சென்னை வர்த்தக மையத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதிகலைகோல் பயிற்சி பட்டறையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செப். 22 ஆம் தேதி அன்று தொடங்கி வைக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதிகலைகோல் பயிற்சி பட்டறை சென்னை வர்த்தக மையத்தில் 22, 23 மற்றும் 24 செப்டம்பர் 2025-ல் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் முன்னிலை வகுக்கவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் நா.இளையராஜா அவர்கள் சிறப்புரை ஏற்கவும் உள்ளார்கள்.
இப்பயிற்சி பட்டறையில் பழமையான கலைகளையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஒரு நிகழ்வாக வடிவமைக்கப்பட்டு நாட்டுப்புறக் கலை, நாடகக் கலை, இலக்கிய கலை மற்றும் காட்சி கலை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை கொண்டு மூன்று நாட்கள் பயிற்சி பயிலரங்கம் நடைபெறவுள்ளது.
இக்கலைகளின் வழியாக மனித எண்ணங்களின் சிந்தனைகளை இணைக்கும் ஒரு பாலமாகவும், கற்பனையை மேன்மைபடுத்தும் கலைகளை நான்கு பிரிவுகளாக பிரித்து இளைஞர்களுக்கு வழிநடத்தும் நோக்கில் இக்கலைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களான மூத்த பறை இசை கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான் அவர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் டிராட்ஸ்கி மருது அவர்கள், எழுத்தாளர்கள் இமையம் அவர்கள், சுகிர்தராணி அவர்கள், மூத்த நாடக கலைஞர் மற்றும் நடிகர் மு. ராமசாமி அவர்கள் மற்றும் ஓவியர் சந்திரசேகரன் குருசாமி போன்றவர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.