சென்னை தேனாம்பேட்டில் இருந்து சைதாப்பேட்டை வரை அமைக்கப்படும் உயர்மட்ட சாலை மேம்பால கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சுரங்க பாதையில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பாதிக்காத வகையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சவால்கள் குறித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் அனிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது/
அதில் சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் மெட்ரோ ரயில் பாதிக்காதவாறு உயர்மட்ட மேம்பாலங்கள் அமைப்பது எப்படி என்பதை குறித்து நெடுஞ்சாலைத்துறை விளக்கியுள்ளது. இது நிலப்பரப்பிற்கு கீழே இயக்கத்தில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை ஓடுதளத்திற்கு (Under Ground Metro Tunnel) மேலே கட்டப்படும் முதல் சாலை மேம்பாலம் ஆகும்.
இந்த மேம்பாலத்தை வடிவமைப்பது பெரும் சவாலாகவே இருந்து வந்த நிலையில், இப்பாலத்திலிருந்து வரும் அழுத்தம் சாலையின் கீழே தற்போது இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை சிறிதளவும் பாதிக்காத வண்ணம் வடிவமைக்க வேண்டி இருந்தது. மேலும் பாலத்தின் அடித்தளம் அமைக்க ஆழமான பள்ளங்களை மற்றும் நீண்ட துளைகளை (piling technique) எடுக்க முடியாத சூழலும் இருந்தது.
எனவே ஆழம் குறைந்த அடித்தளம் (shallow Foundation) மட்டுமே அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், இப்பகுதியில் மண்ணின் தாங்கும் திறன் குறைந்த அளவே உள்ளதால், ஆழம் குறைந்த அடித்தளம் கொண்டு வடிவமைப்பது சாத்தியமற்றானது. இதன் காரணமாக இதற்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள், ஐஐடி மெட்ராஸ் வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட (prefabricated) கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள இறுதி செய்யப்பட்டது என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.