தமிழ்நாடு

6,41,664 பேருக்கு பணி நியமனங்கள்... "திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு"- முதலமைச்சர் பெருமிதம் !

6,41,664 பேருக்கு பணி நியமனங்கள்... "திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு"- முதலமைச்சர் பெருமிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதன் விவரம் :

என்னுடைய உரையை தொடங்குவதற்கு முன்னால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நேற்று இரவில் இருந்து இதுதான் Talk of the Town, ஏன் Talk of the Nation என்பதே இதுதான்! நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 11.19 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டிருக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான், இரட்டை இலக்க அந்த வளர்ச்சியை இன்றைக்கு தமிழ்நாடு எட்டி இருக்கிறது. இதை நாம் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, 2024-25-ஆம் ஆண்டில், தமிழ்நாடு 11.19 விழுக்காடு வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, நாம் கணித்ததைவிட, இது கிட்டத்தட்ட 2.2 விழுக்காடு அதிகம். முன்பு 9.69 விழுக்காடு என்று மதிப்பிடப்பட்ட 2024-25-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் -இப்போது 11.19 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது. இதற்கு முன்பு, 2010-11-ஆம் நிதியாண்டில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 13.12 விழுக்காடாக இருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கழக ஆட்சியில், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியிருக்கிறது.

6,41,664 பேருக்கு பணி நியமனங்கள்... "திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு"- முதலமைச்சர் பெருமிதம் !

இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது. இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெறாத மாபெரும் வளர்ச்சி. இது சாதாரணமாக நடந்துவிடவில்லை. பல்வேறு நெருக்கடிகள், அவதூறுகளுக்கு இடையில்தான், இந்த வெற்றியை நாம் அடைந்திருக்கிறோம். அந்த வகையில், இது மிகவும் சிறப்பான வெற்றி! இது தனிப்பட்ட ஸ்டாலினின் வெற்றி இல்லை. அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சர் - அனைத்துத் துறை அதிகாரிகள் – கடைநிலை அரசு ஊழியர்கள் என்று ஒவ்வொரு திட்டத்தையும் முறையாக செயல்படுத்திய நம்முடைய எல்லாருடைய உழைப்புக்கும் கிடைத்திருக்கக்கூடிய கூட்டு வெற்றி இது. என்னை நம்பி ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்திருக்கக்கூடிய தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த நேரத்தில், இந்த வெற்றிச் செய்தியை நான் காணிக்கையாக்குகிறேன்.

“எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கோடு பயணிக்கும் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான வெற்றிப் பயணத்திற்கு கிடைத்த நற்சாட்சிப் பத்திரம்தான் இது! இப்போது அடைந்திருக்கும் இலக்கோடு நான் திருப்தியடைய மாட்டேன். இன்னும் அதிகமான உயரத்தை நாம் அடைய வேண்டும். அதை நோக்கிய பயணத்தை திராவிட மாடல் 2.0-வில் தொடர்வோம்! அந்தப் பயணத்திற்கு நீங்கள் எல்லோரும்தான் துணையாக இருக்கப் போகிறீர்கள்! இந்த மகிழ்ச்சியான செய்தியுடன், இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், 2 ஆயிரத்து 538 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் வாய்ப்பை பெற்றதற்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்! உதவிப் பொறியாளர் - நகர அமைப்பு அலுவலர்கள் - இளநிலைப் பொறியாளர்கள் - துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட இந்தப் பணியிடங்களால் 2 ஆயிரத்து 538 குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியிருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு!

இளைஞர்கள்தான் இந்த நாட்டின் தமிழ்ச்சமுதாயத்தின் அடித்தளம்! இளைஞர்களை முன்னேற்றுவதும் - முன்னேற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதும்தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் முதன்மையான பணி! திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கான அரசு! அதனால்தான், நான் முதல்வன் - தமிழ்ப்புதல்வன் - புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, மாணவர்களையும், இளைஞர்களையும் கல்வியறிவு பெற்றவர்களாக - திறன்மிக்கவர்களாக உயர்த்திக்கொண்டிருக்கிறோம்! கல்வியும் - திறன் மேம்பாட்டு பயிற்சியும் கொடுத்தால் மட்டும் போதாது. இளைஞர்களுக்குத் தேவையான தகுதியான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம்!

6,41,664 பேருக்கு பணி நியமனங்கள்... "திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு"- முதலமைச்சர் பெருமிதம் !

இதனால் உருவான வேலைவாய்ப்புகள் பற்றி புள்ளிவிவரமாக சொல்ல வேண்டும் என்றால்...... கடந்த நான்கு ஆண்டுகளில் T.N.P.S.C - T.R.B - M.R.B - T.N.U.S.R.B உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவும், நகராட்சி நிர்வாகம், கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை மற்றும் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாகவும், 1 இலட்சத்து எட்டாயிரத்து 111 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம்! திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக, “நான் முதல்வன்” திட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, 3 இலட்சத்து 28 ஆயிரத்து 393 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம்! தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, 2 இலட்சத்து 65 ஆயிரத்து 223 பேருக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம்! முதன்முறையாக, விளையாட்டுத் துறையில், தேசிய மற்றும் உலகளவில் சாதனை படைத்திருக்கக்கூடிய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதன்மூலம் 84 நபர்களுக்கு இந்த ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது!

