், சமூகநீதி விடுதி மாணவர்கள் உங்கள் எல்லோரையும் இந்த விழாவில், ஒரே இடத்தில் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன், மிகுந்த பெருமை அடைகின்றேன். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இந்த துறைக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கியமாக உங்களுடைய அமைச்சர் மதிவேந்தன் அவர்களுக்கும், சகோதரர் இளையராஜா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுடைய கலை வடிவங்களை இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் இந்த 3 நாள் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. Folk Art, Theatre Art, Literature மற்றும் Visual Art என்று பல துறைகளில், வல்லுநர்கள், சாதித்தவர்கள் மூலம் இங்கு 3 நாட்கள் பயிற்சி கொடுப்பதற்கு இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு மட்டும் இல்லை. பல ஆயிரம் வருடமாக கலை என்பது மக்களுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாக இருந்து வருகின்றது. மற்றவர்களைவிட கலைக்கும், கலைஞர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அதிகமாக கிடைக்கும். குறிப்பாக நம்முடைய தமிழ்நாட்டில் அதற்கான முக்கியத்துவம் மிக, மிக அதிகம்.
ஆனால், இதில் என்ன ஒரு விஷயம் என்றால், எல்லா கலைகளுக்கும் சமமான இடம் கிடைக்கின்றதா, சமமான முக்கியத்துவம் கிடைக்கின்றதா என்று யோசித்து பார்த்தோம் என்றால், அது இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. உயர்தட்டு மக்களுடைய கலைகளுக்கு ஒரு தனி மதிப்பும், உழைக்கின்ற, ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய மக்களுடைய கலைகளுக்கு வேறு மாதிரியான மதிப்பும்தான் நம்முடைய சமுதாயத்தில் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த ஏற்றத்தாழ்வை உடைப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து நம்முடைய அரசு எடுத்துக் கொண்டு வருகின்றது. குறிப்பாக, இசையில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்றுதான், நம்முடைய தமிழ்நாட்டில் தமிழிசை இயக்கம் வந்தது.
இந்த நேரத்தில் ஒரு சின்ன உதாரணத்தை, சம்பவத்தை நான் இங்கே உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். 1946ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு தியாகராஜர் உற்சவம் விழா நடைபெற்றது. அந்த காலகட்டத்தில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் நடத்தியிருந்த ‘குடி அரசு’ பத்திரிகையில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, தண்டபாணி தேசிகர் என்பவர், தியாகராஜர் உற்சவ மேடையில் ஒரு தமிழ்ப் பாட்டு பாடினார். அவருக்கு அடுத்து வந்த பாடகர் ஒருவர், “தண்டபாணி தேசிகர் தமிழ்ப்பாட்டு பாடியதால் இன்றைக்கு இந்த மேடையே தீட்டு ஆகிவிட்டது. அதனால் இனிமேல் நான் இந்த மேடையில் பாட மாட்டேன்” என்று சொன்னார்.
இதைக் கேள்விப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அப்போது அவர் வேலை செய்த குடியரசு பத்திரிகையில் 'தீட்டாயிடுத்து' என்கின்ற தலைப்பில் ஒரு பெரிய தலையங்கத்தை எழுதி தன்னுடைய எதிர்ப்பை அந்த வயதிலேயே அவர் தெரிவித்தார். அந்த காலத்தில் இசையில் எந்த அளவுக்கு பாகுபாடு இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
தந்தை பெரியார் அவர்கள், கலையைப் பற்றி சொல்லும் போது, வெறும் பொழுதுபோக்கு அம்சமாக கலை இருக்கக் கூடாது.
அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று பெரியார் அவர்கள் விரும்பினார். குறிப்பாக, மூட நம்பிக்கைகளை பரப்பிட கலைகளை பயன்படுத்தக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். பெரியார் சொன்னதை தான், நம்முடைய திராவிட இயக்க படைப்பாளர்கள் இன்றைக்கு தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.
