தமிழ்நாடு

“இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்!” : திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்த தமிழ்நாடு அரசு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் பொதுவிநியோகத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 37,328 நியாயவிலைக் கடைகள்!

“இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்!” : திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்த தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடுமையான உழைப்பின் காரணமாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதல் இடம் என்னும் அணிகலனைச் சூடியுள்ளது. இதில், திராவிட முன்னேற்றக் கழக அரசு, தொடங்கிய 1967 ஆம் ஆண்டு முதல் வறுமை ஒழிப்பை முன்னிலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வரலாறும் அடங்கியுள்ளது.

1966-இல் தமிழ்நாட்டில் கடுமையான அரிசிப் பஞ்சம் ஏற்பட்டது.மக்கள் அரிசி கிடைக்காமல் திண்டாடினார்கள். அப்போது கிராமப்புறங்களில் ரேஷன் கடைகள் இல்லை. தண்டோரா மூலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நாளை காலை குடும்பத்துக்கு இரண்டு படி அரிசி வீதம் வழங்கப்படும், வந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்து அரிசி வழங்கப்பட்டது.

அப்போது தான் தமிழ்நாட்டில் கிராமங்களில் கூட கோதுமையைப் பயன்படுத்தும் நிலை வந்தது. மக்கள் கோதுமை மாவு அரைத்து, கோதுமை தோசை செய்து சாப்பிட்டார்கள். கோதுமையில் சப்பாத்தி செய்யும் முறை கூட தமிழ்நாட்டு மக்களுக்கு அதுவரை தெரியாது.

அப்படிப்பட்ட கடுமையான காலகட்டத்தைக் கடந்து, 1967இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தது. அண்ணா அவர்கள் அதிகாரிகளுக்கு ஆணையிட்டு பெரிய பெரிய வியாபாரிகள் பதுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகளை எல்லாம் கைப்பற்றி, மக்களுக்கு வழங்கினார்கள். வேளாண்மைக்குச் சலுகைகள் தந்து அரிசி உற்பத்திக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்கள். அரிசிப் பஞ்சம் படிப்படியாக விரட்டப்பட்டது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 1969 இல் முதலமைச்சர் பொறுப்பேற்ற பின் விவசாயிகளுக்குப் பல்வேறு சலுகைகள் தந்தார்கள். நெல் உற்பத்திக்கு ஊக்கம் தந்தார்கள். 1972 அளவில் வறட்சியால் பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காத சூழலில் ஆழ்குழாய்க் கிணறுகள் (Borewell) அமைக்க ஊக்கம் அளித்தார்கள். விவசாயப் பகுதிகளில் அப்போதெல்லாம் மின்சாரம் கிடையாது எனவே, ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் தண்ணீர் இறைக்க ஆயில் என்ஜின்கள் தேவைப்பட்டன.

ஆயில் என்ஜின்கள் வாங்க 1,000 ருபாய் மானியம் வழங்கினார்கள். 3000 ருபாய் விலையுள்ள ஆயில் என்ஜின்களை வாங்கிப் பயன்படுத்தி விவசாயிகள் நெல் உற்பத்தியைப் பெருக்கினார்கள். 1965-66ல் 35.24 இலட்சம் மெட்ரிக் டன் என இருந்த அரிசி உற்பத்தி 1975-1976 முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் 61 இலட்சம் மெட்ரிக் டன் என இருமடங்கு உயர்ந்தது. அப்பொழுது பிற மாநிலங்களுக்கும் அரிசி வழங்கியது தமிழ்நாடு.

28.1.1974 அன்று பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து ஆற்றிய உரையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், “குடியரசு நாள் விழா கூட கொண்டாட முடியாத நிலையில் உள்ள குஜராத்திற்கு உணவு வழங்கினோம். கர்நாடகத்திற்கு உணவு வழங்கினோம். மராட்டியத்திற்கு உணவு வழங்கினோம். பல்வேறு மாநிலங்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்” என்று குறிப்பிட்டார்கள்.

