நாட்டில் தொடரும் பட்டியலினத்தவர்கள் மீதான வன்முறைகள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த முன்றாண்டுகளில் மொத்தம் பதிவான வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை என்ன? இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட இழப்பீடுகளின் விவரங்கள் என்ன? வன்முறையால் பாதிக்கப்பட்ட பட்டியினத்தவர்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசு வழங்கிய சட்ட உதவிகள் என்ன? கடந்த மூன்றாண்டுகளில் பட்டியலின மக்களுக்கு வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடத்தியுள்ள முகாம்களின் விவரங்கள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
மேற்கு தமிழ்நாட்டில் ஏற்றுமதிகளை ஊக்குவிக்க நடவடிக்கை என்ன?
சென்னை – பெங்களூரு தொழில் வளாக திட்டத்தின்கீழ் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உறுதிசெய்யப்ப்பட்ட சாலைகள் மற்றும் சரக்கு போக்குவரத்து உட்கட்டமைப்பின் தற்போதைய நிலை என்ன என்று வேலூர் மக்களவை திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
திட்டத்தின் கீழ் பல்வேறு ஒப்புதல்கள் நிலுவையில் உள்ளதற்கு காரணம் நிதி பற்றாக்குறை மற்றும் செயல்திட்டத்தில் உள்ள தடைகளா என்று கேட்டிருக்கும் அவர், மேற்கு தமிழ்நாட்டில் தொழித்துறை மேம்படுத்தவும் ஏற்றுமதிகளை ஊக்குவிக்கவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மேலே குறிப்பிட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேஎண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டியால் வருவாய் இழக்கும் தமிழ்நாடு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதிலிருந்து தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இது குறித்து திமுக மாநிலங்கலவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் தமிழ்நாடு அரசு எதிர்கொள்ளும் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? மற்றும் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.