கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.8.2025) பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, ஆற்றிய உரை.
உங்களை எல்லாம் பார்ப்பதற்காகத்தான் இரண்டாயிரம் கிலோ மீட்டர் கடந்து நான் இங்கே வந்திருக்கிறேன். பீகார் என்றாலே, மரியாதைக்குரிய லாலு பிரசாத் யாதவ் அவர்கள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். சமூகநீதி - மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளம் அவர்.
தலைவர் கலைஞர் அவர்களும் - லாலு அவர்களும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். எத்தனையோ வழக்குகள் - மிரட்டல்கள் வந்தாலும், பா.ஜ.க.விற்கு பயப்படாமல் அரசியல் செய்த காரணத்தினால், இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார், லாலு பிரசாத் அவர்கள்.
அவரின் வழித்தடத்தில், அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் தேஜஸ்வி அவர்கள். கடந்த ஒரு மாத காலமாக, இந்தியாவே பீகாரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதுதான் பீகார் மக்களின் பலம்! ராகுல் காந்தியின் பலம்! தேஜஸ்வியின் பலம்! இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கான போர்க்குரலை பீகார் எழுப்பியிருக்கிறது. இதுதான் வரலாறு!
‘லோக்நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள், ஜனநாயகத்தின் குரலை, சோசலிசத்தின் குரலை எதிரொலித்தார். அதற்காக மக்கள் சக்தியை அவர் திரட்டினார். அந்தப் பணியைத்தான், அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களும், தம்பி தேஜஸ்வி அவர்களும் இங்கு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் செல்லும் இடம் எல்லாம், மக்கள் - கடல் போல திரண்டு வருகிறார்கள். அதிலும், தேஜஸ்வி அவர்கள் கார் ஓட்ட, அதில் ராகுல் காந்தி பயணம் செய்த காட்சியைப் பார்த்தேன். ஏன், மோட்டார் சைக்கிள் பயணத்தையும் நான் பார்த்தேன்.
உங்களின் நட்பு, அரசியல் நட்பு மட்டும் கிடையாது; இரண்டு உடன்பிறப்புகளின் நட்பு! ஜனநாயகத்தை காக்க - மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தர இருப்பதே இந்த நட்புதான்.
பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கப் போகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது! அதனால்தான் இந்த வெற்றியைத் தடுக்க பார்க்கிறார்கள். நியாயமாக - முறைப்படி வாக்குப்பதிவு நடந்தால், பா.ஜ.க. கூட்டணி தோற்றுவிடும் என்று, மக்களான உங்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தை, ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள். 65 லட்சம் பீகார் மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, ஜனநாயகப் படுகொலை! சொந்த மண்ணில், பிறந்து வாழ்ந்த மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதைவிட, பயங்கரவாதம் இருக்க முடியுமா?
அனைத்து அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும், அவர்களை அட்ரஸ் இல்லாதவர்கள் போன்று ஆக்குவது அழித்தொழிப்புதானே? சகோதரர்கள் ராகுலும் - தேஜஸ்வியும் பெற இருக்கும் வெற்றியை தடுக்க முடியாத பா.ஜ.க., கொல்லைப்புற வழியாக இந்த வேலையைப் பார்க்கிறது.
இதற்கு எதிராக என்னுடைய சகோதரர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தை வாழ்த்துவதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக, ராகுல் காந்தி அவர்கள், தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடிகளையும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதற்கு தேர்தல் ஆணையத்தால், முறையான ஒரு பதிலைக்கூட சொல்ல முடியவில்லை! ஆனால், ராகுல் காந்தி அவர்கள் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சொல்கிறார்.
இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும் - கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது!
ராகுல் காந்தி அவர்களைப் பொறுத்தவரைக்கும், சும்மா அரசியலுக்காக - மேடைகளுக்காக பேசுபவர் கிடையாது. தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் - மிகுந்த கவனத்துடன் பேசுபவர் அவர்.
இப்போது ஏன் பா.ஜ.க. அவர் மேல் பாய்கிறார்கள் என்றால், பா.ஜ.க. - தேர்தலை எப்படி கேலிக்கூத்தாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில், பா.ஜ.க. அவர் மேல் பாய்கிறார்கள்.
மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க.வின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். அதைத்தான் பீகாரில் இப்போது கூடியிருக்கும் இந்தக் கூட்டம் எடுத்துக் காட்டுகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளத்தை இங்கிருக்கும் பாட்னாவில்தான் விதைத்தோம். எங்களுக்கு சமமான அரசியல் எதிரிகளே இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்று நினைத்த பா.ஜ.க.வின் கர்வத்தை தகர்த்த இடம்தான் இந்த பீகார்.
400 இடம் என்று கனவு கண்டவர்களை, 240-இல் அடக்கியது இந்தியா கூட்டணி. மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள், மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். மக்கள் சக்திக்கு முன், எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்று, மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும்.
அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே… நீங்கள் இன்றைக்கு இந்தியாவிற்கான வழக்கறிஞராக இருக்கிறீர்கள். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும்!
மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை என்று சகோதரர் தேஜஸ்வி காட்டிக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் இரண்டு பேரும் பீகாரில் பெறப்போகும் வெற்றிதான், இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் வெற்றிவிழா கூட்டத்திலும் நிச்சயமாக - உறுதியாக நானும் பங்கேற்பேன்.