“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் அரசின் கடுமையான நடவடிக்கைகளால் போதை இல்லாத் தமிழ்நாடு உருவாகிறது!” என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த விரிவான விளக்கம் பின்வருமாறு,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போதையில்லாத் தமிழ்நாட்டை உருவாக்கிட தீவிரமாகப் பாடுபடுகிறர்கள். வேறு மாநிலங்களிலிருந்து போதைப் பொருள்கள் தமிழ்நாட்டிற்குள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசின் காவல்துறை மூலம் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்கள் போதைக்கு ஆட்படக்கூடாது என்பதற்காகவே போதையின் பாதை வேண்டாம் என காணொலி மூலம் இளைஞர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்கள்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 11.8.2025 அன்று நந்தனம் ஆடவர் அரசுக் கலைக் கல்லூரியில் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் “போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள், காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் பெருமக்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா உட்பட காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி
தமிழ்நாட்டில் போதை ஒழிப்பு தொடர்பாக ஓர் ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரை ஒன்று போதைப் பொருள் நடமாட்டத்தை மற்றும் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு
போதைப்பொருள் வர்த்தகத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மாநிலத்தில் போதைப்பொருள் நுகர்வு இந்தியாவில் மிகக் குறைவாக இருந்தாலும், பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருள்களின் அளவு மிக அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டிற்குள் கடத்தப்படுகின்ற போதைப் பொருள்கள் இடைமறிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன. 2022 முதல் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
புள்ளி விவரங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தமிழ்நாட்டைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சிலரால் போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், புள்ளிவிவரங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை வலுவாக முறியடிக்கின்றன.
ஒன்றிய அரசின் ஆய்வின்படி, தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு வெறும் 0.1 சதவீதம், ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம், மயக்க மருந்துகள் 0.3 சதவீதம், இன்ஹேலன்ட்ஸ் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு. இதனால், போதைப் பொருள்களைக் குறைவாக நுகரும் மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.
உதாரணமாக, தமிழ்நாட்டை விடச் சிறிய மாநிலமான அசாமில், சில பிரிவுகளில் போதைப் பொருள் நுகர்வு விகிதம் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் குறைந்த நுகர்வு நிலைகள், மக்களின் விழிப்புணர்வையும், கடந்த நான்கு ஆண்டுகளாக அரசின் கண்காணிப்பையும் பிரதிபலிக்கின்றன.
மே 2021 முதல், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் அளவு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் ஹெராயின், மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், மெத்தா குவாலோன் போன்ற போதை மருந்துகளும், கஞ்சா சாக்லேட் போன்ற மாறுவேடத்தில் இருந்த பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்குள் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் இல்லை என்ற நிலையில் இது சாத்தியமாகியுள்ளது.
2022இல் நடத்தப்பட்ட சோதனைகளில், 28,383 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது 2020ஐ விட 61 சதவீதம் அதிகம், 2021ஐ விட 33 சதவீதம் அதிகம். இந்தப் போதைப் பொருள்கள் அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுகின்றன. இதை உணர்ந்து, தமிழ்நாடு ஆந்திராவுடன் இணைந்து, அங்கு 6,416 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.4,000 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை அழிக்கக் கோரி நடவடிக்கை எடுத்தது.
மாநிலங்களுக்கு இடையிலான இத்தகைய ஒத்துழைப்பு, தமிழ்நாட்டின் போதைப் பொருள் ஒழிப்பு கொள்கையின் தீவிரத்தையும், அதன் பரந்த நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
போதைப் பொருள் ஒழிப்புப் போரில் ஒரு முன்னணி மாநிலம்
குற்றவாளிகள் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதிலும் தமிழ்நாட்டின் விழிப்புணர்வு தெரிகிறது. 2021 முதல் மார்ச் 2025 வரை, தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் இருந்து 3,307 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், ஒடிசாவைச் சேர்ந்த 892 பேர், கேரளாவைச் சேர்ந்த 662 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 447 பேர், பீகாரைச் சேர்ந்த 386 பேர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 322 பேர் ஆகியோர் அடங்குவர். இது போதைப் பொருள் ஒழிப்புப் போரில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக இருப்பதைக் காட்டுகிறது.
