பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை மறு சீரமைப்பதற்காக எஸ்.ஐ.ஆர் எனும், Special intensive revision எனும் நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறை படுத்தியது. இதனால் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை பல்வேறு காரணங்கள் சொல்லி இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த அவசர நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து வாக்கு திருட்டை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் வாக்குரிமை பயணத்தை ஆகஸ்ட் 17 ஆம் தேதியில் இருந்து மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தியுடன் கைகோர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் பேரணியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள். திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்து பேரணியாக சென்றார்.
அப்போது கூடியிருந்த பீகார் பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
”பிகாரை அடைந்துவிட்டேன். மதிப்புக்குரிய லாலு பிரசாத் யாதவின் நிலம் நெருப்பாக என்னை வரவேற்றது. திருடப்பட்ட ஒவ்வொரு வாக்கினாலும் அந்த மண் கனமாகியிருந்தது. மக்களின் வலியை தீர்க்கமான வலிமையாக மாற்றும் 'வாக்கு அதிகார பேரணி’யில் என் சகோதரர்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருடன் இணைந்திருக்கிறேன்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.