சென்னை, கீழ்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் மெகல் ரத்தோர் (வயது 28). இவர் லண்டனில் உயர்கல்வி படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சென்னைக்கு வந்த மெகல் ரத்தோர் நேற்று (21.09.2025) இரவு அவரது தங்கையை பெங்களூர் செல்லும் பேருந்தில் ஏற்றுவதற்காக, எழும்பூர் மெட்ரோ இரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் தங்கையுடன் அவரது இருசக்கர வாகனத்தின் அருகில் காத்திருந்தார்.
அப்பொழுது, அவ்வழியே நடந்து வந்த நபர் ஒருவர் மெகல் ரத்தோர் அருகில் வந்து தகாத வார்த்தைளால் பேசி, திடீரென கீழே இருந்து கல்லை எடுத்து, மெகல் ரத்தோரின் தலையில் பலமுறை தாக்கவே, சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் பிடிக்க வரும்போது, அந்த நபர் பொதுமக்கள் மீது கல்லை வீசி தப்பிச் சென்றார்.
இந்த தாக்குதலில் இரத்தக்காயமடைந்த மெகல் ரத்தோர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேற்படி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மெகல் ரத்தோரின் தங்கை கொடுத்த புகாரின்பேரில், F-2 எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை செய்தது. அதில் இவ்வழக்கில் தொடர்புடையவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த எதிரி அமிருல் (வயது 26) என்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இருக்கும் இடம் அறிந்து அவரை கைது செய்த போலீசார் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.