தமிழ்நாடு

“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாட்டு மலரினை வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (28.08.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாட்டில் தென்னிந்தியாவின் முதன்மையான உள்கட்டமைப்பு கட்டுமான இயந்திர வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டு ஆற்றிய உரை.

இன்றைக்கு தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக நடத்தப்படுகிற உள்கட்டமைப்புக் கட்டுமான இயந்திர வர்த்தகக் கண்காட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்ததாரர்கள் (Contractors) கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாட்டை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்; பெருமை அடைகின்றேன்.

அதுமட்டுமல்ல, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஒப்பந்ததாரர்களின் நலன் காக்கும் வகையில், மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக, நன்றி தெரிவிக்கும் விழாவாகவும், இன்றைக்கு சிறப்பாக உங்கள் ஆதரவோடு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இங்கே நம்முடைய அண்ணன் துறையின் அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், குறிப்பிட்டது போல இந்த நிகழ்ச்சியில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான் முதலில் கலந்து கொள்வதாக இருந்தது. பல்வேறு பணிச்சுமையின் காரணமாக, முதலமைச்சர் அவர்கள் என்னை அழைத்து, “நீ நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உரிமையோடு எனக்கு உத்தரவிட்டதால் நான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றேன்.

என்னதான் முதலமைச்சர் உத்தரவிட்டு, நான் வந்திருந்தாலும் இந்த பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறைக்கும், எனக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது என்ன தொடர்பு என்றால், நான் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்பு, மக்களுக்கு அறிமுகமான என்னுடைய முதல் படத்தின் பெயர் “ஒரு கல் ஒரு கண்ணாடி” – பொதுப்பணித் துறைக்கும், இந்த தலைப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

அதைப்போல, சென்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டு மக்களை நான் சந்திக்கும்போது என்னுடைய கையில் நான் எடுத்துக் கொண்டு போனது ஒரே ஒரு செங்கல் மட்டும் தான். எனவே, அந்த உரிமையோடு இன்றைக்கு நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கின்றேன்.

கிட்டத்தட்ட இந்த அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் வருகை தந்திருக்கிறீர்கள். உங்கள் முகங்களில் தெரிகிற மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் பார்க்கும் போது, நம்முடைய திராவிட மாடல் அரசு, ஒப்பந்ததாரர்களுக்கு எந்த அளவுக்கு உற்றத்துணையாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

அரசு தீட்டுகின்ற திட்டங்களை, கொடுக்கின்ற வாக்குறுதிகளை எல்லாம் செயல்வடிவமாக்கிக் காட்டுவது நீங்கள் தான். பேப்பரில் வரைபடமாக இருக்கும் திட்டங்களை, இன்றைக்கு சாலைகளாக, மேம்பாலங்களாக, உயர்ந்த கட்டடங்களாக மாற்றிக் காட்டுபவர்கள் நீங்கள் தான்.

உங்களைப் போன்ற எண்ணற்ற ஒப்பந்தக்காரர்களின் உழைப்பால் தான், இன்றைக்கு இந்தியாவிலேயே அதிநவீன Infrastructure-ஐ கொண்ட முதல் மாநிலமாக இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த முழுப் பெருமையும் உங்களைத்தான் சேரும்.

ஓர் ஊர், வளர வேண்டும் என்றால், அந்த ஊரில் இருக்கின்ற அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் சரியாக இருக்க வேண்டும். அப்போது தான், அங்குள்ள மக்களுடைய சமூக – பொருளாதார வளர்ச்சிக்கு அது முக்கிய பங்கு வகிக்கும்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தொழில் நிறுவனங்கள் வருகின்றன என்றால், அவர்கள் முதலில் தேர்வு செய்வது இந்தியாவில் முதல் மாநிலம் நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், Ease of Doing Business-இல் மட்டுமல்ல, Infrastructure Facility மற்றும் Road Connectivity-யிலும் இன்றைக்கு தமிழ்நாடு தான் இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது – இந்தியாவிலேயே No.1 மாநிலம் நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

குறிப்பாக, நம்முடைய ஆட்சி காலத்தில் பல Infrastructure Marvel-களை நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு -

• சென்னை கிண்டியில் (240 கோடி ரூபாயில்) முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை,

• சென்னை மெரினா கடற்கரையில், நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு (54 கோடி மதிப்பில்) நினைவு மண்டபம்,

• மதுரையில், (220 கோடி ரூபாயில்) கலைஞர் நூற்றாண்டு நூலகம்,

• சென்னை கிளாம்பாக்கத்தில் (400 கோடி மதிப்பில்) கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்,

• மதுரையில் (63 கோடி ரூபாய் மதிப்பில்) கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

• கன்னியாகுமரியில், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே மிகக்கடுமையான சூழலை எதிர்கொண்டு 37 கோடி ரூபாய் எனும் மிகக்குறைவான Budget-இல் மிகப்பிரம்மாண்டமான கண்ணாடி மேம்பாலம்,

• 410 கோடியில் திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்.