1990 இல் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியதும் தி.மு.க. ஆட்சியில் தான் ! கலைஞர் அவர்கள் தான்!

ஒரு போக சாகுபடியை இரு போகச் சாகுபடி என்றும், இருபோக சாகுபடியை முப்போகச் சாகுபடி என்றும், சாகுபடிப் பணிகளைப் பெருக்கினார்கள். இதனால் நெல் உற்பத்தி பெருகியது.

இந்நிலையில், உற்பத்தியான நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து இருப்பு வைத்து, பொதுமக்களுக்கு வழங்கிட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை 1972இல் ஏற்படுத்தினார்கள்.

நெல் கொள்முதல் செய்திட கொள்முதல் நிலையங்களை அமைத்தார்கள்.

கொள்முதல் செய்யப்படும் நெல்லை இருப்பு செய்திட ஆங்கங்கே கிடங்குகள் கட்டினார்கள். நெல் அரைவை செய்திட அரிசி ஆலைகளை ஏற்படுத்தினார்கள். பொதுமக்களுக்கு அரிசி வழங்கிட தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் அதுவரை இல்லாத ரேஷன் கடைகளை ஏற்படுத்தினார்கள். பொதுமக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கி ஒவ்வொரு அட்டைக்கும் அரிசி முதலிய உணவுப் பொருள்களை வழங்கினார்கள். 1996 முதல் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசி வழங்கினார்கள்.

“இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்!” : திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்த தமிழ்நாடு அரசு!

ஒன்றிய அரசு தமது தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கும் அரிசியை வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு கிலோ அரிசி ருபாய் 5.90 என்றும், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு கிலோ அரிசி ருபாய் 11.80 என்றும் 1.4.2000 முதல் உயர்த்தியது. ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்குச் சிரமங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக வறுமைக் கோட்டிற்குக் கீழ், மேல் எனப் பாகுபாடு காட்டாமல் எல்லோர்க்கும் அரிசி கிலோ ருபாய் 3.50 என்றே வழங்கினார்கள்.

2006 இல் கிலோ ருபாய் 2 என்றும், பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 2008 இல் கிலோ 1 ருபாய் என்றும், அரிசி வழங்கித் தமிழ்நாட்டில் பட்டினிச் சாவு என்பதே இல்லை என்ற வரலாறு உருவாக்கப்பட்டது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால்.

திராவிட நாயகர் ஆட்சியில் உணவுப் பொருள் விநியோகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 7.5.2021 அன்று பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று பரவி உலகம் முழுவதும் உயிர்ப் பலிகள் வாங்கிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலும் எண்ணற்ற உயிர்கள் பலியாயின. பள்ளிகள் கல்லூரிகள் ஆலைகள், தொழிற்சாலைகள், கடைகள், ஏன் ஆலயங்கள் கூட மூடப்பட்டன.

வரலாறு காணாத லாக்-டவுன் நிகழ்ந்து மக்கள் சொல்ல முடியாத தொல்லைகளுக்கு ஆளாயினர். . அப்போது முதலமைச்சர் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் எல்லோருக்கும் தடையின்றி உணவுப் பொருள்கள் வழங்கிட உத்தரவிட்டார்கள்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டில், 2,07,70,726 அரிசி அட்டைதாரர்களுக்கு, 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய கொரோனா நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது.

ரூ. 4,000 நிவாரண உதவித் தொகை

2,08,42,716 அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வீதம் கொரோனா நிவாரண உதவித்தொகை இரண்டு தவணைகளாக 2021 மே, ஜூன் மாதங்களில் வழங்கப்பட்டு மக்கள் துயர் தணிந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வாழ்த்தினார்கள்.

நியாயவிலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை

கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டுவரும் நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய ஆணையிடப்பட்டு, 2021 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை ரூ.1.93 கோடி மதிப்பிலான பனை வெல்லம் நியாய விலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டு மக்கள் பயன் அடைந்தனர்.