நான் முதல்வன் திட்டத்தில், பயிற்சிபெற்ற 89 இளைஞர்கள் பல்வேறு முக்கிய ஒன்றிய அரசுப் பணிகளில் இடம் பிடித்திருக்கிறார்கள்! அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தில் படித்த 18 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது! இப்படி, மொத்தம் 6 இலட்சத்து 41 ஆயிரத்து 664 பேர், கடந்த நான்காண்டுகளில், பணி நியமனம் பெற்றிருக்கிறார்கள்! இதெல்லாம், நம்முடைய தொடர் முயற்சிகளுக்கு மாணவர்களுக்கு வழங்கும் திறன் பயிற்சிகளுக்கான பலன் இது! இந்த வெற்றிப் பயணம் தொடரவும், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கவும், நம்முடைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபடும்!

அமைதியான சூழல் - சிறப்பான சட்டம் ஒழுங்கு - திறமையான இளைஞர்கள் - தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், நம்முடைய உழைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையோடு நாம் முன்னெடுக்கும் திட்டங்களால், தமிழ்நாடு இன்றைக்கு தொழில்வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக இருக்கிறது!

பல்வேறு இந்திய நிறுவனங்களுக்கும், M.N.C-களுக்கும் தமிழ்நாடுதான் முதலீடுகளுக்கான Destination! கடந்த நான்கு ஆண்டுகளில், உற்பத்தி துறை, I.T. துறை, கட்டுமானத் துறை என்று பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் மேற்கொண்ட 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 10 இலட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திருக்கிறார்கள்! இதனால், 2 இலட்சத்து 30 ஆயிரத்து 856 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது! இன்றைக்கு உங்களுக்கெல்லாம் Appointment order வழங்கியிருக்கிறேன்! ஏற்கெனவே, நான் சொன்னது போல, இளைஞர்களுக்கு என்னவெல்லாம் தேவையோ - அதையெல்லாம் நம்முடைய அரசு வழங்கிகொண்டு இருக்கிறது! அதில் Highlight-ஆக சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால், 41 இலட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்திலும் - 4 இலட்சம் மாணவர்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் - 6 இலட்சம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்திலும் பயனடைந்திருக்கிறார்கள்!

பல்வேறு மாவட்டங்களில் தோழி விடுதிகள் தொடங்கியிருக்கிறோம்! இப்படி, கல்வியைச் சுற்றியும் - அறிவைச் சுற்றியும் - ஆற்றலைச் சுற்றியும் செயல்படக்கூடிய முன்னெடுப்புகளின் வரிசையில், அடுத்து, கல்லூரியில் படிக்கும் 20 இலட்சம் மாணவர்களுக்கு Laptop தரப்போகிறோம்! பொதுவாக, நான் மாணவர்களிடம் பேசும்போது, “கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து” என்று சொல்லி அவர்களை Motivate செய்வேன். அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தை பெற்று, முன்னேற்றத்திற்கான முதல் படியில் காலடி வைக்கும் இளைஞர்களான உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, “நாள்தோறும் உலகம் Update ஆகிக்கொண்டிருக்கிறது. அதற்கு equal-ஆக நீங்களும் Upgrade ஆக வேண்டும்! தேக்கம் என்பதே உங்களின் Career-இல் இருக்க கூடாது! அதற்கு ஏற்றது போல Skill Develop செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு Support செய்ய நாங்கள் இருக்கிறோம்!

இந்த நிகழ்வை பார்த்துகொண்டிருக்கக்கூடிய இளைஞர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது… அடுத்து அமைய இருக்கும் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும், இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் வர போகிறது. அதற்கான அனைத்து வேலைகளையும் நாங்கள் இப்போதே தொடங்கிவிட்டோம். அந்த வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

6,41,664 பேருக்கு பணி நியமனங்கள்... "திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு"- முதலமைச்சர் பெருமிதம் !

அதேபோல், பணிநியமனம் பெற்று, நம்முடைய அரசின் ஒரு அங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய நீங்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எல்லோரிடமும் நல்ல பெயரை வாங்கவேண்டும். உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் பெற்றோருக்கும், உங்கள் ஊருக்கும், இந்த அரசாங்கத்திற்கும் நல்ல பெயரை பெற்றுத் தரவேண்டும். இன்றைக்கு உங்களுடைய பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார்கள். இன்றைக்கு மட்டுமல்ல, தினமும் நீங்கள் மகிழ்ச்சியாக, பெருமையாக அவர்களை வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் செய்கின்ற பணிகளை சிறப்பாக செய்யவேண்டும். உங்களிடம் வருகிறவர்களிடம், நீங்கள் சென்று சந்திக்கக்கூடியவர்களிடம் அன்பாக பேசுங்கள். அவர்களின் குறைகளை பொறுமையாக கேட்பதுடன், அதனை விரைவாக செயல்படுத்த நீங்கள் உழைக்க வேண்டும். மக்களுக்குத் துணையாக நாம் இருந்தால், மக்களும் என்றைக்கும் நமக்குத் துணையாக இருப்பார்கள்! கண்ணியத்துடன் கடமையாற்றி - மக்களுக்குச் சேவையாற்ற உங்களை வரவேற்று, உங்களின் செயல்பாடுகளால் அரசுக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!

banner

Related Stories

Related Stories