தமிழ்நாடு

“11.19% பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : வைகோ பாராட்டு!

“இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி இருப்பதற்கு திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமைத் திறன் மிக்க நடவடிக்கைகள் காரணமாகும்.”

“11.19% பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : வைகோ பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் தமிழ்நாடு, பல்வேறு துறைகளில் வெகுவாக முன்னேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, சுமார் 14 ஆண்டுகளுக்கு இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது.

இதனை பாராட்டும் விதமாக, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கிறது தமிழ்நாடு.

2024-25இல், ‘உண்மையான பொருளாதார வளர்ச்சி’யில் 9.69 சதவீதத்தைத் தொட்டு, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்தது. 2032-33இல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை அடையத் திட்டமிட்டுவரும் தமிழ்நாடு அரசு, அதை நோக்கிய பயணத்தில் உறுதியாக நடைபோடுவதை இந்தச் சாதனை உறுதிசெய்து இருந்தது.

பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் உண்மையான பொருளாதார வளர்ச்சியானது ஒரு மாநிலம் அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சி மீதான துலக்கமான பார்வையை அளிக்கக்கூடியது. அந்த வகையில், மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023-24இல் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த 2024-25இல் ரூ.17.24 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

“11.19% பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : வைகோ பாராட்டு!

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவீதமாக இருந்தது.  இந்த நிலையில் தற்போது  2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் 11.19% ஆக உயர்ந்திருப்பது, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.  

நடப்பாண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட வளர்ச்சியை விட இது கிட்டத்தட்ட 2.2% அதிகம் எனக்கூறப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவில்  எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியைப் பெற்று   தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.

சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19 % என்கிற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அரசு பதிவு செய்து சாதனை படைத்திருக்கும் நிலையில்,  இது  2025-26-ஆம் ஆண்டில் 12 சதவீதமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு  இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி இருப்பதற்கு திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமைத் திறன் மிக்க நடவடிக்கைகள் காரணமாகும்.

திராவிட மாடல் அரசுக்கு  பாராட்டுக்களைத்  தெரிவித்துக் கொள்வதுடன் பொருளாதார வளர்ச்சியில் மேலும் உச்சம் தொட்டு இலக்கை அடைவதற்கு வாழ்த்துகிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories