
டென்மாா்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து அதற்கு நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைச் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
அந்த வகையில் இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பட்டியலில் சென்னை மெரினா கடற்கரையும் இணையவுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான சிறப்பு பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளது. இதனால் விரைவில் சென்னை மெரினா கடற்கரையும் இந்த பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது ன்னை திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி குலசேகரப்பட்டினம், விழுப்புரம் கீழ் புதுப்பட்டு, கடலூர் சாமியார் பேட்டை ஆகியவற்றில் நீலக் கொடி கடற்கரை சான்றிதழ் பெற ஏற்பாடு பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