குறிப்பாக, பேரறிஞர் அண்ணா அவர்கள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக
சமூக முன்னேற்றத்துக்கான கருத்துகளை ஒவ்வொரு முறையும் அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆதிதிராவிட மக்களுடைய நாட்டுப்புற பாடல்கள் எல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களுடைய விடுதலைக்கான குரல்களாக இருந்திருக்கிறது.
நாட்டுப்புறப் பாடல்களை கேட்டோம் என்றால், சமூகக் கொடுமைகள், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றியவர்களை அடித்தட்டு மக்கள் இன்னமும் தங்களுடைய ஹீரோவாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். அந்த ஹீரோக்கள் எல்லாம் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்களாக தான் இருப்பார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்ற ஹீரோக்களை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நாட்டுப்புறக் கலைகள் மூலமாக இன்றைக்கு நம்முடைய தமிழ் மக்கள் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.
அடித்தட்டு மக்களுடைய கலைகள், அது பாடலாக இருக்கட்டும்,
நடனமாக இருக்கட்டும், இலக்கியமாக இருக்கட்டும், ஓவியமாக இருக்கட்டும், அதில் ஒருவிதமான ஏக்கம், கோபம், எதிர்பார்ப்பு எல்லாமே இருக்கும். அடித்தட்டு மக்களுடைய கலைகளில் இருப்பவைதான் மக்களுடைய, தமிழ்நாட்டினுடைய உண்மையான வரலாறு.
இன்றைக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுடைய பார்வையில் இருந்து சமுதாயத்தைப் பார்க்கும் படைப்புகள், பல வடிவங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கலை வடிவங்களை, இன்னும் ஒரு பரந்துபட்ட தளத்திற்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும். எளிய மக்களுடைய கலைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அந்த நோக்கத்தோடு தான் நம்முடைய அரசு, இந்த விழாவை இன்றைக்கு இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்த 3 நாள் பயிற்சி பட்டறை இன்றைய இளைஞர்களுக்கு
நிச்சயம் மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருக்கும். இன்றைக்கு ஆதி திராவிடர், பழங்குடியினருடைய கலை, இலக்கியம், பண்பாட்டை வளர்த்தெடுக்க, ஏராளமான முன்னெடுப்புகளை நம்ம அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
‘களம் ஆடு’ என்கின்ற முன்னெடுப்பு மூலமாக,
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு, கலைத்திறன் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு ஆதி திராவிடர் கலை இலக்கிய கழகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சிறந்த எழுத்தாளர்களுக்கான பரிசுத்தொகை, 50 ஆயிரம் ரூபாயிலிருந்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி கொடுத்திருக்கிறார். ஆதி திராவிடர் மக்களுடைய கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற இலக்கியப் படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
‘தொல்குடியினர் தின விழா’ ஒவ்வொரு வருடமும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடர்ந்து நடத்தி கொண்டு வருகிறோம். இதில் மாணவர்களுக்கு பலவகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றது. பழங்குடியின மக்களுடைய மொழிகளை பாதுகாக்க 3 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு, ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து அந்த சேவைகளையும் நம்முடைய அரசு செய்துகொண்டிருக்கிறது.
ஆதிதிராவிட மக்களுடைய கலைகளை அனைத்து மக்களுக்குமான கலைகளாக ஆக்குவதற்கு இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இந்த துறை அதனை தொடர்ந்து நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதற்கு எல்லா வகையிலும் இந்த திராவிட மாடல் அரசும், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் உங்களுக்கு துணை நிற்பார்கள். இந்த 3 நாள் பயிற்சி பட்டறை சிறப்பாக அமையட்டும்.
இதில் பங்கேற்கக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள் உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ள என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கின்ற துறையினுடைய அமைச்சர் சகோதரர் மதிவேந்தன் அவர்களுக்கும், தாட்கோவினுடைய தலைவர் என் அருமை சகோதரர் இளையராஜாவுக்கும், அரசு அதிகாரிகள், விழா ஏற்பாட்டுக் குழுவினர், அத்தனைப் பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.