முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் திமுக அரசு மீது மக்களுக்கு நாலுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஒருசிலர் திமுக அரசின் திட்டங்களை முடக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது திட்டத்தின் பெயரில் முதலமைச்சர் பெயர் இருக்கிறது என நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகிறார்கள்.
ஆனால் இவர்களுக்கு நீதிமன்றம் சரியான பாடங்களை கற்றுக்கொடுத்து வருகிறது. அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் வழக்கை தள்ளுபடி செய்து ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அரசு பணத்தில், அரசு ஊழியர்களை கொண்டு செயல்படுத்தப்படும் ’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்திற்கு முதலமைச்சர் பெயரை வைப்பது தவறானது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே போன்ற வழக்கை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிட்டார்.
இதனையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
அதேபோல், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து மனுதாரர் அதிமுக வழக்கறிஞர் இனியனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.