கலைஞரின் கனவு இல்லம் திட்டம் முதன் முதலில் 'கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' என்ற பெயரில் 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும்.
2030-ஆம் ஆண்டிற்குள் 'குடிசையில்லா தமிழ்நாடு' என்ற இலக்கை அடைந்திட 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 'கலைஞரின் கனவு இல்லம் திட்டம்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 3500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கலைஞர் கனவுத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 2711 வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு, இதுவரை 1973 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 738 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 2025-26 ஆம் ஆண்டில் 3500 பயனாளிகளுக்கும் என மொத்தம் 6211 பயனாளிகளுக்கு 217.38 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு 360 சதுர அடியாகும். இதில் ஒரு சமையலறை, ஒரு வரவேற்பறை மற்றும் கழிப்பறை அடங்கும்.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு பூதூர் ஊராட்சியில் 17 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, இதுவரை 15 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று 2025-26ஆம் ஆண்டில் 12 வீடுகள் கட்டுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (25.6.2025) வேலூர் மாவட்டம், பூதூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்து, பயனாளி கங்கா பாய் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, கங்கா பாய் அவர்கள் வயதான காலத்தில் தனக்கு அரசின் உதவித்தொகை கிடைத்து வருவதாகவும், இவ்வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வரும் தனது பேரனும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் உதவித் தொகை பெற்று வருவதாகவும், அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர், அருகிலுள்ள வீட்டில் ஐந்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி முதலமைச்சர் அவர்களிடம், தனது தாய், தந்தை காலையிலேயே வேலைக்கு சென்று விடுவதால் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளியில் காலை சிற்றுண்டி உண்டு வருவதாகவும், இதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வின்போது, நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் :
"கனவுகளை நனவாக்கி, எல்லோருக்கும் எல்லாம் என எல்லோரது மனங்களிலும் மகிழ்ச்சியைத் தருவதே திராவிட மாடல்! கலைஞர் கனவு இல்லம்" என்று குறிப்பிட்டுள்ளார்.