தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கீழடியில் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வுகளில் பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்து ஏராளமான ஆதாரங்கள் கிடைத்தன. இந்த ஆய்வுகளை மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், தங்கள் ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், இந்த ஆய்வுகள் அறிவியல் பூர்வமாக இல்லை எனக்கூறி ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், கீழடியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வு தொடர்பாக, ஓய்வு பெற்ற ஆய்வாளர் ஸ்ரீராமனிடம் ஒன்றிய அரசு அறிக்கை கேட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு கீழடியில் அகழாய்வு செய்த ஸ்ரீராமன், அங்கு ஒன்றுமே இல்லை என்று தெரிவித்ததால் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவை நியமித்தது. 2014 ஆம் ஆண்டு முதல் 2016 வரை முதற்கட்ட ஆராய்ச்சியிலும், 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை இரண்டாம் கட்ட ஆராய்ச்சிகளை அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு கீழடியில் மேற்கொண்டது.
அந்த குழுவினர், ஆய்வு மேற்கொண்ட பிறகுதான், கீழடியில் தமிழர்கள் பயன்படுத்திய மண்சுவடுகள், குண்டங்கள், கலைப்பொருட்கள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தனது 982 பக்க அகழாய்வு முடிவுகளை அமர்நாத் ராமகிருஷ்ணா ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் அறிவியல் பூர்வமாக இல்லை என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரன் சிங் செகாவத் கூறி வருகிறார். தனது ஆய்வு முடிவுகளை திருத்தம் செய்யுமாறு ஒன்றிய அரசு அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கேட்டது.
ஆனால், கீழடியில் தனது தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வுகள், அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளதால், கண்டுபிடிப்புகளை மாற்றங்கள் செய்ய முடியாது என ஒன்றிய அரசிடம் தெளிவாக தெரிவித்து விட்டார். இருப்பினும், ஒன்றிய பா.ஜ.க. அரசு விடாப்பிடியாக, இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட முடியாது என கூறி வருகிறது.
ஆய்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய அரசு மறுத்து வரும் நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்டு, கீழடியில் ஆய்வு செய்த ஆய்வாளர் ஸ்ரீராமனிடம் கீழடி அகழாய்வு தொடர்பாக ஒன்றிய அரசு அறிக்கை கேட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு கீழடியில் ஒன்றுமே கிடைக்கவில்லை என்று தெரிவத்த ஸ்ரீராமனிடம், ஒன்றிய அரசு தற்போது அறிக்கை கேட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தமிழர் விரோத போக்கைத் துளியும் நியாய உணர்வு இல்லாமல் கையாண்டு வரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எனது வன்மையான கண்டனங்கள். கீழடி விவகாரத்தில் தொடர்ந்து தமிழர்களின் தொன்மையை மூடிமறைக்க உள்நோக்கத்துடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினார்.
கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் எல்லாம், தமிழ்நாடு அரசின் வாயிலாக உலகத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது கீழடி குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மூலம் மூன்றாம் கட்ட அகழாய்வு குறித்து, ஒன்றிய அரசு கருத்துக் கேட்டிருப்பது ஒன்றிய அரசின் உள் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழ் நாட்டு மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கின்றார்கள்” என தெரிவித்துள்ளார்.