தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் பயன்பெற்றவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆரணி மக்களவை தொகுதி உறுப்பினர் தரணிவேந்தன் பின் வரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து அனுமதிக்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை மற்றும் இந்தத் திட்டத்தால் பயனடைந்த மொத்த தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் விவரங்கள் என்ன?.தொழில்முனைவோரை ஊக்குவிப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முத்ரா திட்டத்தின் செயல்திறனை அளவிடுவதற்கு அரசாங்கம் நடத்திய ஆய்வுகள் என்ன?
முத்ரா திட்டத்தின் நன்மைகள் குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய ஒன்றிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?.
தமிழ்நாட்டின் விளிம்புநிலை சமூகங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினரிடையே முத்ரா திட்டம் சென்றடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
முத்ரா கடன்களுக்கான விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?.விவசாயம், உற்பத்தி மற்றும் சேவைகள் போன்ற துறைகளுக்கு முத்ரா திட்டம் சிறு நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு பங்களித்துள்ளதா? அந்த முயற்சிக்கான எதிர்கால இலக்குகள் என்ன?
தமிழ்நாட்டில் முத்ரா கடன்களின் தவணை தவறுதல் விகிதம் மற்றும் கடன் தவறுதல் தொடர்பான அபாயங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சரியும் ஜிஎஸ்டி வரி வசூல்!
கடந்த ஆண்டுகளில் ஒப்பிடுகையில் ஜூன் 2025இல் மிக குறைந்த அளவு ஜிஎஸ்டி வரி வசூல் நடந்திருப்பதாக வரும் செய்திகளின்மீது விளக்கம் கேட்டு நாடாளுமன்றத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜிஎஸ்டி வசூலில் ஏற்பட்ட சரிவு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் வீழ்ச்சியைக் காட்டுகிறதா? ஜிஎஸ்டி விகித அடுக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் விகித நிர்ணயக் குழு ஏதேனும் அறிக்கை சமர்பித்திருக்கிறதா? மற்றும் பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஜிஎஸ்டி கவுன்சிலில் அரசாங்கம் எப்போது தொடங்கும்? என்றும் அவர் கேட்டுள்ளார்.