தமிழ்நாடு

”ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி.

”ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்” :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆற்றிய உரை:-

ஓரணியில் தமிழ்நாடு - திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி.

ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க வேண்டும்!

கீழடி உண்மைகள் புதைக்கப்படுகிறது; இந்தியைத் திணிக்கிறார்கள்; கல்வி நிதி மறுக்கப்படுகிறது; நீட் மூலம் மாணவர்கள் பலி வாங்கப்படுகிறார்கள்; தொகுதி மறுவரையறை மூலமாக நாடாளுமன்றத்தில் நம் வலிமையைக் குறைக்க சதி நடக்கிறது.

பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என எல்லா வகையிலும் நம் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்கள். ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்!

நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்! இதுதான் தமிழர்களின் தனிக்குணம்; ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான்!

இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் சேர்ப்போம்; அதற்காக ஜுலை 1 தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும்! களத்தில் செயல்படும் நாம் நான்கு படிநிலைகளில் செயல்பட வேண்டும்.

முதலாவது, பயிற்சி!

கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி மூலமாகத் தொகுதிக்கு ஒருவர் என 234 பேர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்ற 234 பேர்கள் மூலமாகத் தொகுதிவாரியாக 68,000 வாக்குச்சாவடிகளில் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்கும் அடுத்த இரண்டு நாட்களில் பயிற்சியளிக்கப்படுகிறது.

இப்பயிற்சிக்கான உதவிகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்து தர வேண்டும். பயிற்சியில் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், வாக்குச்சாவடி முகவர் ஆகியோர் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்!

இரண்டாவது, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடக்கம்!

ஓரணியில் தமிழ்நாடு தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

ஜூலை 1 – சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முறைப்படி நான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அறிவிப்பேன். அடுத்து 38 மாவட்டங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள்/மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்திட வேண்டும்.

ஜூலை 2 – 76 கழக மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதை இளைஞரணி உறுதி செய்திட வேண்டும்.

ஜூலை 3 – தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் எல்லாரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல வேண்டும். கழகச் செயல்வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரைச் செய்வதை உறுதிசெய்திட வேண்டும்.

”ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்” :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மூன்றாவது, வீட்டுக்கு வீடு பரப்புரை– ‘டோர் டூ டோர்’!

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், BLC உறுப்பினர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்! இது கட்டாயம். இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது! இவர்களுடன் கழகத்தின் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் இணைந்து கொள்ள வேண்டும்.

நான்காவதாக, நிறைவு!

ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்களை நடத்திட வேண்டும்.

மேற்சொன்ன நான்கு படிநிலைகளும் சரியாக நடைபெறுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டிய முழுப்பொறுப்பு மாவட்டச் செயலாளர்களுக்கும், மண்டலப் பொறுப்பாளர்களுக்கும், தொகுதி பார்வையாளர்களுக்கும் உரியது.

இப்பரப்புரையில் முக்கியமான அம்சங்கள்-

நம்பர் 1: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களையும் 100% சந்தித்திருக்க வேண்டும். எதிர்கட்சியினர் இல்லங்களுக்கும் நேரில் சென்று பேசிட வேண்டும்.

நம்பர் 2: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டும் இல்லை. இது தமிழ்நாட்டு மக்களை நம் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் ஒரு முன்னெடுப்பு.

நம்பர் 3: வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், BLC உறுப்பினர், கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கொண்ட குழுவாக சேர்ந்துதான் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories