தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற, தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களிடம் ரூ.2.15 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்தோடு 1946-ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்வி அமைச்சராகத் திகழ்ந்த தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் தமிழ் வளர்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் உயர் குறிக்கோளாகிய கலைக் களஞ்சியத் திட்டத்தை தி.சு. அவினாசிலிங்கம் அவர்கள் இந்திய விடுதலை நாளான 15.08.1947 அன்று அறிவித்தார். தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களும் அவருடைய இந்த அறிவிப்பை மெத்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 20.10.1947-இல் கலைக்களஞ்சியப் பணி தொடங்கப் பெற்றது. அன்றைய துணைவேந்தர் முனைவர் ஆ. இலக்குமணசாமி அவர்கள் தலைமையில் கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கு ‘அறிஞர் குழு’ ஒன்று அமைக்கப்பட்டது. பேராசிரியர் மு.வரதராசன், பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், டி.கே. சிதம்பரநாத முதலியார் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !

கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தியும் பேராசிரியர் கே. சுவாமிநாதனும் இக்குழுவின் செயலாளர்களாக நியமிக்கப் பெற்றனர். ம.ப. பெரியசாமித்தூரன் அவர்கள் கலைக்களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றார். சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சிக் கழக அலுவலகத்திற்குரிய இடத்தைத் தந்து உதவியது.

தமிழில் கலைக்களஞ்சியத்தைப் பத்துத் தொகுதிகளாக கொண்டுவரவேண்டுமென்று திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ 750 பக்கங்களைக் கொண்டதாகவும், பொதுமக்களுக்கும் விளங்கக்கூடிய நடையில், அறிவுத் துறைகள் அனைத்தையும் திறம்பட எடுத்துரைப்பதாகவும், பல்துறை அறிவு பற்றிய பதிவுகளை அகரவரிசைப்படுத்தி, அவற்றைக் கட்டுரை வடிவில் தெளிவாக விளக்குவதாகவும் அமைந்த சிறப்பானதோர் அறிவுக் கருவூலமாகக் கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.

முதல் தொகுப்பு, அதன் பணி தொடங்கி 6 ஆண்டுகட்குப் பின் 1954 -இல், 742 பக்கங்களுடன் வெளிவந்தது. இதற்கு 207 அறிஞர்கள், அவரவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளில் கட்டுரைகள் வழங்கியுள்ளனர். பணி தொய்வின்றித் தொடர்ந்து நடந்தது.1968-இல் 10-ஆம் தொகுதி (இணைப்புத் தொகுதி) வெளியாயிற்று. இவற்றுள் 5-ஆவது தொகுதியை அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது கலைக்களஞ்சிய ஆக்கப்பணிக்குப் பெருமை சேர்த்தது.

இந்திய மொழிகளில் 10 தொகுதிகளைக் கொண்ட விரிவான கலைக்களஞ்சியம் தமிழில் தான் முதன் முதலாக வந்தது என்பது பெருமிதமான செயலாகும். இதைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆக்கபூர்வமான தமிழ்த் தொண்டாகும். இவற்றிற்கு 2240 அறிஞர்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றனர். தமிழ் வளர்ச்சிக்கழகம் வாயிலாக இதுவரை 60 நூல்கள், கலைக்களஞ்சியக் குறுந்தகடு ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !

கன்னித் தமிழ், கணினித் தமிழாகிக் கொண்டிருக்கிறது. மென்தமிழ், மின் தமிழாகிக் கொண்டிருக்கிறது. மின் தமிழாகத் தமிழை முழுவதுமாக மாற்றினால், வரும் தலைமுறைகளுக்கு கருவிகளே தமிழைக் கற்றுக் கொடுக்கும். ஆகவே இப்போது செயற்கை நுண்ணறிவுக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கும் திட்டப் பணிகளைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் மேற்கொள்ளவும், தொடர்ந்து தொய்வின்றி செயல்படவும் உதவிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 15.04.2025-ஆம் நாளன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2025-2026ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் “தமிழ் வளர்ச்சிக் கழகம் தொய்வின்றி செயற்பட ரூபாய் 2 கோடி வைப்புத் தொகை வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயற்படுத்திட, தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடர்ந்து தொய்வின்றி செயல்பட்டு தமிழ் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் 2 கோடி ரூபாய் வைப்புநிதியாக வைத்து அதிலிருந்து வரும் வட்டித்தொகையை மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ் வளர்ச்சிக் கழகம் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், 2 கோடியே 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களிடம் வழங்கினார்.

banner

Related Stories

Related Stories