சிறுதானியங்கள் விற்பனை

முதலமைச்சர் அவர்கள், மக்களிடம் சத்து மிகுந்த கம்பு, கேழ்வரகு, சோளம் முதலிய சிறுதானியங்களின் பயன்பாடுகளை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்திட ஆணையிட்டார்கள். அதன் பயனாக, நியாயவிலைக் கடைகளில் 2022 ஜூன் முதல் 2025 மார்ச் வரை ரூ.2.58 கோடி மதிப்பிலான சிறுதானியங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன இத்திட்டம் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நியாயவிலைக் கடைகளுக்கு ISO தரச்சான்றிதழ்

முதலமைச்சர் அவர்கள், நியாயவிலைக் கடைகளில் பொருள்களைத் தரமாக வழங்கிட வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனால் நியாயவிலைக் கடைகளில் முழுமையான தர மேலாண்மையை உறுதி செய்வதற்காகக், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் ISO தரச்சான்றிதழ் பெறப்பட்டு வருகிறது.

இதுவரை, தரம் மற்றும் பராமரிப்புக்காக 10,149 நியாய விலைக் கடைகளுக்கு ISO:9001 சான்றிதழும், பாதுகாப்பான உணவுச் சங்கிலி மற்றும் சேமிப்பிற்கான, 2,059 நியாய விலைக் கடைகளுக்கு ISO:28000 சான்றிதழும் பெறப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி பொலிவுறச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 5,481 நியாயவிலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் செயல்படும் நியாயவிலைக் கடைகள்

கூட்டுறவு துறையின் கீழ் 35,181 நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 1527 நியாயவிலைக் கடைகளும், இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 152 நியாயவிலைக்கடைகளும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 468 நியாயவிலைக்கடைகளும், என மொத்தம் 37,328 நியாயவிலைக்கடைகள் தமிழ்நாடு முழுவதிலும் செயல்படுகின்றன.

இவற்றுள் 26,618 நியாயவிலைக்கடைகள், முழுநேரமும் செயல்படுகின்றன. 10,710 நியாயவிலைக்கடைகள், பகுதி நேரக் கடைகளாகச் செயல்படுகின்றன. இந்த நியாயவிலைக் கடைகள் வாயிலாக மொத்தம் 2 கோடியே 25 இலட்சத்து 93 ஆயிரத்து 654 மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

“இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்!” : திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்த தமிழ்நாடு அரசு!

இவற்றுள் 21,337 நியாயவிலைக்கடைகள், சொந்தக் கட்டடங்களிலும் 8,725 நியாயவிலைக் கடைகள் வாடகையில்லாக் கட்டடங்களிலும் 7,266 நியாயவிலைக்கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் செயல்படுகின்றன.

தனியார் வாடகை கட்டடங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்குச் சொந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்கு திராவிட மாடல் அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இக்கட்டடங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் பெறப்படும் நிதி, மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதி, ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டப்படுகின்றன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நியாயவிலைக் கடைகளுக்குக் கட்டடங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மட்டும் 1527 நியாயவிலைக் கடைகளை நடத்தி வருகிறது. அவற்றுள் 854 கடைகள் தனியார் வாடகை கட்டடங்களிலும் 673 கடைகள் பிற அரசுத்துறை கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன.

முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி, வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வந்த 731 நியாய விலைக்கடைகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 47 நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள்

முதலமைச்சர் அவர்கள், விவசாயிகளின் கடின உழைப்பின் மூலம் கொள்முதல் செய்யப்படும் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது எனப் பிறப்பித்த ஆணைக்கு இணங்க 2022-2023 முதல் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு 31.3.2025 வரை, ரூ.294.70 கோடியில் 3.63 இலட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் கொண்ட 23 நெல் சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 40,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புத் தளங்களின் கட்டுமானப் பணிகள் ரூ. 36.38 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகின்றன.