இப்படி மிகப்பெரிய கட்டுமானங்களை எல்லாம், மிகக் குறுகிய காலத்தில் நீங்கள் கட்டி முடித்து சாதனை படைத்துள்ளீர்கள்.

அதுமட்டுமல்ல,

• உலகிலேயே முதன் முறையாக சென்னையில், மெட்ரோ Tunnel-க்கு மேலே,

640 கோடி ரூபாய் மதிப்பில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் அமைத்து வருகிறீர்கள்.

• சென்னை ECR-ல் (525 கோடி மதிப்பில்) Kalaignar Convention Center கட்டப்பட்டு அந்தப் பணிகளும் நடைபெற்று வருகிறது,

• மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம்,

வேலூர் சத்துவாச்சாரி – காங்கேயநல்லூர் மேம்பாலம், திருச்சி ஸ்ரீரங்கம் காவேரி ஆற்று மேம்பாலம்,

• திருச்சியில் காமராஜர் நூலகம்,

கோவையில் பெரியார் நூலகம்,

என தமிழ்நாட்டில் அடுத்த நூற்றாண்டுக்குத் தேவையான கட்டுமானங்களை நீங்கள் தான் உருவாக்கிக் கொண்டு வருகிறீர்கள்.

முந்தைய ஆட்சியாளர்களின் 10 ஆண்டு கால ஆட்சியில், ஒப்பந்ததாரர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இங்கே நம்முடைய அமைச்சர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுக்கு இன்றைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக 2021-வரை, தமிழ்நாட்டில் சுமார் ஆயிரத்து எழுபத்து நான்கு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தனர். ஆனால், நம்முடைய அரசு அமைந்த பிறகு, ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்வதற்கான அந்த வழிமுறை எளிமையாக்கப்பட்டதால், இந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1300 புதிய contractors பதிவு செய்து கொண்டுள்ளார்கள்.

இது முந்தைய ஆட்சியின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் என்பதை இந்த நேரத்தில் நான் பெருமையோடு கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அதுமட்டுமல்ல, ஒப்பந்தங்களை இறுதி செய்வதில், E-Registration முறையை நம்முடைய அரசு அமல்படுத்தியது.

“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

2021 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், ஆட்சிக்கு வந்த உடனேயே, ஒரே Contractor-க்கு 5 ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் வழங்கும் அந்த முறையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்களுடைய கோரிக்கையை ஏற்று இரத்து செய்தார்கள்.

ஒன்றிய அரசு சாலைப்பணி மேற்கொள்ளும் Contractors-க்கான ஜி.எஸ்.டி தொகையை 6 சதவீதத்தில் இருந்து 12 முதல் 18 சதவீதம் வரை உயர்த்தியது. இந்த நெருக்கடியை உடனடியாக உணர்ந்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அந்த இழப்பை ஈடு செய்ய உடனடியாக 256 கோடி ரூபாயை விடுவித்தார்கள்.

இவை மட்டுமல்ல, தொடர்ந்து உங்களுக்காக பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு – நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் வழங்குவார்கள். உங்களுடைய அமைச்சர் அண்ணன் திரு.எ.வ.வேலு அவர்கள், நம்முடைய முதலமைச்சர் அவர்களிடம்

பேசி உங்களுக்கான திட்டங்களை நிச்சயம் உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

நீங்கள் தமிழ்நாட்டுக்காக போடுகிற சாலைகளும் – எழுப்புகிற கட்டடங்களும் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான Road Map என்று சொல்வதில் மிகையல்ல. ஆகவே, இந்த அரசு என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

உங்களோடு கைகோர்த்து தமிழ்நாட்டை இன்னும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு செல்வார் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இந்த அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மட்டுமில்லை, அனைத்து ஒப்பந்ததாரர்களும், ஆதரவாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொண்டு இங்கே தொடங்கி வைக்கப்பட்டுள்ள வர்த்தக கண்காட்சி சிறக்கட்டும்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் பணிகள் மென்மேலும் சிறப்படைய என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்து இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories