மூத்த குடிமக்களுக்ளும், மாற்றுத் திறனாளிகள் குடும்பத்திற்கும் அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ‘முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (12.8.2025) காலை நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘‘தாயுமானவர் திட்டம்’’ உண்மையிலேயே மக்கள் நேயத்தில் மலர்ந்து, பழுத்த கனியாகி, பலன்தரும் திட்டம் என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியாகும்!
வரலாறு படைக்கும் அரியதொரு புதுமை நிறைந்த திட்டம்
70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் குடும்பங்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் உள்ள இல்லங்களுக்கும் அரசின் நுகர்பொருள் வழங்கு துறைமூலம், வாரம் இரண்டு நாள்கள் நேரில் சென்று வழங்கும் அந்தச் சிறப்பு, வரலாறு படைக்கும் அரியதொரு புதுமை நிறைந்த திட்டம் ஆகும். 22 லட்சம் பேர் பயனுறும் இந்தத் திட்டத்திற்குத் ‘‘தாயுமானவர் திட்டம்’’ என்ற பெயர் மிகவும் பொருத்தமானதாகும்!
சமதர்மத்தின் முதல் நுழைவு வாயில்!
முதுமையாலும், உடலின் வலிமை இழந்தாலும் உள்ள நலத்தோடு வாழும் முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகள் குடும்பத்திற்கும் கிடைத்துள்ள இந்தத் திட்டம் சமதர்மத்தின் முதல் நுழைவு வாயில் என்றால், மிகையல்ல.
வரவேற்றுப் பாராட்டுகிறோம்!
அம்மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று, பொருள்களைப் பெற அல்லற்பட்டு அழுதிடும் கண்ணீரைத் துடைத்தெறிந்து, மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் மகத்தான மனிதநேய சாதனைத் திட்டமே இது! முதலமைச்சரின் மனிதநேயம் என்றென்றும் நன்றிக்குரியது; என்றும் வரலாறு படைக்கும் – வரவேற்றுப் பாராட்டுகிறோம்!"என்று கூறப்பட்டுள்ளது.