2,394 புதிய நியாயவிலைக் கடைகள்

முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள் எளிதாகக் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கிப் பயன்படுத்திட வேண்டும் என விரும்பினார்கள். அதனால் அவர்கள் வசிக்கும் இடங்களின் அருகிலேயே பொது விநியோகக் கடைகள் அமைய வேண்டும் என்பதற்காக 4 ஆண்டுகளில் மக்கள் வாழும் பகுதிகளில் 789 முழு நேரக் கடைகளும், 1,605 பகுதி நேரக் கடைகளும், ஆக மொத்தம் 2,394 புதிய நியாயவிலைக் கடைகளைத் திறந்து வைத்துள்ளார்கள்.

ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை

முதலமைச்சர் அவர்கள், ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் UPI முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட்டார்கள். இதுவரை, 10,661 நியாய விலைக் கடைகளில் UPI முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை நடைபெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திராவிட நாயகர் கோவை மாவட்டத்தில் திறந்து வைத்த உணவு தானிய பரிசோதனை ஆய்வகம்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பொருள்களின்த் தரத்தை உறுதி செய்வதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் பகுப்பாய்வுக் கூடங்கள் நிறுப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுப்பாய்வுக் கூடத்திலும் உணவுப் பொருள்களைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையில் கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 23.9.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திராவிட மாடல் அரசு உயர்த்தி வழங்கிய பங்கு மூலதனம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 100 கோடி ஆகவும், செலுத்தப்பட்ட பங்கு மூல தானம் ரு. 71.73 கோடி ஆகவும் இருந்தது. கடந்த 2024-2025 இல் திராவிட மாடல் அரசு பங்கு மூலதனம் ஆக 2000 கோடி ருபாய் வழங்கியதால் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 2100 கோடியாகவும் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 2,071.73 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்றிமையாப் பொருள்களை விநியோகிப்பதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு நடப்பு ஆண்டில் ரூ.14,000 கோடியாக மானியத்தை உயர்த்தி ஒதுக்கீடு செய்துள்ளது திராவிட மாடல் அரசு.

புயல் நிவாரணப் பணிகளில் திராவிட நாயகர்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களின் துயர் கண்டு வேதனை அடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் உடனடி நிவாரணமாக மனித நேயத்துடன் தாராளமாக உதவிகள் வழங்கிட ஆணையிட்டார்கள்.

“இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்!” : திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்த தமிழ்நாடு அரசு!

அதன்படி, மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.6,000 வீதம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 24,78,229 குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.

அதுபோலவே தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதி கனமழையால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட வட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 6,36,760 குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 வீதமும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களிலும், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழையால் வெள்ளப் பாதிப்பு அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 14,58,164 குடும்பங்களுக்குத் தலா ரூ.1,000 வீதமும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் 26.11.2024 முதல் வீசிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக அதிகம் பாதிக்கபட்ட வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக 5 கிலோ அரிசி பைகள், 1 கிலோ பருப்பு, 1 கிலோ சர்க்கரை ஆகியவை 7 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

முதலமைச்சர் அவர்கள் வழங்கிய பொங்கல் தொகுப்புகள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை தமிழ்நாடு முழுவதும் மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புப் பொருள்களை வழங்கி வருகிறார்கள்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டில் 2,15,67,122 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 20 பொருட்கள், ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

2023-ஆம் ஆண்டில் 2,19,33,342 அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ரூ.1000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

அதேபோல, 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 2,19,51,748 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 1,94,35,771 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்படி திராவிட மாடல் ஆட்சியில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் உணவுப் பொருள் வழங்கும் கடைகள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் உரிய நேரத்தில் வழங்கி, ஏழை எளிய மக்களின் வறுமையை நீக்கி வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் என்னும் பெருமையை நிலைநாட்டி உள்ளார்கள்.

banner

Related Stories

Related Stories