டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனின் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அதிமுக குற்றம்சாட்டி உள்ளதற்கு கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில்தான் அதிக பெண் தொழிலாளர்கள் இருப்பதாகவும், நாட்டின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின், 41 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயர்கல்வி பயிலும் பெண்கள் சதவிகிதம் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே 28.5 சதவிகிதமாக இருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் மட்டும் 47.3 சதவிகிதமாக இருப்பதை கோடிட்டுக் காட்டியுள்ள கீதா ஜீவன், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில், இத்தகைய வளர்ச்சி எப்படி சாத்தியமாகி இருக்கும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் கீதா ஜீவனின் இந்த கட்டுரையை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குவதிலும், தொழிலாளர்கள் பங்கேற்பில் நாட்டிற்கு முன்னணி வகிப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு எவ்வாறு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
குற்றங்கள் மீதான விரைவான, கடுமையான, பாரபட்சமற்ற நடவடிக்கைகள் பெண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் போன்ற அதிகாரமளிப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புத் திட்டங்களே இதற்குச் சான்று என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.