பிற மாநில எல்லைகளில் போதைப் பொருள் கடத்தலைத் தடுத்திட சோதனைச் சாவடிகள்
பல மாநிலங்களைப் போல் இல்லாமல், தமிழ்நாடு இச்சட்டத்தைப் போதைப் பொருள், வனக் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள் ஆகியோருக்கு எதிராகவும் பயன்படுத்துகிறது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறிய அளவிலான போதைப் பொருள்களைப் பேருந்துகள், ரயில்கள், இரு சக்கர வாகனங்கள் மூலம் கடத்துகின்றனர். இதற்குப் பதிலடியாக, தமிழ்நாடு, மாநிலங்களுக்கு இடையிலான கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வழிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளதுடன், கண்காணிப்பையும் விரிவுபடுத்தியுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்
கஞ்சாவின் இருப்புக் குறைந்ததால், கடத்தல்காரர்கள் இப்போது மருத்துவ மாத்திரைகள் போன்ற போதைப் பொருள்களின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023இல் 39,910 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2024இல் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியது. இவ்வளவு பெரிய அளவிலான பொருள்களைக் கையாள, தமிழ்நாடு முக்கிய மாவட்டங்களில் தனியே போதைப்பொருள் சேமிப்பு வசதிகளான மால்கானாக்களை (Malkhanas) அமைத்துள்ளது.
ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்
“போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தின் கீழ், மாநில அரசு பலமுனை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது; போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் போதைப் பொருள்கள் விநியோகத்தைக் குறைப்பதோடு, அதன் தேவையையும் குறைப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது.
“போதைப் பொருள்களுக்கு எதிரான இயக்கம்” மற்றும் 2022ல் 74 இலட்சம் மாணவர்கள் எடுத்த போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி, மாரத்தான், குறும்படங்கள், மாணவச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களிடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது, தேசிய மாணவர் படை (NCC), தேசிய சேவைத் திட்டம் (NSS), செஞ்சிலுவைச் சங்கம் (RRC) மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் (YRC) தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மாநிலம் முழுவதும் செயல்படுகின்றன.
சிறந்த சேவைகளுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம்
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவதை ஊக்குவிக்க, கடந்த 2023 ஆம் ஆண்டில் 5 எண்ணிக்கையில் மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கியதற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் என்ற சிறப்பு பதக்கம் வழங்கும் திட்டம் முதலமைச்சர் அவர்கள் அறிவிக்கப்பட்டது.
இந்த பதக்கங்களின் எண்ணிக்கை 5 என்பது 2025 ஆம் ஆண்டு முதல் 15 பதக்கங்களாக உயர்த்தப்பட்டது. மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரகசியத் தகவலாளர்களுக்கு வெகுமதிகள் வழங்க ரூ.50 லட்சம் சுழல் நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
திட்ட மேலாண்மை மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு
“போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” திட்டத்தின் கீழ் உள்ள திட்ட மேலாண்மைப் பிரிவு மாநில அளவிலான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கிறது. “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற மொபைல் செயலி, போதைப்பொருள் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிவிக்க உதவுகிறது. மேலும், எல்லை தாண்டிய ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 18, 2025 அன்று, சென்னையிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB), கடலோரப் பகுதி வழியாக நடைபெறும் கடத்தலைச் சமாளிக்க இலங்கை அதிகாரிகளுடன் நான்காவது தலைமை இயக்குநர் (DG) மட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியது. ஜூன் 2025-ல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுடன் நடைபெற்ற கூட்டங்களில், தேசிய அளவிலான போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (Directorate of Enforcement) போன்ற தேசிய அமைப்புகளுடன் தமிழ்நாடும் பங்கேற்றது.
போதைப் பொருள்களை தடுப்பதில் தமிழ்நாட்டின் உறுதிப்பாடு அசைக்க முடியாதது: வலுவான அமலாக்கம், ஒருங்கிணைந்த நோக்கம், மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஒரு போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே குறிக்கோள் என தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப. கூறினார்.