சென்னை பெருநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மேம்பாலங்கள் மற்றும் மெட்ரோ வழித்தடத்துடன் கூடுதல் மேம்பாலங்கள், மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கிமீ தொலைவிற்கு முழுவதும் எஃகு வார்ப்பு, இரும்பு தூண்களாலான உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் சோதனை முறையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1. சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.போ.சி. சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவ சாலை சந்திப்பு, விஜயராகவ சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.
2.அண்ணா சாலை வழியாக தியாகராயநகர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
3.தியாகநகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள மா.போ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவ சாலை வழியாக சென்று அண்ணா சாலையை அடையலாம்.
4.தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.போ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது, அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னர் விஜயராகவ சாலையை அடைந்து பின்னர் அண்ணா சாலையை அடையலாம்.
5.அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவ சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது.